

வ
யதான அரசருக்குக் காய்ச்சல், தலைவலி வந்தால்கூட அவருக்கு அது கடைசி வைத்தியமாகத்தான் இருக்குமாம். மன்னர் இறந்துவிட்டார் என அறிவிக்காமல், ‘அரசர் நீடூழி வாழ்க!’ என உள்ளிருந்தபடியே வைத்தியர் குரல் எழுப்பினால் அடுத்த புதிய மன்னருக்கு மகுடம் சூட்டுங்கள் என அர்த்தமாம். முடியரசிலிருந்து குடியரசுவரை அதிகாரம் மிக்க பதவிகள் இப்படித்தான் இருந்துவந்திருக்கின்றன.
பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனப் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாகவும் அவற்றை ஓய்வுபெற்ற நீதியரசர் மூலம் விசாரிக்கும்படியும் அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ‘ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் தலைவி நான்’ என அடிக்கடி அவர் பெருமையோடு கர்ஜித்ததைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதுதான் அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என அப்போதும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது என இப்போதும் அமைச்சர்கள் மாறி மாறிப் பேசிவருகிறார்கள்.
மரணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே முதல்வருக்கு வழங்கியிருந்த இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு ஏன் விலக்கிக்கொண்டது என்கிற பொதுமக்களின் எளிய கேள்விக்கு இன்னமும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. வார்டுவரை சென்றதாகச் சொல்லும் ஆளுநரோ அவர் சுய நினை வோடு இருந்தாரா இல்லையா என்பதைக் குறிப்பிடாமல் மிகக் கவனமாக அதைத் தவிர்த்துவிட்டு அறிக்கை கொடுத்ததுடன் முடித்துக்கொண்டார். ‘வாய்மையே வெல்லும்’ என்ற அரசு முத்திரை பதித்த வாகனங்களில் சென்றவர்கள், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, “ஆம், பொய்தான் சொன்னோம்” என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்லிவருகிறார்கள். இப்போது சொல்வதாவது உண்மையா என்கிற மக்களின் கேள்விக்குப் பதில் இல்லை.
பல இளம்பெண்களின் சந்தேகத்துக்கிடமான மரணங்களின்போது விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டபோதெல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிப்பார் என உத்தரவுபோட்ட அவரது மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியே வந்துசேர்வார் என அவர் நினைத்திருக்கமாட்டார். கைவலிக்க மேசையைத் தட்டோ தட்டு என்று தட்டிக்கொண்டிருந்த அமைச்சர்களும் டயருக்கடியில் விழுந்தாலும் பரவாயில்லை என கார் முன்னால் பாய்ந்து தொழுதவர்களும் வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள்போல் தரையில் உருண்டு வணங்கிய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் ஆளுக்கொன்றாகப் பேசுவார்கள் எனவும் அவர் நினைத்திருக்கமாட்டார்.
பதவிக்கான அடிதடி, சண்டை, சச்சரவுகள் என்பவை முதலாளித்துவ அரசியலின் இயற்கையான குணம்தான் என்றாலும் இறந்த பிறகும் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தலாம் எனச் சிந்திப்பது ஆணாதிக்க அமைப்பின் குரூரம் அல்லது அதிகாரப் பசியாளர்கள் நடத்தும் சதுரங்க வேட்டை என்றே பலரும் கருதுகிறார்கள். விலைவாசி உயர்வு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் கொள்கைத் தோல்வியைத் திசை மாற்றும் அரசியல் தந்திரங்களுக்கான பகடைக் காயாகவும் இந்த மரணம் கருதப்படுகிறது.
