

வாழ்க்கைப் பயணத்தில் நாம் பலரைச் சந்திக்கிறோம். சிலர் கடந்து செல்லும் மேகங்களைப் போலச் சில நிமிடங்கள் மட்டும் வந்து மறைகிறார்கள்; ஆனால், சிலரோ நம் வாழ்க்கையின் திசையை மாற்றி, அழியாத அடையாளத்தைப் பதித்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் செல்லமீனா அக்கா.
நான்கு வருடங்களுக்கு முன் அவரை முதன்முதலாகச் சந்தித்த நாள் இன்னும் என் மனதில் பசுமையாக நிற்கிறது. முகம் முழுக்கப் பரவியிருக்கும் புன்னகை, நெற்றி நிறைய குங்குமம், எளிமையான எதார்த்தமான பேச்சு என அந்த முதல் தருணத்திலேயே அவரது தனித்துவம் என்னை வசீகரித்தது. கள்ளமில்லாத புன்னகைதான் அவரிடம் இருக்கும் ஈர்ப்பு விசை.