

இந்தியப் பெண்களின் தன்னம்பிக்கை முகம் சுதா மூர்த்தி. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி என்பதைத் தாண்டி அவருக்கு எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர், தொழிலதிபர் எனப் பல முகங்கள் இருக்கின்றன. 70 வயதைக் கடந்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறார். சமூக சேவைக்காக அண்மையில் பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சுதா மூர்த்தியை பெங்களூருவில் சந்தித்தோம். “வணக்கம். வாங்க.. வாங்க” எனத் தமிழிலே வரவேற்றவருடன் உரையாடியதிலிருந்து..
ஒரு வியாழக்கிழமையில் தகரக்கொட்டகையில் ஆரம்பித்த இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்று உலகம் முழுக்க வியாபித்திருக்கிறது. அதேபோல நீங்களும் உங்கள் கணவர் நாராயணமூர்த்தியும் உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களாக வளர்ந்திருக்கிறீர்கள்? இதையெல்லாம் நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதா?
வடகர்நாடகாவின் மிக எளிய குடும்பத்தில் பிறந்த எங்களால் இவ்வளவு தூரம் உயர முடிந்திருக் கிறது என நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியாது. தன்னம்பிக்கையையும் அறிவையும் மூலாதாரமாகக் கொண்டு கடுமையாக உழைத்தோம். எங்கள் கண்முன்னே இன்ஃபோசிஸ் விருட்சமாகவளர்ந்தது. இன்று கோடிக் கணக்கானோர் அதனால் பயனடைந்திருக்கி றார்கள். வாழ்க்கையும் வசதியும் எவ்வளவு மாறி இருந்தாலும், நானும் நாராயணமூர்த்தியும் அதே பழைய நபர்கள் தான். எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. அதே அன்பு, அதே புரிதல், அதே விட்டுக் கொடுத்தல், பரஸ்பர மரியாதை இன்றும் தொடர்கிறது.
தமிழில் அழகாகப் பேசுகிறீர்களே. எப்படித் தமிழ் கற்றுக்கொண்டீர்கள்?
எனக்குத் தமிழ் நன்றாகவே தெரியும். சரளமாகப் பேச முடியாவிட்டாலும் தெளிவாகப் புரிந்துகொள்வேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். இங்கு மல்லேஸ்வரம் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராக இருந்த தீர்த்தா என்பவர்தான் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். எனது நூல்களின் மொழிபெயர்ப்புப் பிரதியை நானே வாசிக்கிறேன். தமிழ் தெரிந்ததால்தான், சுனாமி பேரிடர் நேரத்தில் என்னால் தமிழக மக்களுக்கு அதிகமாக உதவ முடிந்தது. பேருந்தில் ஊர் பெயர் படிக்கத் தெரிந்ததால்தான் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்த கடற்கரை கிராமங்களுக்குப் பயணம் செய்தது சுலபமாக இருந்தது.
தமிழில் வெளிவந்த உங்களது நூல்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
பொதுவாக, தமிழர்கள் நன்றாக வாசிக்கக் கூடியவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது நூல்கள் வெளியான பிறகுதான், அது உண்மை என தெரிந்துகொண்டேன். டாலர் மருமகள், அழியாத ரேகைகள், கடன் உள்பட 20க்கும் மேற்பட்ட நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. சில நூல்களைப் பத்திரிகையாளர் பி.ஆரோக்கியவேல் மொழிப்பெயர்த்தார். விமான நிலையங்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது நிறைய பேர் ஓடிவந்து, நெகிழ்ச்சியாகத் தங்களின் வாசிப்பனுபவத்தைக் கூறி இருக்கின்றனர்.
உங்களின் எழுத்துக்களில் தாத்தா, பாட்டி பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக் கிறீர்கள்? ‘என் பாட்டிக்கு, நான் எவ்வாறு எழுத, படிக்கக் கற்றுக்கொடுத்தேன்?’ என நூலே எழுதி இருக்கிறீர்களே?
இன்று என் வாழ்வில் இருக்கும் சில முக்கியமான நற்குணங்கள் எல்லாம் என் தாய்வழி தாத்தா, பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். என் தாத்தா ஹனுமந்த் ராவ் ரங்கா ராவ். ஆசிரியரான அவர் எனக்கு ஏழு வயதிலே நூல்களை அறிமுகப்படுத்தி, நிறைய வாசிக்க வைத்தார். என் பாட்டி கிருஷ்ணா நிறைய கதைகளையும் பாடல்களையும் சொல்லிக் கொடுத்தார். குடும்பத்தை எப்படிச் சுமுகமாக நடத்த வேண்டும், உறவுகளை எப்படிப் பேண வேண்டும், பணத்தைச் சேமிப்பதன் அவசியம், மரபான சமையல் முறையைக் கைவிடாமல் இருப்பது, தன்னம்பிக்கை, தைரியம் என எல்லாமே அவர் கற்றுக்கொடுத்தவைதான். அவரது தாக்கம் என் வாழ்வில் இன்னும் இருக்கிறது. அதனாலே அவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். என் பேத்திக்கு, அதாவது ரிஷி சுனக் - அக்ஷதாவின் மகளுக்கு அவர் பெயரைச் சூட்டினேன். லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணாவும் என் பாட்டியைப் போலவே புத்திசாலி.
