

நேர்த்தியான பயணக் கட்டுரைகளால் தனக்கென ஒரு வாசகர் பரப்பை உருவாக்கியிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சம், திருக்குறளைக் கதைகள் மூலம் சொல்லியிருக்கிறார். அதிகாரத்துக்கு ஒன்று என 133 கதைகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். ‘கதை சொல்லும் குறள்’ என்னும் இந்தப் புத்தகத் தொகுதியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வெளியிட அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார்.
நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, பயணக் கட்டுரைகள் என இதுவரை 14 நூல்களை வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சம், இந்த நூலை எழுதியது மனநிறைவு தந்ததாகக் குறிப்பிடுகிறார். கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு தங்களது ஆண்டு மலருக்குத் திருவள்ளுவர் குறித்த கட்டுரை ஒன்றை மயிலாப்பூர் திருவள்ளுவர் சங்கத்தினர் இவரிடம் கேட்டிருக்கின்றனர். “திருவள்ளுவரையும் திருக்குறளையும் பற்றி புதிதாக நாம் என்ன சொல்லிவிட முடியும் என்று யோசித்தேன். திருவள்ளுவரைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்திலேயே இருக்கிறபோது ஏதாவது புதுமையாக எழுதலாம் எனத் தோன்றியது. திருக்குறளை அடிப்படையாக வைத்துக் கதை எழுதும் எண்ணம் அப்போதுதான் உதித்தது. உடனே, ‘இனிய உளவாக இன்னாத கூறல்.,.’ குறளை மையமாக வைத்து ஒரு கதையும் எழுதிவிட்டேன். அந்தக் கதைக்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும் என்னை அடுத்தடுத்து கதை எழுதத் தூண்டின” எனப் புன்னகைக்கிறார் சாந்தகுமாரி சிவகடாட்சம்.
கலைஞரும் குறளும்
சில நாள்களில் கரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்துவிட, அந்த நாள்களைக் கதை எழுதப் பயன்படுத்திக்கொண்டார். 70 அதிகாரங்களுக்குக் கதை எழுதி முடித்த நிலையில் அவை தினமணியின் ‘மகளிர் மலர்’ இணைப்பில் வெளியாகின. இணைப்பிதழ் நிறுத்தப்பட்டுவிட்டதால் 77 வாரங்களோடு அந்தத் தொடர் நின்றுவிட்டது. பிறகு இந்தக் கதைகளைப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் இவருக்குத் தோன்றியது. “அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் வேகமாக எழுதி முடித்துவிட்டேன். காமத்துப்பால் வந்தபோதுதான் சிறிது தயக்கம் இருந்தது. ஊடல், கூடல் என்று இருக்கிறதே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் எப்படி எழுதுவது என நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கியதும் அந்தத் தயக்கமெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று சொல்லும் இவர், திருக்குறளுக்கும் முதல்வர் குடும்பத்துக்கும் உள்ள தொடர்புதான் புத்தக வெளியீட்டுக்கு முதல்வரின் மனைவியை அழைக்கக் காரணம் என்கிறார்.
“கலைஞர் எழுதிய குறளோவியத்தை மறக்க முடியுமா? வள்ளுவருக்கென்று அவர் கோட்டம் அமைத்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அரசுப் பேருந்துகளில் குறள்கள் எழுதி வைக்கக் காரணமாக இருந்தவரின் குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டது மிகப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. முதல்வரின் மனைவி என்கிற எந்த பந்தாவும் இல்லாத மிக எளிமையான மனுஷி துர்கா ஸ்டாலின். விழா ஒன்றில் என்னைப் பார்த்த அவர், திருவெண்காடு குறித்து நான் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசினார். அது தன் ஊர் எனவும் தன் தங்கையை அந்தக் கட்டுரையைப் படிக்கும்படி சொன்னதாகவும் கூறினார். அன்று பார்த்ததுபோலவே இன்றைக்கும் எளிமையோடு இருக்கிறார்” என்று சொல்கிறார் சாந்தகுமாரி.
நெகிழ வைத்த வாசகர்
இவரது பயணக் கட்டுரைகள் பிரபலமானவை. 2004இல் தன் முதல் பயணக் கட்டுரை வெளியானதாகச் சொல்கிறார். “எகிப்து சென்று திரும்பிய நேரம் அது. பிரமிடுகள், அரசன் துட்டன்காமன், ஸ்பிங்க்ஸ் என்று சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவற்றை மையமாக வைத்து எழுதிய பயணக் கட்டுரை குமுதத்தில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு, தொடர்ந்து எழுத ஊக்குவித்தது. ‘சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்’ என்கிற புத்தகத்துக்குத் தமிழக அரசின் பரிசு முதல் முறை கிடைத்தது. இரண்டாம் முறை, ‘உலகம் சுற்றலாம் வாங்க’ புத்தகத்துக்குக் கிடைத்தது” என்று சொல்லும் இவர், தன் படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்’ நூலை எழுத இரண்டரை ஆண்டுகள் உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகம் மூன்று விருதுகளை பெற்றிருக்கிறது.
தன் பயணக் கட்டுரையைப் படித்துவிட்டுத் தையல் தொழிலாளி ஒருவர் எழுதிய கடிதம் மறக்க முடியாதது என்கிறார் இவர். “கப்பல் பயணத்தைப் பற்றி ‘மிதக்கும் இந்திரபுரி’ என எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டுத்தான் அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருந்தார். ‘என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் என்னால் அப்படியொரு பயணம் மேற்கொள்ள முடியாது. ஆனால், பாதகம் ஏதுமில்லை. உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு அந்தக் கப்பலில் நான் பயணம் செய்துவிட்டேன்’ என்று எழுதியிருந்தார். வாசகர்களின் இதுபோன்ற ஆத்மார்த்த கருத்துகள் ஆயிரம் விருதுகளுக்குச் சமம்” என நெகிழ்கிறார் சாந்தகுமாரி. ‘கதை சொல்லும் குறள்’ புத்தகம் மூலம் வரும் வருமானத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். தற்போது எகிப்தையும் காவேரிபூம்பட்டினத்தையும் இணைத்து வரலாற்று நாவல் ஒன்றை இவர் எழுதிவருகிறார்.