

உறுதியான மனம் உடைய குழந்தைகள் தோல்வியடைந்தால் ரப்பர் பந்து மாதிரி அதிக வேகத்துடன் எழும்பிச் செயல்பட ஆரம்பிப்பார்கள். வளர்ப்பு சரியாக இருந்தால்தான் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் சரியாகத் தீர்மானிப்பார்கள் குழந்தைகள்.
இப்போது கல்வியை முடித்துவிட்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் கட்டத்தில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு மணம் முடிக்கவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். கல்யாணம் என்று பேச்செடுத்தாலே, “இப்போ வேண்டாம்” என்று கோபப்படலாம் மகன்/மகள். அவர்களில் திருமணத்தை ஒத்திப்போடும் ரகம் சிலர்... வாழ்க்கைத் துணையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழம்புபவர் சிலர்... ஒருவரைக் காதலித்துப் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் சிலர்… மொத்தத்தில் மகனுக்கு/மகளுக்குத் துணையைத் தேடிக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையது என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், அவர்கள் அந்தப் பொறுப்பு தன்னுடையது என்று நினைக்கலாம்.
வெளிப்படையாக அவர்களிடம் பேசிவிடுங்களேன். “திருமணம் செய்துகொள்ள உனக்கு விருப்பம்தானே? உனக்கு எங்கள் வழியில் தேடவேண்டுமா? அல்லது நீயே பார்த்துக்கொள்வாயா? ஒருவர் ஏற்கெனவே உன் மனதில் இருக்கிறாரா?” என்று கேட்டு விடுங்கள். என்ன பதில் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். வளர்க்கும் வரைதான் உங்கள் மகன்/மகள். வளர்ந்தபின் அவர்களைப் பற்றி அனைத்துமே உங்களுக்குத் தெரியாது.
நாம்தான் மாறவேண்டும்
உங்கள் குழந்தைகள் பெரிய படிப்பு படித்து, வெளிநாடுகளுக்குச் சென்று பெரிய வேலைகளில் இருப்பது உங்களுக்குப் பெருமிதம்தான். ஆனால், மாறுபட்ட கலாச்சாரச் சூழலில் அவர்கள் அங்குள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம். இங்கேயே வேலை செய்யும் உங்கள் மகனோ/மகளோ வேறு சாதி/மதம் சார்ந்த ஒருவரை மணக்க விரும்பலாம்; அதிர்ந்து போக வேண்டாம். காலத்துக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பெற்றோருக்காக ஒருவரை மணந்து, அதன் பின் கிடைத்த சுதந்திரத்தை உபயோகித்து, விவாகரத்து கோரி, காதலித்தவரை மணந்த கதைகள் உண்டு. வெளிநாட்டில் ஒருதுணை, இங்கு ஒருதுணை என்று இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு.
லெபனீஸ் கவிஞர், கலீல் ஜிப்ரான் குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு தத்துவத்தை 20ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டுப் போய்விட்டார்:
“அவர்கள் (குழந்தைகள்) உங்கள் வழியாக வருகிறார்கள்; உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் அவர்கள் இருந்தாலும், உங்களுடையவர்கள் அல்ல.
நீங்கள் அன்பைக் கொடுக்கலாம்; ஆனால் எண்ணங்களை அல்ல.
ஏனெனில், அவர்களுக்கு என்று எண்ணங்கள் உண்டு.”
அவர்கள் வாழ்க்கையை நீங்கள் நடத்த முடியாது என்பதை இதைவிட அப்பட்டமாக யாராவது சுட்டிக்காட்ட முடியுமா? அவர்களிடமிருந்து விலகி நிற்பது கடினம்தான். ‘என் மகன்/ என் மகள்’ என்பதைத்தானே ஒவ்வொரு துடிப்பிலும் இதயம் சொல்கிறது.
அந்த உடைமை உணர்வு (ownership) உங்களது மகனின்/மகளின் மணவாழ்க்கையிலும் பாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தும். சாதி/மதம் கடந்த திருமணத்தில் உங்கள் குழந்தை ஆர்வமாக இருந்தால், உணர்வுபூர்வமாக அவனை/ அவளை மிரட்டுவதில் ஆரோக்கியமான பின்விளைவுகள் வருவதில்லை. மருமகளுடன்/ மருமகனுடன் உறவின் ஆரம்பமே கோணலாகிவிடும். உங்களது போராட்டம் தொடரும். அவர்களுடன் வசிப்பது, குழந்தை பிறப்பு, பேரன் - பேத்தியைச் சீராட்டுவது போன்ற பல சந்தர்ப்பங்களில் உறவைக் கெடுத்துக்கொள்ளாது, கையாளப் பழக வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த மருமகன்/மருமகள் என்றாலும் இதே சவால்கள்தான். கனிந்த அன்பினால் வெல்லுங்கள் அவர்களை!
(மனம் திறப்போம்)
- பிருந்தா ஜெயராமன்,
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.