

பவுனுக்கு நாப்பது வயதாகிவிட்டது. ஆனால், எப்போதும் விரக்தி அடைந்தவள்போல் உம்மென்று இருப்பாள். எதற்கும் சிரிக்க மாட்டாள். யாரிடமும் பேசவும் மாட்டாள். கேட்ட கேள்விக்கு மட்டும் ‘ம்...ம்’ என்று உம் கொட்டுவாள். தினமும் வேலைக்குப் போவாள். போகிற இடத்தில் வெறும் உம்மண்ணா மூஞ்சிதான். அவளுக்கு இருபது வயதிலேயே கல்யாணம் முடிந்தது. ஆறு மாதம் அவள் கூட இருந்த புருசன் அதன் பிறகு எப்பப் பார்த்தாலும் ‘எளவு’ எடுத்த வீடு மாதிரி மொகத்தத் தூக்கி வச்சிக்கிட்டுப் பேசக்கூட மாட்டேங்கிறவ கூட என்னால குடும்பம் நடத்த முடியாது என்று சொல்லிவிட்டு அவன் போயே போய்விட்டான்.
இவள் வயதுக்காரர்கள் எல்லாம் காட்டில் கலகலவென்று வேலை செய்துகொண்டிருக்கும்போது இவள் மட்டும் பேசாமல் வேலை செய்வாள். அதுவும் சுறுசுறுப்பாகவும் செய்ய மாட்டாள். அவளிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் கோசலை, “ஏண்டி எப்பப் பாத்தாலும் இப்படி இருக்கே. நல்லா சிரிச்சிப் பேசிப் பழகி இரேன். நீ இப்படி இருக்கப்போயிதேன் உன் புருசன் உன்ன விட்டுட்டுப் போயிட்டான். சரி அவன் போய்த் தொலையட்டும் உன்கூட இருக்க உன் அய்யா, அம்மா எல்லார் கூடயும் அண்ணன், தம்பின்னு அம்புட்டுப் பேர் கூடவும் நல்லா சந்தோசமா பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கலாமில்ல” என்று சொன்னதும் பவுனுக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
“நீங்க யாரும் எனக்குப் புத்திமதி சொல்ல வேண்டாம். வார தை மாசம் வரைக்குந்தேன் நான் உசுரோட இருப்பேன். அதுவும் எதுக்கின்னா தைப் பொங்கலுக்கு நெல்லுச்சோறு, சோளத்தோசை, கருப்பட்டிப் பணியாரம், பொங்கச் சோறு, கரும்பு, பனங்கெழங்கு இம்புட்டும் கிடைக்கும். சாவது சாவுதோம் இதையெல்லாம் தின்னுட்டுச் சாவோமின்னுதேன் உசுரோட இருக்கேன்” என்றாள். அப்போது நெல்லுச்சோறு என்பது கிடைக்காத பொருளாயிருந்தது.
இவள் சொன்னதைக் கேட்டதும் எல்லாருக்கும் பயம் வந்துவிட்டது. தை மாசம் பிறந்து முடிந்த உடனே பவுனுக்குக் காவல் இருப்பதைப் போல அவள் போகுமிடம், வார இடமெல்லாம் அவளறியாமல் காவந்து (கண்காணிப்பு) பண்ணிக்கொண்டே இருந்தார்கள். இரண்டொருவர், “பொங்க கழிக்கவும் சாவணுமின்னு சொன்னயாமே. அப்படியெல்லாம் செத்துராத தாயி பாவம் உன்னப் பெத்தவக என்னம்மா கெடந்து துடிப்பாக?” என்று புத்திமதி சொல்ல, “நானு இருந்துதேன் என்ன செய்யப்போறேன். சாவத்தேன் போறேன்" என்று சொல்லிவிட்டாள். இவள் சொன்னதைக் கேட்டு, பெற்றவர்கள் மனம் பதறிக்கிடக்க சொந்தம் பந்தமெல்லாம் இவளை நினைத்தே மருகிக்கிடந்தார்கள்.
ஆனாலும் பவுனோ தை மாதம் முடிந்து மாசி பிறந்த பிறகும் சாகவில்லை. ஒரு நாள் கோசலை அவளிடம், “நல்ல வேளை பவுனு நீ சாவல. எங்கே நீ செத்துறப் போறயோ என்னமோன்னு நாங்க பதறிக் கெடந்தோம் தெரியுமா?” என்று அங்கலாய்ப்போடு கேட்க, “நானு சாவத்தேன் போறேன். ஆனா தை மாத்தைக்குப் பெறவு மாசியும் பங்குனியும்தான ஊட இருக்கு. பெறவு சித்திரை பெறந்திருமில்ல சித்திரைக்கு நெல்லுச்சோறு காய்ச்சுவாக ‘பானக்கரம்’ கரைப்பாக அதக் குடிச்சிட்டு சாவப்போறேன்" என்கவும் கோசலை வயடைத்துப்போனாள். அன்னைல இருந்து பவுனுக்குப் போக்காளிங்கற பேரு அமைஞ்சிருச்சி. எதையாவது செய்யறேன்னு போக்கு காட்டிட்டு, கடேசிவரை செய்யாமலே இருக்கவங்களைப் போக்காளின்னு சொல்லுவாங்க.
(தொடரும்)
- பாரதேதவி
arunskr@gmail.com
கட்டுரையாளர், எழுத்தாளர்.