கிராமத்து அத்தியாயம் - 17: புழுங்க நெல் விதை

கிராமத்து அத்தியாயம் - 17: புழுங்க நெல் விதை
Updated on
1 min read

பட்டிக்காட்டிலேயே வளர்ந்த மாரிமுத்துவுக்குப் பட்டணத்தில் பெண் எடுத்து அவளோடு பட்டணத்துக்கு அடிக்கடி போய் வந்து பட்டணத்து வாழ்க்கையை மனைவியோடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. இவன் ஆசையைப் புரிந்துகொண்டதுபோல் பட்டணத்திலிருந்து ஒரு வரன் வந்தது. அவள் பெயர் கோகிலா. அவள் பட்டிக்காட்டில் இருக்கும் தோப்புகளையும் தோட்டங்களையும் சினிமாவில் பார்த்துவிட்டு ஒரு பட்டிக்காட்டு மாப்பிள்ளையைத்தான் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டாள். இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைய மாரிமுத்து ஆசை ஆசையாய் தாலிகட்ட கோகிலாவும் மிகவும் சந்தோசத்துடன் மாரிமுத்துவின் கையால் தாலி வாங்கிக்கொண்டாள்.

பட்டிக்காட்டில் வாழவந்த கோகிலாவுக்கு அவள் நினைத்ததுபோல் வாழ்க்கை அமையவில்லை. முதலில் மாரிமுத்துவை அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆடும் மாடும் கோழியுமாக வீடு கசகச வென்று இருந்தது. காலையில் எழுந்து காபி குடித்தே பழக்கப்பட்ட கோகிலாவுக்கு இங்கே எல்லாரும் பழைய சோற்றுத்தண்ணியைக் குடிப்பது முக்கிய மாகப் பிடிக்கவில்லை. தானியங்களை அவிப்பது, குத்துவது என எதுவும் பிடிக்கவில்லை. அதிலும் நெல்லை அவிப்பதென்றால் அந்த வாசனையே அவளுக்குக் குமட்டலாக வந்தது. வயலிலேயே நெல்லாகத்தானே விளைகிறது, பிறகு எதற்காக அதை வேலை மெனக்கெட்டு அவிக்கிறார்கள் என்று நினைத்தவள் மாமியாரிடம் இதைப் பற்றிக் கேட்டாள். மாமியார் ரணகிரியோ, “புழுங்க அரிசி வேணுமில்ல தாயி. அதுக்காகத்தேன் அவிக்காக” என்று சொன் னாள். இவளும், “ஏன் அதுக்கு புழுங்க நெல்லாகவே விதைத்துவிட்டால் என்ன?” என்று கேட்க ரணகிரிக்கோ இப்படி ஒரு மருமகளைக் கொண்டுவந்துவிட்டோமே என்று கோபமும் வருத்தமும் அவள் மனதைத் தாக்க, பேசாமல் போய்விட்டாள்.

ஊரில் அம்மனின் பொங்கலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ரணகிரி ஒரு மூடை நெல் அவித்துக் காயப்போட்டு மகனை அரைக்கச் சொல்ல வேண்டுமென்று நினைத்தவாறு நெல்லைக் கட்டிவைத்துவிட்டுப் பொங்கலுக்காகப் பக்கத்து ஊரிலிருக்கும் தன் சொந்தக்காரர்களைக் கூப்பிடப் போய்விட்டாள். அன்று பார்த்து நல்ல மழை. ஓடையில் வெள்ளம் போனதால் அவளால் திரும்பிவர முடியவில்லை.

மறுநாள் வயல்களில் எல்லாரும் நாற்றுப் பாவவும் விதைக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்த கோகிலா பண்ணை ஆளைக் கூப்பிட்டு வீட்டில் கட்டிவைத்திருக்கும் புழுங்க நெல் மூடையைத் தன் வயலில் கொண்டு போடச் சொன்னாள். அவனும் கொண்டுபோய் போட்டான். பிறகு அவனைப் போகச் சொன்னவள் மூடையை அவிழ்த்து அவ்வளவு நெல்லையும் பொட்டியில் அள்ளி வயல் முழுக்கச் சிதறிவிட்டு வீட்டுக்கு வந்தாள். அப்போதுதான் ஊரிலிருந்து வந்த தன் அத்தையிடம், “அத்தே இனிமே புழுங்கரிசி வேணுமேன்னு நெல்லை அவிக்காதீக. ஏன்னா நம்ம வீட்டுல இருந்த ஒரு மூடை புழுங்க நெல்லைக் கொண்டு போயி வயல் முழுக்க புழுங்கலாவே விதைச்சிட்டேன்” என்று சொல்லவும் ரணகிரி அப்படியே மயங்கி விழுந்தாள்.

(தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in