

கல்வி, பொதுவாக வாசிப்பு என்பது பெரும்பாலும் பால்மயப்பட்டதாக (gendered) இருந்த இருண்ட கடந்த காலத்தை நம் வரலாறுகள் தெரிவிக்கின்றன. ‘குல மாதர்’களின் அடக்கத்துக்கும் கௌரவத்துக்கும் கல்வியும் நூல்களும் பங்கம் விளைவித்துவிடும் என்கிற அச்சத்தை விதைத்த சமூகப் போக்குகளைக் குறித்து காலனிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பெண் எழுத, படிக்கக் கற்றுக்கொண்டால் அவள் தன் கணவனை இழந்துவிடுவாள் என்பதைப் போன்ற மூட நம்பிக்கைகள் மலிந்திருந்த நிலையை ஆவணங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். 19ஆம் நூற்றாண்டு தொடங்கி இந்தியத் துணைக்கண்டத்தில் நடந்த பெண் கல்வி சார்ந்த விவாதங்கள் முறைசார் கல்வியைக் குறித்தவை மட்டுமல்ல; பெண்களின் அறிவு சார்ந்த திறன்களை மதத்தின் வாயிலாக, சமூகக் கட்டுப்பாடுகளின் வாயிலாக ஒடுக்குவதைப் பற்றிய விமர்சனங்களாகவும் அவை வெளிப்பட்டன.
அறிவால் விளையும் வலிமை
சமூகச் சீர்திருத்தவாதிகளில் முன்னோடியான ராஜாராம் மோகன்ராய் பரிந்துரைத்த பெண் கல்வி குறித்து 19ஆம் நூற்றாண்டில் நடந்த விவாதங்கள் இதற்குச் சான்று. கல்வியின் பெருமையை வலியுறுத்தித் தமிழ்நாட்டு மாதர்களை விளித்து பாரதியார் எழுதும் கட்டுரையொன்றிலும் ‘அறிவின் வலிமையே வலிமை’ என்றும் ‘அறிவினால் உயர்ந்தோர்களை அடிமைகளாகப் பிறர் நடத்துவது சாத்தியப்படாது’ என்றும் எழுதியிருக்கிறார்.
அறிவு வலிமையை வளர்த்தெடுப்பதில் புத்தக வாசிப்புக்கு இணையானது வேறு எதுவுமில்லை. சொல்லப்போனால், முறைசார் கல்வி ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு தொழில், வேலை சார்ந்த வருமானத்துக்கோ குடும்ப அந்தஸ்துக்கோ திருமணப் பேரத்துக்கோ உதவலாம். ஆனால், அத்தகைய கல்வியைத் தாண்டி ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பரந்த வாசிப்பு, அதன் விளைவால் வரும் அறிவு வலிமை, எப்போது வேண்டுமானாலும் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் தாக்கக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தரக்கூடியது. சிலசமயம் தைரியத்தையும் நிதானத்தையும் கூடத்தான்.
கேள்வி கேட்கும் அறிவு
அறிவு வலிமையை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக அல்லது உணர்வுகளுக்கு மேல் வைத்து நான் கூறவில்லை. சொல்லப்போனால் நல்ல புத்தகங்கள் ஒருவருக்குக் கொடுக்கக்கூடிய மனத் தொந்தரவு சாதாரணமானதல்ல. அஸர் நஃபீஸி, ‘லோலிட்டாவை தெஹ்ரானில் வாசித்தல்’ (Reading Lolita in Tehran) என்கிற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். அந்த நூலில் அவர் ஜெர்மானியச் சிந்தனையாளர் தியடோர் அடோர்னாவின் ‘ஒழுக்கத்தின் மிக உயரிய வடிவம் என்பது ஒருவர் தன்னுடைய வீட்டில் சௌகரியமாக உணராதிருப்பது’ என்கிற கருத்தைத் தன்னுடைய மாணவிகளுக்கு விளக்கியபோது புத்தக வாசிப்பைச் சுட்டிக்காட்டி அதைத் தெளிவுபடுத்துகிறார். அவரது விளக்கம் பெண்களுக்கு எதிரான கடுமையான பாலின ஒடுக்குமுறைகள் மேலெழுந்த ஈரானியப் புரட்சி நடந்த காலகட்டத்தில் இலக்கியப் புனைவுகளை வாசிப்பதன் அவசியம் குறித்த பார்வையை வெளிப்படுத்துவது. கதைகளின் தொகை நூலான ‘ஆயிரத்தொரு இரவுகள்’ நூலுடன் மேற்கத்திய நவீன எழுத்தாளர்களான விளாடிமீர் நபகோவ், ஹென்றி ஜேம்ஸ், ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட், சால் பெல்லோ முதலியவர்களின் படைப்புகளைத் தன் மாணவிகளுடன் சேர்ந்து வாசிக்கும்போது, நஃபீஸி அவர்களிடம் “மேன்மையான கற்பனை கொண்ட புனைவுகள் உன் வீட்டில் உன்னை அந்நியராக்கிவிடும்; சாதாரணமாக எடுத்துக்கொண்டவற்றை நம்மைக் கேள்வி கேட்க வைக்கும்; மாறவே மாறாது என்று நினைத்த சம்பிரதாயங்களையும் எதிர்பார்ப்புகளையும் கேள்வி கேட்கும்” என விளக்குகிறார். சிறந்த புனைவாக்கங்களை வாசிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய வேறு கண்களுடன் சுற்றிலும் நடப்பவற்றைப் பார்க்கச் சொல்லித் தன் மாணவிகளிடம் அவர் கூறுகிறார். இங்கே வாசிப்பு என்பது கிடைத்த புத்தகத்தில் கண்ணையோட்டுவதல்ல; மாறாக நல்ல எழுத்தை மனதில்கொண்டு நிறுத்துதல் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
