

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது என் வாசிப்பு தொடங்கியது. பழைய புத்தகக் கடையிலிருந்து அப்பா நிறைய பாக்கெட் நாவல்களை வாங்கி வருவார். நான் முதன் முதலில் படிக்க ஆரம்பித்தது இந்த நாவல்களைத்தான். இந்திரா சௌந்தர்ராஜனும் ராஜேஷ்குமாரும் பாலகுமாரனும் அப்படிதான் அறிமுகமானார்கள். அப்பா பின்நாள்களில் நூலகங்களிருந்தும் புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்கத் தொடங்கினார். அதிலிருந்து நானும் என் சகோதரியும் கல்கி, சுஜாதா போன்றோரை வாசித்தோம்.
புத்தகம் மட்டுமல்ல, செய்தித்தாள் வாசிப்பதுகூட எங்கள் வீட்டில் சிறு கொண்டாட்டம்போல இருக்கும். ஞாற்றுக்கிழமை என்றாலே அப்பா குறைந்தது மூன்று செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவார். கூடவே சுடச்சுட வடையும். ‘வார இதழ்களும் வடையும்’நல்ல இணை! பாதி நாளைப் படித்தே கழிப்போம். அப்போதெல்லாம் ‘ஆனந்த விகடன்’ வாங்கினால், அப்பா யார் கையில் முதலில் கொடுக்கிறார் என்று எனக்கும் என் சகோதரிக்கும் இடையே சண்டையே நடக்கும். யார் கையில் முதலில் கிடைக்கிறதோ அவர் படித்துவிட்டுத் தரும்வரை மற்றொருவர் காத்திருந்து படிப்போம். இன்று சாப்பிட உட்கார்ந்தால் டிவியோ மொபைலோ தேவைப்படுவதைப் போல அப்போது புத்தகம் படித்துக்கொண்டு சாப்பிடுவதுண்டு. இதுவும் அப்பாவின் பழக்கம். தன் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கான தீர்வாகவும், ஆற்றுப்படுத்தும் நண்பனாகவும் அவர் புத்தகங்களை மிக விரும்பினார். வாசிப்பு அவர் எங்களுக்கு அளித்த வரம். அப்பா, அவர் படித்த புத்தகங்களில் வந்த செய்திகள், தொடர்கள், கதைகள் போன்றவற்றைத் தொகுத்து பைண்டிங் போட்டு வைத்திருந்தார். இப்போது அவர் இல்லை. ஆனால், அவர் விட்டுச் சென்ற புத்தகங்கள் இருக்கின்றன.
வாசிப்பு வெறும் பொழுதுபோக்காக நில்லாமல், என் அப்பாவின் மூலம் தமிழை, அறிவை, எழுத்தை, தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தது. பள்ளிக் காலங்களில் பேச்சுப் போட்டிகளில் தைரியமாகப் பங்கு கொண்டு மேடையேற உதவியது. திருமணத்துக்குப் பிறகு, வாசிப்பெல்லாம் விட்டுப்போய்விட்டது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ‘இந்து தமிழ்’ படிக்க ஆரம்பித்த பிறகுதான் அதன் தரமும் தமிழும் மறுபடி வாசிக்கத் தூண்டியது. பால்யத்தில் நான் படித்துச் சிரித்த பாக்கியம் ராமசாமியின் சீதா பாட்டியை என் மகனுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். சுஜாதாவையும் கல்கியையும் படித்து நம்மைப் போலவே அவனும் குதூகலிக்க வேண்டும். வெறும் முகநூலில் மட்டும் பொழுதைக் கழிக்காமல், பிடித்த புத்தகத்தை நூலகங்களில் தேடி எடுத்து அமைதியாக அமர்ந்து படித்து மூழ்கிப் போகும் அனுபவத்தை இனி வரும் தலைமுறையும் விரும்ப வேண்டும்.
- லக்ஷ்மி ராம்குமார், சென்னை.