

முத்தாணிக்கு வயது முப்பது இருக்கும். அவளுக்கு வேலை செய்வது என்றால் மலையை சுமப்பது மாதிரி மலைப்பாய் இருக்கும். அப்படி ஒரு சோம்பேறி. அவளுக்கு அம்மா, அப்பா, மாமன், மாமியார் என்று யாருமில்லை. புருசன் மட்டும் இருக்கிறான். அவனும் கெடைக்காரர்களோடு சேர்ந்து காடா, தேசமாய் ஆடு மேய்க்கப் போய்விடுவான். மூன்று, நான்கு மாதத்துக்கொருமுறை இரண்டு படி கம்போ, சோளமோ மேல் துண்டில் முடிந்து கொண்டு வந்து கொடுப்பான். அதோடு ஒரு நாள் ராத்திரி மட்டும் தங்கிவிட்டு மறுநாள் நான்கு ஆள் கஞ்சியை ஒரே நேரத்தில் குடித்துவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுவிடுவான். இவள் எப்போதும்போல் காடுகளுக்கு வேலைக்குப் போய் சாப்பிடுவாள்.
வேலை செய்யும்போது அது களை வெட்டு என்றாலும் சரி வேறு எந்த வேலை என்றாலும் சரி ஆட்களோடு சரிசமமாய் வேலை செய்ய மாட்டாள். பின் தங்கியே இருப்பாள். காட்டுக்காரிக்கும் இவளோடு நிறை பிடித்தவர்களுக்கும் இவள் மீது எரிச்சலாய் இருக்கும்.
யாராவது, “என்ன முத்தாணி இப்படி பிந்திக்கிடந் தேன்னா எப்ப கஞ்சிக்குப் போறது, வீட்டுக்கு எப்ப போறது?” என்று சத்தம் போடுவார்கள். உடனே இவளும் “என்னைப் பொறுத்துக்கோங்க. ரெண்டு மாசமா தலைக்கு ஊத்தல. அதேன் ஒரு வடியா கெறக்கமும், தல சுத்தலுமா இருக்கு” என்று இவள் சொல்லி முடிக்கு முன்பே வேலை செய்து கொண்டிருக்கும் எல்லாரும் சந்தோஷப்படுவார்கள். பெரிய மனுசிகள் யாராவது “அடி முத்தாணி என் தங்கம், என் தாயி உன் புருசனும், நீயும் மூலைக்கு ஒருவரா பிரிஞ்சி அல்லாக்க கிடக்கீக. நல்ல வேள நீ ஒரு புள்ளய பெறு. நானு வந்து பேறுகாலம் பாத்து நல்லத, பொல்லத காய்ச்சி ஊத்துதேன். நமக்கு ஆத்தா, அய்யா இல்லையே நம்ம என்ன செய்வோமின்னு நீ ஒன்னும் மயங்காதே, கலங்காதே” என்பாள்.
இவளும் நமக்கு இதுதானே வேணுமென்று ஏதோ பேருக்கு வேலை செய்து சொணங்கி, சொணங்கி பொழுதைக் கழிப்பாள். ஒரு மாதம் வரை இப்படியே போய்விடும். பிறகு ஒரு நாள் வேலை செய்யும்போது பாதமுத்து கேட்டாள்.
ஏன் தாயி முத்தாணி உடம்பு நல்லா இருக்கில்ல. உனக்காகவே இன்னைக்கு மோர் விட்டு கரச்ச கூழும், புளிவிட்டு அவிச்ச மிளகாயும் கொண்டாந்திருக்கேன். வா வந்து உரப்பும், உப்புமா நாக்கு செழிக்கக் குடி. இப்பவும் புள்ள தங்கி நாலு மாசமாவுமில்ல" என்பாள் ஆசையும் அக்கறையுமாக.
முத்தாணி உடனே அழுகையான குரலில், “எங்க சின்னாத்தா நானும் அப்படித்தேன் பவுசா நெனச்சிருந் தேன்” என்று சொல்லும் முன்பே பாதமுத்து பதறுவாள்.
“அடிப்பாவி மவளே என்னடி ஆச்சி?”
“பத்து நாளைக்கு முன்னால பிஞ்சையில பிடுங்கின தக்காளி சொமய கடாப் பொட்டியோடு வடுவப்பட்டி சந்தைக்குக் கொண்டு போனனா. வழியில இருக்க ‘சொம தாங்கிக் கல்லுல’ சத்த இறக்கிவச்சி பெறவு தூக்குனேன் பாரு. வவுத்துக்குள்ள இருக்க புள்ள பையோட விழுந்திருச்சி. உன்கிட்ட இதச் சொன்னா வவுத்தெரிச்சப்படுவேன்னு சொல்லாம விட்டுட்டேன்” என்பாள். பாதமுத்து மட்டுமல்ல அங்கே இருந்த எல்லோரும் ‘அய்யோ’ என்று வவுத்தெரிச்சல் பட்டார்கள். பிறகு ‘காய்’ விழுந்த உடம்பு ஒரு மாதத்துக்கு பய்ய பய்ய வேலைய செய்யி என்று முத்தாணியிடம் சொல்ல அவளும் ‘என் மேல வார சாமிக்கு இதுதானே வேண்டுமென்று’ நின்றபடியே பொழுதைக் கழிப்பாள்.
இப்படியே இரண்டு, மூன்று தடவை தான் மாசமாக இருப்பதாகவும் விறகு கட்டு தூக்கும் போதும், தொழி மிதிக்கும் போதும் புள்ளை பையோடு விழுந்துவிட்டதாகவும் சொல்வாள். அவளுக்குப் பிடிக்காத தனலட்சுமி ஒரு நாள் பத்துப் பேர் கருதறுத்துக் கொண்டு இருக்கையில் “இந்த முத்தாணி போட்ட பையத்தேன் எடுத்துட்டுப் போயி இன்னைக்கு கேப்ப (கேழ்வரகு) அரச்சிட்டு வந்தேன். இன்னும் எங்க வீட்டுல இவ போட்ட பை பத்து பை வரைக்கும் கிடக்கு. உங்கள்ல யாருக்காவது வேண்ணாலும் வாங்கிட்டுப் போங்க”ன்னு சொல்ல காடு முழுக்கச் சிரிப்பு அலைமோதியது.
(தொடரும்)
- பாரததேவி
கட்டுரையாளர், எழுத்தாளர்.
arunskr@gmail.com