கட்டமைக்கப்பட்ட பொய்கள், அவற்றை வெற்றிபெறச் செய்யும் காய் நகர்த்தல்கள் என்பவை இன்றைய நவீன முதலாளித்துவ அரசியலின் தவிர்க்க முடியாத பரமபத விளையாட்டுகள். அவற்றை எதிர்க்கும் போராட்டத்தை ஜனநாயக சக்திகளோடு இணைந்துதான் பெண்களும் நடத்த முடியும். ஆட்சி அதிகாரங்களில் மதவெறி அரசியல் இந்தியாவெங்கும் பரவிவருவது பெண் உரிமைக்குப் பெரும் தீங்கையே ஏற்படுத்தும். பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலையும் அதைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் தீவிரத் தன்மையை உணர்வதும் அதற்கெதிராக ஒன்றுதிரள்வதுமே இன்றைய தேவை.
அரசியல் கட்சி அமைப்புகள் தவிர பெண்களின் போராட்ட உணர்வை, தலைமைத்துவத்தை, சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அவர்களுக்கான பயிற்சியை பெண்கள் அமைப்புகள்தான் வழங்க முடியும். தனிமனித சாதனையோ பெருமையோ இந்தச் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாது. அரசு என்பது நிர்வாகங்களின் கூட்டமைப்பு. அரசாங்கம் என்பது மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பெரும் கூட்டமைப்பு. ஆகவே, தனித்த பெண்கள் அமைப்புகளும் அதன் செயல்பாடுகளும் கூட்டமைப்பாகக் களம்காணும்போது அவை பலம் பொருந்தியவையாக அமையும். பெண்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை அது நிச்சயம் தோல்வி அடையச்செய்யும்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான அனைத்துக் களப் போராட்டங்களிலும் பெண்களே நிறைந்திருந்தனர். சாதி ஆணவக் கொலைகள் இளம் பெண்களின் உயிரையும் உரிமைகளையும் பறித்துவருவது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதற்கு எதிரான சட்டத்தை வலியுறுத்தும் போராட்டங்களை அனைத்துப் பெண்கள் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பெண்கள் மோசமாகவும் இழிவாகவும் சித்தரிக்கப்படுகிறபோது அதன் மீதான பெண்களின் புகார்கள் கண்டுகொள்ளப்படாத நிலையே நீடிக்கிறது. இதற்கெனத் தனிச் சட்டம் தேவை என்பதையே நிலைமை உணர்த்துகிறது.
அரசு சார்பாக மாணவிகளுக்கு வழங்கிவந்த இலவச நாப்கின் திட்டத்தைச் சத்தமின்றித் தமிழக அரசு முடக்கிவிட்டது. ஜி.எஸ்.டி. காரணமாக நாப்கின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து இளம்பெண்களின் ஆரோக்கியம் சீர்கெடக்கூடிய நிலையும் உருவாகியுள்ளது. தனியார் நிறுவனங்களில் பெண்களின் உழைப்புக்கு மிக மலிவான ஊதியம் நிர்ணயிக்கப்படுவதை மாற்றுகிற ஊதியச் சட்டமும் காலத்தின் தேவை. குறைந்தபட்ச கல்விகூட இல்லாத, விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிற மலைவாழ், கிராமப்புறப் பெண்களுக்குத் தனியான கல்வி அறிவுத் திட்டம் மற்றும் ஆண், பெண்ணுக்கான சமத்துவக் கூலிச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்காகப் பெண்கள் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். அதற்கான விரிவான மேடைகள் உருவாக்கப்பட வேண்டும்.
‘அதிகம் பேசாதே; அடக்கமாக இரு’ என்கிற சோப்பு விளம்பரம் மனுவின் குரலை ஓங்கி ஒலிக்கிறது. அழுக்கு நிறைந்த அந்த சோப்பின் அழுக்கைப் போக்குவது யார்? ‘பீப் சாங்’ ஆபாசமென்றால் அதைவிட ஆபாசமானவை பெண்ணைப் பற்றிய பழமைவாதக் கருத்துகளே. அவற்றை வலுவாக எதிர்த்திட வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பெண்கள் அமைப்புகளும் தங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் புதுப்பித்துக்கொள்வதும் பெண்ணுரிமை அரசியலை முன்னெடுப்பதுமே ஆகச் சிறந்த அரசியல் பங்கேற்பாக இருக்கும்!
- (நிறைவடைந்தது)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு:balabharathi.ka@gmail.com