

வருடத்துக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால், குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை விட்டாலும் எனக்கு அலுவலகம் உண்டு என்பதால் அந்த விருப்பம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வேலை நிமித்தமாக கேரளா செல்ல வேண்டியிருந்ததால் அதையே சுற்றுலாவாக்கிவிடலாம் என்று நினைத்தேன். கணவரும் குழந்தைகளும் உடன் வர முடியாத நிலையில் தனிப் பயணமா எனப் பயந்தேன். ஆனால், அது எவ்வளவு ஆனந்தமானது என அதை அனுபவித்தபோதுதான் புரிந்தது.
பெரியாறு ஆற்றங்கரை ஓரமாகத்தான் எங்களது விடுதி அமைந்திருந்தது. காலை ஏழு மணிக்கு விடுதிக்குச் சென்றபோது மேகமூட்டமாக இருந்தது. காலை அலுவலகக் கூட்டம் என்பதால் அவசரமாகப் புறப்பட்டேன். சூடான ஆப்பமும் முட்டை மசாலாவும் வயிற்றை நிறைக்க பெரியாறு கண்ணை நிறைத்தது. மாலை கூட்டம் முடிந்ததும் நண்பர்களோடு சேர்ந்து அருகில் இருந்த மணப்புரம் சிவன் கோயிலுக்குச் சென்றேன். செல்லும் வழியெங்கும் நிறைந்திருந்த பசுமை மனதுக்கு இதமாக இருந்தது. தனித் தனி வீடுகள், வீட்டைச் சுற்றி மரங்கள், மரங்களில் படர்ந்திருந்த மிளகுக் கொடிகள் என ரம்மியமாக இருந்தது. இரவு உணவாக வாத்து முட்டைத் தோசை.
மறுநாள் காலை கண்விழித்தபோது மழை பெய்து ஓய்ந்து பூந்தூறலாகத் தூறிக்கொண்டிருந்தது. விடுதியைச் சுற்றியிருந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் காலாற நடந்தேன். மழையில் நனைந்த மலர்களும் வாழைத் தோட்டமும் பார்க்கப் பார்க்கச் சலிக்கவேயில்லை. ஆற்றோரப் படிக்கட்டில் அமர்ந்தபடி நீரோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலம் அப்படியே உறைந்துவிடாதா என்றிருந்தது. குளிருக்கு இதமாகக் கட்டஞ்சாயா அருந்திவிட்டு அலுவலகப் பணியில் மூழ்கினேன். அன்று இரவு ரயில் என்பதால் மாலையோடு எல்லாம் முடிந்துவிட்டது. மீண்டும் சிறு பயணம். வழியில் சூடாக சாயா.
பிளாஸ்டிக் குப்பை இல்லாத ஆற்றங்கரையும் சாலைகளும் இந்தப் பயணத்தில் என்னைக் கவர்ந்தன. பெயர் தெரியாத பறவைகளும் பூக்களும் வாழ்த்துப் பாடி வழியனுப்பின. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை எண்ணி ரசித்தபடியே ஆலுவா ரயில் நிலையம் நோக்கிச் சென்றேன். சென்னை எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது.
- தேவி, சென்னை.