விலகி நின்று பார்க்கும் கண்
பெண்களைப் பொறுத்தவரை வாசிப்பு கொடையளிக்கிற உருவகரீதியான ‘வேறு கண்கள்’ அவர்களது அகத்துக்கும் புறத்துக்குமான இருவகை இடைமுகங்களில் செயல்படுகின்றன. ஒன்று, வீட்டுக்கும் புறவெளிகளுக்குமான இடைமுகம். வீடு என்பதே பெண் என்கிற பொதுப் புரிதல் இன்றளவும் நிலவும் நம் சூழலில் இந்த இடைமுகம் பெண்கள் எனும்போது கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆண்-பெண் என்கிற பால் இருமையையும் சாதியையும் மீளுருவாக்கும் குடும்பத்துக்கும் குடும்பத்தின் ஊடாகவும் அதைத் தாண்டியும் செயல்படும் அரசியல், பொருளாதார, சமூகப் போக்குகளுக்குமான இடைமுகம் இது. பார்த்துப் பார்த்துப் பழகிய தன்னுடைய சொந்தக் கண்களைக் கழற்றிவிட்டு ‘வேறு கண்களை’ அணியும்போது, குடும்பத்தை அதற்குள்ளிருந்து பார்க்காமல், நகர்ந்து விலகி அதன் வாயிற்படியில் நின்று விலகல் தருகிற தெளிவுடன் குடும்பத்தைப் பார்ப்பதற்கும் பரிசீலிப்பதற்கும் இது உதவுகிறது. அதேநேரத்தில் இந்த இடைமுகத்தில் நின்று புறத்தை நோக்கும்போது, புறத்தில் நடக்கிற எல்லாவற்றையும் தன் வீட்டின், தன் குடும்பத்தின், தன் சாதியின் தரப்பிலிருந்து நோக்குவதன் மூலம் அவரால் விடுபட முடிகிறது. அப்போது முன்பைவிடவும் சீர்ப்பட்ட பரந்த பார்வை அவருக்குச் சாத்தியமாகிறது.
புத்தகப் பரப்பில் வீழ்வது
இரண்டாவது இடைமுகம் ஒருவருடைய மனம் எனும் அகத்துக்கும் புறத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற மனிதர்களுக்கும் இடையில் இருப்பது. இங்கே வாசிப்பில் கிடைத்த ‘வேறு கண்கள்’ பிறருடன் பழகும்போது, ஒருவர் தன்னை மையமாகக் கொள்ளாமல் பழக உதவுகின்றன. சுயத்தைக் காதலிக்கும் நோயிலிருந்து அவரைக் குணப்படுத்துகின்றன. தன்னிலிருந்து வெளியே வந்து மற்றொரு சமூக உயிரியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் நல்வாய்ப்புகளை அளிக்கின்றன.
இது எப்படி நடக்கும் என்று கேட்கலாம். கற்பனை வளம் மேம்பட்ட புனைவுகளாக, கவிதைகளாக இருக்கட்டும்; அல்லது நுண்மாண் நுழைபுலத்துடன் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் புனைவல்லாதவையாக இருக்கட்டும், எழுத்தின் சக்தி ஒருவர் வாசிக்கும்போது அவரைத் தன்வயப்படுத்தக்கூடியது. புனைகதையின் கதாபாத்திரங்களுடனோ கவிதையின் கவிதைசொல்லியுடனோ அல்லது கட்டுரை என்றால் கட்டுரை எடுத்துக்காட்டும் தரப்புடனோ வாதங்களுடனோ வாசகரை மெய்மறந்து ஒன்றுபடச் செய்வது. நல்ல எழுத்து வாசகரை சுயத்தை மறக்கச் செய்து தன்னுடைய பரப்பில் அவரை ஈர்த்துக்கொள்ளும் திறன் படைத்தது. புத்தகப் பக்கங்களின் பரப்பில் வீழ்ந்து, ஒன்றுபட்டு பின்னர் எழுகின்றபோது புதிய ’வேறு கண்களு’டன் எழுகிறோம்.
எந்த ஒரு நல்ல புத்தகமாக இருந்தாலும் அந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன்பு நாம் கண்டவை வேறு; வாசித்த பிறகு நாம் காண்பவை வேறு. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பதைப் போன்றே, இதன் பின் புதிதாய்க் காண்கிறோம் என்பதே வாசிப்புக்கானது. வாசிப்பின் வழியே ஒருவர் பெறக்கூடிய ‘வேறு கண்கள்’ பெண்ணுடைய கண்களாகவோ ஆணுடைய கண்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. பல்லுயிரிகளுக்கும் இடம் தரும் இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஓர் உயிரியின், ஏன் இனி வரப்போகும் எந்த உயிரியின் கண்களாகவும் அவை இருக்கலாம். எல்லாமே எழுத்தையும் வாசிப்பின் ஈடுபாட்டையும் பொறுத்தது.
- பெருந்தேவி
கட்டுரையாளர், கவிஞர், பேராசிரியர்.