

சிறப்பாகச் செயல்படும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏப்ரல் 21 ஆட்சிப் பணித்துறை நாளை முன்னிட்டு இந்தியப் பிரதமரால் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டு அந்த விருதை தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஆர்த்தி வென்றுள்ளார். தற்போது அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராகப் பணியாற்றிவரும் அவர், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்தபோது ஜல்ஜீவன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ஜல்ஜீவன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு தனிநபருக்குத் தினமும் 55 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது; அது தூய்மையானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்கும் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
“இந்தியாவில் பல மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். தேனியும் காஞ்சிபுரமும் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சேர்த்து 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இருந்தபோதே இந்தத் திட்டத்தைக் கிராமங்களில் தொடங்கி வைத்தார். கரோனா தொற்று காரணமாக பணியில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பேற்றதும் இத்திட்டத்தை 100 சதவீதம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் உறுதியாக இருந்தேன்” என்று சொல்கிறார் ஆர்த்தி.
தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக காஞ்சிபுரம் மாறியதில் ஊரக வளர்ச்சித் துறையின் முழு ஒத்துழைப்பும் காரணம் என ஆர்த்தி குறிப்பிடுகிறார். “காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதால் சிறப்பாகச் செயலாற்ற முடிந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தன்னிறைவு நிறைந்த கிராமங்கள் என்று 274 உள்ளாட்சிகளின் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது . இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தப் பணி தொடர்ந்தது” என்கிறார் ஆர்த்தி.
பெண்களின் பங்களிப்பு
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தந்த ஊராட்சிகளில் ‘கிராம குடிநீர் சுகாதாரக் குழு’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக ஊராட்சி மன்றத் தலைவரை நியமித்தனர். தாங்கள் குடிக்கின்ற தண்ணீர் தரமானதா என்று மக்களையே ஆய்வு செய்யவைத்ததும் நல்ல அணுகுமுறை.
“கிராமக் குடிநீர் சுகாதாரக் குழுவுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு ‘டெஸ்டிங் கிட்’ வழங்கப்பட்டது. தங்கள் கிராமத்தில் உள்ள தண்ணீரில் எவ்வளவு வேதிப்பொருள்கள் உள்ளன, அந்தத் தண்ணீரால் உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா உள்ளிட்ட அனைத்தையும் அந்த டெஸ்டிங் கிட் மூலம் சரிபார்த்துக்கொள்வார்கள். தண்ணீரின் அளவு, தரச் செயல்பாடு, பராமரிப்பு ஆகிய மூன்றும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை கிராமக் குடிநீர் சுகாதாரக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏதேனும் குறையிருந்தால் அவை உடனுக்குடன் சரிசெய்யப்பட்டன. ஒரு சில கிராமங்களில் பெண்கள் தயக்கம் காட்டினர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பங்கு முக்கியமானது எனப் புரியவைத்தோம்” என்று இந்தத் திட்டச் செயல்பாடு குறித்து ஆர்த்தி விளக்கினார்.
“விருது கிடைத்து விட்டதால் எல்லாம் நிறைவடைந்துவிட்டது என்று பொருள் அல்ல. காஞ்சிபுரத்தில் வாக்ரி (நரிக்குறவர்) மக்களுக்கு அரசாங்கம் வீடு கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இடங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால்தான் இது முழுமையடையும். தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதை அளவின்றிப் பயன்படுத்தக் கூடாது. அடுத்த தலைமுறையைக் கருத்தில்கொண்டு நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று சமூக அக்கறையோடு முடிக்கிறார் ஆர்த்தி.