

பெண்ணின் தலைமையில் இனக் குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்தபோது ஆடையில் பாலினப் பாகுபாடு கிடையாது. கடுங்குளிரிலும் வெப்பத்திலும் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே ஆடைகள் அன்றைக்குத் தேவைப் பட்டன. சொத்துடைமைச் சமூகத்தில்தான் பெண்கள் சிறிது சிறிதாகப் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் பட்சமாக ஆக்கப் பட்டார்கள். பெண்களை அடிமைப்படுத்த ஆதிக்கச் சமூகம் கையிலெடுத்தவற்றில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடை என்பது ஒழுக்கத்தின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடையாளமாகத் தந்திரமாகத் திரிக்கப்பட்டதும் அப்போதுதான் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியை மைய மாக வைத்துக்கொண்டு, ஆடை உருவான வரலாறு தொடங்கி சமகால ஆடைகள் வரை பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சிந்துஜா.
வரலாற்று ஆவணங்கள், குகை ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றின் உதவியோடு பண்டைய ஆடை வரலாற்றை விவரித்திருப்பதோடு எப்படியெல்லாம் ஆடைகள் உருவாக்கப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார். பாவாடை என்பது இருபாலருக்கும் பொதுவான உடையாக இருந்தது என்பதைச் சொல்வதோடு, புடவை கட்டிக்கொள்வதும் பாவாடை அணிவதும் ஆண்மைக்கு இழுக்கு என்று சொல்வதன்வாயிலாகப் பெண்கள் அணியும் உடைகள் கேலிக்குரியவையாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
புடவை, ரவிக்கை, பர்தா, ஹிஜாப், ஜீன்ஸ், சட்டைப் பொத்தான்கள், நைட்டி, பிரா, சானிட்டரி நாப்கின்கள் எனப் பெண்கள் பயன்படுத்தும் ஆடைகள் - அவை சார்ந்த பொருள்களில் நுட்பமாகப் புகுத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனக் குறியீடுகள் இந்நூலில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன. ஜீன்ஸ் குறித்து எழுதுகிறபோது நம் அரசியலர்கள் சிலரது ‘அறிவார்ந்த’ கருத்துகளையும் ‘நாடகக் காதல்’ வசனத்தையும் சேர்த்திருப்பது சமகாலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் சௌகரியத்துக்கு ஏற்ப ஆடை அணியவிடாமல் தடுப்பதில் உள்ள அரசியலைப் புரிந்துகொண்டால் ஆடை என்பது ஆடை மட்டுமல்ல என்பது விளங்கும்.