

அமைதி மற்றும் ஆயுதக் குறைப்புக்கான சர்வதேசப் பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மே 24ம் அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம் உலக அமைதி மற்றும் ஆயுதங்களற்ற உலகம். சமூக மாற்றத்திற்கான வித்தை காலந்தோறும் சமூகப் போராளிகள் பலர் விதைத்து வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளனர். அப்படியான செயல்களைச் செய்தவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. அவர்களில் சிலர் இவர்கள்:
மலாலா யூசுப்சாய்
இவர் துடிப்பான சமூக ஆர்வலர், கல்வியாளரின் மகள். இளம் வயதிலிருந்தே தன் தந்தையின் வழி நடந்தவர், 11 வயது முதல் தன் தாய்நாடானா பாகிஸ்தானில் தாலிபான்களின் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினார். மலாலா வசித்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் வெடிகுண்டுகளின் மூலம் தகர்க்கப்பட்டன. மேலும், பெண் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதை மீறுபவர்களை மிருகத்தனமான தாக்குதலுக்கு தாலிபான்கள் உள்ளாக்கினர். இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர பிபிசி செய்தி நிறுவனம் மலாலாவை அணுகி வலைப்பதிவுகள் எழுதுமாறு கேட்டுக்கொண்டது. அந்த வலைப்பதிவுகள் வழியாக தாலிபான்களின் சர்வாதிகாரம் மற்றும் கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இப்பதிவுகள் மலாலாவின் பெயரில் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் வெளியாகின.
உலக நாடுகளின் கவனம் இந்தக் கொடூரங்கள் மீது விழவே, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் பார்வை மலாலாவை நோக்கிக் திரும்பியது. 2012ஆம் ஆண்டு தாலிபான்களின் தாக்குதலுக்கு மலாலா ஆளானார். 15 வயதான மலாலா பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது சுடப்பட்ட செய்தி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2015ஆம் ஆண்டிற்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் இருந்து மீண்ட மலாலா, முன்பைவிட திடமாகப் பெண் கல்விக்காகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் குரல்கொடுத்துவருகிறார். 2014இல் 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று, நோபல் பரிசு பெற்றவர்களில் மிக இளமையான என்கிற சாதனையையும் படைத்தார்.
நாதியா மூரத்
ஈராக்கில் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்தவர். இந்தச் சமூகத்தினர் துன்புறுத்தலுக்கும் பாகுபாட்டிற்கும் ஆளாக்கப்பட்டார்கள். 2014இல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பினர் நாதியாவின் கிராமத்தைத் தாக்கிப் பலரைக் கொன்றனர். இதில் நாதியாவின் ஆறு சகோதரர்களும் தாயாரும் அடக்கம். நாதியா உள்பட ஏராளமான இளம்பெண்களைக் கடத்தி பாலியல் அடிமைகளாக விற்றனர். அந்தக் கடுமையான சூழலில் இருந்து தப்பித்து ஜெர்மனியை அடைந்த நாதியா, தனக்கு நடந்ததைப் பற்றி அங்குள்ள ஐ. நா. பாதுகாப்பு அமைப்பில் கூறினார். தன் சமூகத்திற்கு நடந்த கொடுமைகளுக்கும் போர் மற்றும் வன்முறைக்கும் பாலியல்ரீதியான அத்துமீறல்கள் எப்படி ஆயுதமாகின்றன என்பதைப் பதிவுசெய்தார். மத அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் ஆள் கடத்தலுக்கு எதிராகவும் நாதியா தொடர்ந்து போராடிவருகிறார். நாதியாவின் தைரியத்தைப் பாராட்டி 2018இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
பெர்தா வான் சுட்னர்
இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர். மேரி கியூரியைத் தொடர்ந்து அமைதிக்கான இரண்டாம் நோபல் பரிசை 1905இல் பெற்றவர் என்கிற பெருமைக்குரியவர். நாவலாசிரியர், விரிவுரையாளர், அரசியல் ஆர்வலர் எனப் பன்முகம் படைத்த பெர்தா தன் வாழ்நாள் முழுவதும் அமைதிக்காகவும் ஆயுதமற்ற உலகிற்காகவும் வாதாடினார். தன் நாவலான ‘Lay down your Arms!’ மூலம் போரின் இயல்பையும் அதனால் எளியவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கதை வடிவில் எழுதியுள்ளார். பெண்கள் இல்லத்தரசியாக மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் வாழ்வியல் பற்றிய அறிவுடையவர்கள் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தவர். பெர்தாவின் நாவலுக்குப் பழமைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் பொதுமக்கள் பேராதரவு தந்தனர். பெர்தா வான் சுட்னர் தன் தளராத முயற்சியால் ஆஸ்திரிய அமைதி இயக்கம் போன்ற பல அமைப்புகளுக்கு வித்திட்டவர். உடல்நலக் குறைவால் 1914இல் முதல் உலகப்போருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மறைந்தார்.
- வினோதினி குமார், பயிற்சி இதழாளர்.