

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் தெரிவு உண்டு. பெற்றோர் விஷயத்தில் அது கிடையாது; அமைந்ததுதான். நம்மை மட்டும் நம்பி வந்த குழந்தையைப் பொறுப்பான பெற்றோராக வளர்க்க வேண்டாமா? அதற்கு இதோ சில குறிப்புகள்:
குழந்தை வளர்ப்பில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை தேவை என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றின் அடிப்படையில் சில குறிப்புகளைப் பார்ப்போம். வளர்க்கும் பாணிகள் நான்கு - கறாரான வளர்ப்பு, செல்ல வளர்ப்பு, இணக்கமற்ற வளர்ப்பு, சமத்துவ வளர்ப்பு. சுருங்கச் சொன்னாலே அவற்றின் சாராம்சம் புரியும்.
கறாரான வளர்ப்பு ராணுவ ஆட்சியைப் போல கட்டுப்பாடுகள்; மீறினால் தண்டனை. பெற்றோர் சதா குழந்தையின் குறைகளையே சுட்டிக்காட்டுவதால், குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாது வளரக்கூடும். பயத்தால் உணர்வுகளை வெளியே காட்டாமல் அடக்கிக்கொள்வார்கள். நட்புறவுகளைச் சரியாகக் கையாளத் தெரியாது. தனக் காகப் பெற்றோர்களே தீர்மானங்கள் எடுப்பதால் வளர்ந்தபின் தீர்மானங்கள் எடுக்கக் குழம்புவார்கள். எதிலுமே தன்னார்வம் இருக்காது. ஏனெ னில், பெற்றோர் பின்னாலிருந்து முடுக்கித்தானே பழக்கம்.
செல்ல வளர்ப்பு குழந்தை அழுதால் பெற்றோருக்குத் தாங்காது. வீட்டில் குழந்தை களது ராஜ்ஜியம்தான். கேட்பது கிடைக்கும். வளர, வளர பெற்றோர், குழந்தைக்குப் பயப்படுவார்கள். வெளியே குழந்தையின் ‘பவர்’ செல்லுபடியாகாததால் நட்புறவில் பிரச்சினைகள் வரும். பெற்றோர் எல்லாம் செய்துகொடுப்பதால், பொறுப்பற்ற குழந்தையாக வளர்வான்/ள். சுயநலத்தோடு வளர்வதால், குழந்தைக்குத் தனது தேவைகள்தான் முக்கியம். தீர்மானங்கள்? குழந்தை எடுப்பவைதான். பின்விளைவை அனுபவிக்கும்போதுதான் தீர்மானம் தவறு என்று புரியும்.
இணக்கமற்ற வளர்ப்பு இந்தப் பாணியில் பெற்றோருக்குள் பல பிரச்சினைகள். குழந்தையை நெறிப்படுத்த முற்படும்போதே விவாதம் ஏற்பட்டு, கணவன்-மனைவிக்கு உள்ள பிரச்சினைகளுக்குப் போய்விடுவார்கள். இதில் மகனை நெறிப்படுத்துவது எப்படி நடக்கும்? குழந்தைக்குப் பெற்றோரிடமிருந்து அரவணைப்பு கிடைக்காததால், அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க, அவர்கள் கோபப்படுமாறு நடந்துகொள்வான்/ள். வீட்டில் அன்பு கிடைக்காததால், வெளியே தேட ஆரம்பிப்பாள்/ன். பெற்றோர் மீது உள்ள கோபத்தால், எதிர்மறை சகாக்களுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்லாது, போதைப் பொருள்களை உபயோகித்துச் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடக்கூடும். காவல் துறையினர் தலையிடும் அளவுக்கு நிலைமை முற்றிப்போகவும்கூடும்.
சமத்துவ வளர்ப்பு இந்தப் பாணியில் தண்டனையே கிடையாது. மாறாக, தான் செய்யும் செயல்களின் பின்விளைவுகளைச் சந்தித்த பின் அவன்/ள் தானாக மாறுவான்/ள்.பெற்றோர் கோபப்படாமல், கனிவோடு ஆனால் உறுதியாக உரையாடுவதால், குழந்தையும் அதைப் பின்பற்றும். இருவரும் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பேசுவதால் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்படும். மற்ற உறவுகளையும் அவன்/ள் திறம்படக் கையாள்வான்/ள். குழந்தையின் நிறைகளைப் பாராட்டி, ஊக்குவிப்பதால், தன்னார்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவான். குழந்தை சம்பந்தப்பட்ட தீர்மானங்களை அவனுடன் கலந்துதான் எடுப்பார்கள். பிரச்சினைகளை எதிர்நோக்க வழிகாட்டி குழந்தையையே தீர்க்க வைப்பார்கள். பெற்றோர் பொறுமையாகக் கையாள்வதால் குழந்தையிடம் மாற்றம் வரும்.
நடைமுறையிலோ தாய், தந்தையின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தவிர ஒரு பெற்றோர் எப்போதும் ஒரே பாணியில் இருக்க மாட்டார். இதனால் குழந்தைக்கு, ‘அன்னைக்குச் சரின்னாங்களே; இன்னிக்கு ஏன் முடியாதுங்கறாங்க?’ என்கிற குழப்பம் வரும். இது குழந்தை வளர்ப்பில் இடையூறுகளை ஏற்படுத்தும். எப்போதும் சீராக இருவரும் சமத்துவப் பாணியில் இருப்பது சிறந்தது. மனபலம் குறைவான குழந்தைகளுக்குத் தவறான வளர்ப்புமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பெற்றோர் தங்களது வளர்ப்பு முறையைச் சரியானவிதத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும்.
(மனம் திறப்போம்)
- பிருந்தா ஜெயராமன்
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.