

‘ஷோலே’ திரைப்படத்தில் அமிதாப்பச்சன் வாசித்த கையடக்க வாத்தியம் மவுத்-ஆர்கன் என்று அழைக்கப்படும் ஹார்மோனிகா. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாகி, ஆப்ரகாம் லிங்கன், சேகு வேரா போன்ற தலைவர்களாலும் வாசிக்கப்பட்ட வாத்தியம்.
இந்தியாவில் வழக்கொழிந்த வாத்தியங்களில் ஒன்றான ஹார்மோனிகாவைச் சிறு வயதிலிருந்தே நேசிக்கவும் வாசிக்கவும் தொடங்கிவிட்டவர் பபிதா பாசு. கொல்கத்தாவில் இருக்கும் இவர், இன்றைக்கு வட கிழக்காசியாவிலேயே பெயர் சொல்லும் ஹார்மோனிகா வாத்தியக் கலைஞராக பிரகாசித்துக்கொண்டிருப்பவர். ஹார்மோனிகா வாத்திய இசையை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.
இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பபிதா பாசுவின் சகோதரர்கள் தபேலா கலைஞர்கள். சகோதரிகள் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள். வாத்தியக் கலைஞராவதற்கு இயல்பிலேயே ஆர்வமில்லாத வங்காளப் பெண்களிலிருந்து விலகி, ஹார்மோனிகா வாத்தியத்தைப் புகழ்பெற்ற ஹார்மோனிகா மேதை ராணா தத்தாவிடம் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
இந்திய ஹார்மோனிகா அமைப்பின் சார்பாக ரவீந்திர சங்கீதம், திரையிசை, மேற்கத்திய இசை என மூன்று பிரிவுகளிலும் சிறந்த கலைஞருக்கான விருதைப் பெற்றிருப்பவர். ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு பிறந்த நாளுக்காக, தாகூரின் புகழ்பெற்ற பாடல்களை ஹார்மோனிகாவில் வாசித்து ஒரு இசை ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர, கன்ஃபுளுயன்ஸ், ஹார்மோனிகா ஆஃபரிங் போன்ற இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசை மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் பபிதா, விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ‘லட்டு’ என்னும் திரைப்படத்துக்குப் பின்னணி இசை வழங்கியிருக்கிறார். வங்காளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான பிஸ்வஜித் சர்க்கார் இயக்கத்தில் தயாராகும் ‘ஜமா’ (இந்தப் படத்தின் நாயகன் ஹார்மோனிகா வாசிக்கும் கலைஞனாம்) என்னும் பன்மொழிப் படத்திற்குக் குரு ராணா தத்தாவுடன் இணைந்து இசை அமைக்கிறார் பபிதா பாசு.
மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் இவர். உதடுகளால் ஹார்மோனிகாவில் இவர் எழுதும் கவிதைகளைக் கேட்டாலும் மயக்கம் வரும்!