

நம்மைச் சார்ந்தவர்களின் பாதிப்பால் தான் நமது பழக்கவழக்கங்கள் அமைகின்றன. என் அப்பா, அண்ணா அன்பழகன் வாசக எழுத்தாளர். அம்மா மல்லிகா, தமிழாசிரியர். வீடு முழுவதும் பரவிக் கிடக்கும் பருவ இதழ்கள், புத்தகங் கள் மீது தவழ்ந்துதான் வளர்ந்தேன்.
நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது அப்பா, சிறுவர் மணி, கோகுலம், சுட்டி விகடன் இதழ்களை அறிமுகப்படுத்தினார். பிடித்துப் போய் தொடர்ந்து வாசித்தேன். சுட்டி விகடனில் சிறந்த வாசகர் கடிதங்களுக்குப் புத்தகப் பரிசு உண்டு. அன்னை தெரசா, மண்டேலா, ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் பரிசாக வாங்கி வாசித்தேன்.
வாரம் ஒருமுறை பள்ளி நூலகத்தில் புத்தகமெடுத்து அங்கேயே படித்து கருத்துச் சொல்லும் ஒரு வகுப்பு உண்டு. அங்கு நிறைய புத்தகம் வாசித் தோம். அதில் என்னைக் கவர்ந்தவை விவேகானந்தர் நூல்கள். பத்தாம் வகுப்பில் கரோனா ஊரடங்கு தொடங்க, அம்மா சிபாரிசில் நான் விரும்பி வாசித்த முதல் நாவல் பொன்னியின் செல்வன். அப்பாவின் சேகரிப்பில் இருந்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கடல் புறா, யவனராணி, ஒரு புளியமரத்தின் கதை ஆகியவற்றைப் படித்து ருசித்தேன்.
நூலகத்திலிருந்து அப்பா எடுத்துவரும் புத்தகங்களைப் புரட்டியபோது எனக்குப் பயணக் கட்டுரைகளில் ஈடுபாடு மிகுந்தது. ஜெய மோகனின் ‘நூறு நிலங்களின் மலை’, பொன் மகாலிங்கத்தின் ‘அங்கோர்வாட்’, நக்கீரனின் ‘காடோடி’ போன்றவை என் மனம் கவர்ந்தவற்றில் சில.
கரோனா இரண்டாம் அலையில் நூலகங்கள் மூடப்பட்டு, சில பத்திரிகைகளும் வெளிவராமல் வெளியே செல்லவும் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த கொடுமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தோம். அப்போதுதான் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், தனக்குப் பொன்னாடை, பூமாலை அணிவிக்காமல் புத்தகங்களைப் பரிசளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்படியானால் முதல்வரிடம் நிறைய புத்தகங்கள் இருக்குமே, படிப்பதற்கு அவரிடம் புத்தகங்கள் கேட்டால் என்ன எனத் தோன்றியது. அப்பாவின் வழிகாட்டுதல்படி முதல்வருக்குக் கடிதம் எழுதினேன். என்ன ஆச்சரியம்! அடுத்த வாரமே முதல்வரின் உதவியாளர்கள் மூலம் என் வீட்டுக்கே புத்தகங்கள் வந்து சேர்ந்தன. ‘என்னிடம் யாரும் புத்தகங்கள் கேட்டதேயில்லை. பள்ளி மாணவியான தங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்’ என்று முதல்வரிடமிருந்து எனக் கொரு பாராட்டுக் கடிதமும் வந்தது. நமது முதல்வர் மூலம் கலைஞரின் குறளோவியம், பொன்னர் சங்கர் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நான் பரிசாகப் பெற்ற நூல்களை வைத்தே வீட்டில் சிறு நூலகத்தை அமைத்துவிட்டேன்.
பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்த பிறகு ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள ஆங்கில நாவல்களை வாசிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியதால் ஹாரி பாட்டர் வரிசை, டான் பிரவுன் என வாசித்தேன். சிலை கடத்தல் குறித்து எஸ். விஜய குமார் எழுதிய ‘சிலைத் திருடன்’, மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ புத்தகங்கள் என்னைப் பிரமிக்க வைத்தன.
தற்போது கல்லூரி விடுமுறையில் கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’, சு. வெங்கடேசனின் ‘வேள் பாரி’ ஆகியவற்றை வாசித்துவிட வேண்டுமென நினைத்திருக்கிறேன். புத்தகம் என்பது அறிவு வளர்ச்சிக்கான உரம், வாசிப்பு என்பது ஒரு தியானம் என்று உணர்ந்ததால், ‘அப்பாவைப் போலப் புத்தகப் புழுவாகிவிட்டாயே’ என்று உறவினர்கள் கேலி செய்யும்போது எனக்குப் பெருமையாக இருக்கும்.
- அ. யாழினிபர்வதம், சென்னை.