

வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் திருப்பம் ஏற்படலாம். அது ஒரு சூழ்நிலையாக இருக்கலாம், மனிதர்களாக இருக்கலாம். மும்பை தாராவியைச் சேர்ந்த மலீஷா கார்வாவின் வாழ்க்கையில் நடந்த திருப்பமும் அப்படியானதுதான். அமெரிக்க நடிகரும் இயக்குநருமான ராபர்ட் ஹாஃப்மன் ஒரு பாடல் படப்பிடிப்புக்காக இந்தியா வந்தார். அப்போது கரோனா தொற்றுப் பரவலால் தன் நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலையில் தாராவியில் படப்பிடிப்பை நடத்த முடிவுசெய்தது படக்குழு. அப்போதுதான் மலீஷாவைச் சந்தித்தார்.
கடல்புறத்தையொட்டிய பகுதியில் துணியாலான கூடாரம்தான் மலீஷாவின் வீடு. மலீஷாவுக்கு இளம் வயதிலிருந்தே ஃபேஷன் மாடல் ஆக வேண்டும் என்கிற ஆசை. அதை ராபர்ட்டிடம் கூறினாள். நடனத்திலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட மலீஷாவுக்கு சரியான வழிகாட்டுதல் அளிக்கவும் ஊக்கப்படுத்தவும் யாரும் இல்லாதது ராபர்ட்டை வருத்தப்படச் செய்தது. இந்தியாவில் பெண்களின் அழகு என்பது நிறத்தோடு தொடர்புபடுத்தப்படுவதை அறிந்த ராபர்ட் ஹாஃப்மன், மலீஷாவின் ஒளிப்படத்தையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டார். மலீஷாவின் வெள்ளந்திச் சிரிப்பும் அழகும் ஏழ்மையிலும் அழியாத கனவுகளும் பார்ப்பவர்களை ஈர்த்தன. மலீஷாவுக்காக இணையம் மூலம் நிதி திரட்டினார் ராபர்ட் ஹாஃப்மன்.
ஆயுர்வேத அழகுசாதன நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவன மாடலாக மலீஷாவைத் தேர்ந்தெடுத்தது. தங்களது புதிய அழகுசாதனப் பொருள்களைச் சந்தைப்படுத்த மலீஷாவை மாடலாகப் பயன்படுத்தியது. இதனால் மலீஷாவின் மாடலிங் கனவு நிறைவேறியது. இந்தச் செய்தியை அந்த நிறுவனம் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மலீஷாவின் ரியாக்க்ஷன் வீடியோவுடன் பதிவிட்டது. 14 வயதாகும் மலீஷா, தனது நடிப்பு, மாடலிங் திறமையை இன்ஸ்டகிராம் மூலம் வெளிப்படுத்திவருகிறார். இன்ஸ்டகிராமில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் மலீஷாவைப் பின்தொடர்கின்றனர் (https://shorturl.at/BCTU1). தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வாய்ப்புகள் மலீஷாவைத் தேடி வருகின்றன.
“நான் வளர்ந்து பணக்காரரானால் எளியவர்களுக்கு உதவுவேன். வீடு எப்போதுமே எங்களுக்குப் பிரச்சினைதான். ஆனாலும் தளராமல் தன்னம்பிக்கையுடன் இருப்பேன்” என்று 11 வயதிலேயே தெளிவாகப் பேசியிருக்கிறார் மலீஷா. இவருடைய ரசிகர்கள் என்று பலரும் கூறுவது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக மலீஷா கூறுகிறார்.
- வினோதினி குமார், பயிற்சி இதழாளர்.