‘டாலர் மருமகள்’ என நூலெழுதி இருக்கிறீர்கள். உங்களின் ‘டாலர் மருமகன்’ பற்றிச் சொல்லுங்களேன்?
என் மருமகள் அபர்ணா கேரள தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இட்லி, பொங்கல், சாம்பார் எனப் பிரமாதமாகச் சமைப்பார். அவர் போடும் பெரிய கோலங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் இருந்தே ரங்கோலி போடக் கற்றுகொண்டேன். என் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பெருமைமிகு பிரதமர். மிக இளம்வயதிலேயே இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். அக்ஷதா அவரைக் கல்லூரியில் பார்த்த நாளில் இருந்து துளித் துளியாகச் செதுக்கி இருக்கிறார். குறிப்பாகக் கலாச்சாரம், ஆன்மிகம், உணவுப் பழக்கம் ஆகியவற்றில் ரிஷியை நிறைய மாற்றியுள்ளார். நான் என் கணவரைத் தொழிலதிபர் ஆக்கியதைப் போல, என் மகள் ரிஷியைப் பிரதமராக ஆக்கியிருக்கிறார்.
டாட்டா குழுமத்தின் முதல் பெண் பொறியாளர் நீங்கள். அதில் இணைந்த கதையே சினிமாவைப் போல இருக்கிறதே?
நான் பெங்களூருவில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தபோது செய்தித்தாளில் டாட்டா நிறுவனத்தின் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில் ‘ஆண் பொறியாளர்கள் மட்டும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ எனக் கோரியிருந்தார்கள். எனக்கு அந்த விளம்பரத் தைப் பார்த்ததுமே கோபம் வந்தது. டாட்டா நிறுவனத்துக்குக் கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் யாருக்கு அனுப்புவது எனத் தெரியவில்லை. எனவே, டாட்டா குழுமத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி.டாட்டாவுக்கு அஞ்சல் அட்டையிலே நான்கு வரிகளில் கடிதம் எழுதினேன். அவர் எனது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துக்கொண்டு டாட்டா குழுமத்தின் முதல் பெண் பொறியாளராக என்னை இணைத்துக்கொண்டார். அங்கு எனக்கு வழங்கப்பட்ட பணிகளை, ஆண் பொறியாளர்களைவிடச் சிறப்பாகச் செய்தேன். அதனால் ஜே.ஆர்.டி.டாட்டா ஒரு பணியாளர்கள் ஆண்டுக் கூட்டத்தில், “பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துவிட்டீர்கள்” எனப் பாராட்டினார்.
சமீபத்தில் எந்த நூலை வாசித்தீர்கள். புதிதாக என்ன கற்றுக்கொண்டீர்கள்?
அண்மையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலைக் கன்னடத்தில் வாசித்தேன். முதலில் சுருக்கமான வடிவத்தை வாசித்தேன். அது மிகவும் பிடித்திருந்ததால் விரிவான பதிப்புகளை வாங்கி வாசித்தேன். எனது வாசிப்பு அனுபவத்தை என் தமிழ் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன். வாசிக்கும்போது மனதில் விரிந்த காட்சிகளைத் திரையில் பார்த்தபோது சிலிர்ப்பாக இருந்தது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தையும் பார்க்கக் காத்திருக்கிறேன். சோழர்களின் வரலாறு குறித்து விரிவாக வாசிக்க விரும்புகிறேன். தற்போது தொல்லியல் துறை சார்ந்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால் தொல்லியல் துறை சார்ந்த நுட்பங்களை வாசிக்கிறேன். நிறைய இடங்களுக்குப் பயணிக்கிறேன். கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லவிருக்கிறேன். கீழடிக்கும் போக விரும்புகிறேன். இப்போது வெயில் அதிகமாக இருப்பதால், செப்டம்பர், அக்டோபருக்குப் பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறேன்.
நிறைய பேருக்கு நீங்கள் பெரிய இன்ஸ்பிரேஷன். இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
என்னுடைய நூல்களைவிட நான் பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. தன்னம்பிக்கை, பெண்ணியம், உறவுகள், கலாச்சாரம் குறித்து நான் பேசிய வீடியோக்களை நிறைய பேர் பார்த்து, அதைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். இந்த தலைமுறையினர் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் பயங்கர வேகம் இருக்கிறது. செல்போன், ஆன்லைன் விளையாட்டு, அரட்டை ஆகியவற்றுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு வாசிப்பு, புதியவற்றைக் கற்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய சிக்கன வாழ்க்கை முறை, உணவுக் கலாச்சாரம், உறவுகளைப் பேணும் முறை ஆகியவற்றைக் கைவிடாமல் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் விட்டுவிடக் கூடாது.