

வீட்டில் சுட்டிப் பெண்ணாக வளர்ந்துவந்தாள் ஸ்ருதி. அப்பாவுடன் பைக்கில் செல்வதற்கு அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் பூப்படைந்துவிட்ட பிறகு அப்பாவிடமிருந்து முன்பு கிடைத்த பாசமும் அரவணைப்பும் குறைந்துவிட்டதோ என்ற சந்தேகம் ஸ்ருதிக்கு. தான் அப்பாவுக்கு முக்கியமில்லை என்ற மனநிலைக்கு அவள் வந்துவிட்டாள். இதனால் அப்பாவிடம் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும், எதிர்த்துப் பேசுவதுமாக இருந்தாள். ஸ்ருதியின் திடீர் மாற்றம் அவளுடைய அப்பாவுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இந்த திடீர் மாற்றம் காரணமாக என்னிடம் ஸ்ருதியை அழைத்துவந்தார் அவருடைய அப்பா.
ஸ்ருதியிடம் பேசினேன். அவளது மஞ்சள் நீராட்டு விழாவன்று புடவை கட்டிவிட்டிருக்கிறார்கள். முதன்முறையாகச் சேலை கட்டி இருந்ததால் தன் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் ஸ்ருதியின் பாட்டி, “நீ இப்போ பெரிய பெண்ணாகிட்ட. இனிமே அப்பா மடியில எல்லாம் உட்காரக் கூடாது” எனச் சொல்லியிருக்கிறார். ஸ்ருதியின் அப்பாவும், “பாட்டி சொல்வதைக் கேள்” என்று சொல்லிவிட்டார். அதுவரை தன்னை மடியில் வைத்துக் கொஞ்சியும் அன்பாக அரவணைத்தும் அன்பு செலுத்திய அப்பா இப்படிச் சொல்விட்டாரே என்கிற வருத்தமே அப்பாவின் மேல் கோபமாக மாறக் காரணம்.
“இந்த விஷயத்தில் தவறு யார் மேல்?” என ஸ்ருதியின் அப்பாவிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தை தன் மடியில் வந்து உட்காரும்போது அவள் தவறுதலாக உணரவோ அசௌகரியமாகவோ ஏதாவது நடந்துவிடப்போகிறது என்கிற பயத்தின் காரணமாக அதற்கு மறுத்துவிட்டதாக அவர் சொன்னார். “இந்தச் சமூகம்தான் என்னை இப்படி நினைக்கவைத்தது” என்றார். அப்போது நான், “இது சமூகத்தின் தவறே தவிர உங்கள் தவறில்லை. நீங்கள் உங்கள் மகளை எப்போதும்போல் கொஞ்சுவதில் தவறில்லை. அவளை அன்பாக அணைப்பதும் தோளில் தட்டிக்கொடுப்பதும் நல்ல விஷயம்தான்” என்றேன்.
அதேபோல் பத்தாம் வகுப்பு படிக்கும் ராகுல் அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்தான். ஆசிரியர் கண்டித்ததால் தலைவலி வேறு. வீட்டுக்கு வந்ததும் அம்மா மடியில் கொஞ்ச நேரம் தலைவைத்துப் படுத்து உறங்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. ஆனால் வீட்டில் நுழைந்தவுடன், “முதலில் போய் குளித்துவிட்டு வா” என அம்மா உத்தரவிட்டார் . ராகுலும் குளித்துவிட்டு வந்து, டி.வி. பார்த்துக்கொண்டிருந்த அம்மாவின் மடியில் உட்கார்ந்தான். அதற்கு உடனே அவனுடைய அம்மா, “ஏண்டா இப்படி எருமை மாடு மாதிரி உட்கார்ற” என்று திட்டி அவனைக் கீழ இறக்கிவிட்டார். அம்மாவின் அந்தக் கடினமான வார்த்தை ராகுலை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. அதன் பின்னர் முன்புபோல் அம்மாவிடம் சகஜமாகப் பேசாமல், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தான். தன்னிடம் எதுவும் பகிர்ந்துகொள்ளாமல் எப்போதும் ஒரு அறையில் முடங்கி இருக்கும் அவனை நினைத்து அவனுடைய அம்மா கீதாவுக்குக் கவலை அதிகரித்தது. என்னிடம் ராகுலை அழைத்து வந்தபோது அவன் சொன்னவை: “என்னுடைய அம்மா என்னை எருமைமாடு எனத் திட்டிவிட்டார்கள். அப்போ எனக்கு ரொம்பத் தலைவலி. கொஞ்ச நேரம் அம்மா மடியில் உட்கார்ந்தா நல்லா இருக்கும்னுதான் அவங்க மடியில் உட்கார்ந்தேன். ஆனால் அதற்குப்போய் என்னை அவங்க எருமை மாடுன்னு திட்டிட்டாங்க. அதன் பிறகு நான் எப்போது உட்கார நினைத்தாலும் அந்தத் திட்டுதான் எனக்கு நினைவு வருது” என ஏக்கத்தோடு சொன்னான் ராகுல்.
இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்களிடத்திலும் தவறு உள்ளது. பத்து வயதுவரை குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர் அவர்களின் வளரிளம் பருவத்தில் விலகத் தொடங்கிவிடுகின்றனர். பெண் குழந்தைகள் பூப்படைவதுபோல், ஆண் குழந்தைகளும் பூப்படைவார்கள். அதனுடைய வெளிப்பாடு உடலின் வளர்ச்சியில் தெரியும். இந்தச் சமயத்தில் எட்டு, ஒன்பது வயதில் குழந்தைகள்போல் பார்த்த அவர்களைப் 11 வயதுக்கு
மேல் தன்னிச்சையாக இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கான தகுதியும், ஒரு குடும்பத்தை நடத்தும் பொறுப்பும் வந்துவிட்டதாகக் கருதி அவர்களிடம் முன்பு காட்டிய பாசத்தையும் அரவணைப்பையும் குறைத்துக்கொள்கிறார்கள். ஆண் பிள்ளைகளும் சரி, பெண் பிள்ளைகளும் சரி உடலளவில் அவர்கள் வளர்ந்துவிட்டாலும் மனதளவில் குழந்தைத்தனம் இருந்துகொண்டுதான் இருக்கும். குழந்தைகள் வளர்ந்து எவ்வளவு பெரிய ஆளாக ஆனாலும், தங்கள் பெற்றோரிடம் அவர்கள் எப்போதும் குழந்தைகள் போல்தான் உணர்வார்கள்.
(வளர்ப்போம் வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com