

ஒரு பெண்ணின் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டோம் இப்போது! தாய் எனும் நிலையை அடைகிறாள். தங்களால் உருவக்கப்பட்ட உயிர் வளர்ந்து வருவதைப் பார்க்க தம்பதிக்குக் கட்டிலடங்கா உற்சாகம். மகப்பேறு மருத்துவரும் குழந்தைப் பிறப்பு நிபுணரும் கருப்பையில் உள்ள குழந்தையின் உடல், மனரீதியான வளர்ச்சிக்குத் தாயும் தந்தையும் என்ன செய்யவேண்டும் என்று விளக்குவார்கள்.
உணர்வுரீதியான பாதுகாப்பு:
தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தை வளர்ப்பு ஆரம்பிக்கிறது. நிபுணர்களின் சொல்படி, தாய் தன் வயிற்றைத் தடவிக் கொடுப்பதன் மூலம் வளரும் சிசுவிற்குத் தன் பாசத்தைத் தெரிவிக்கிறார். குழந்தைக்கு இந்தச் செயல் ஒரு பாதுகாப்பைக் கொடுக்கிறது. குழந்தையும் உதைப்பதன்மூலம் தாயோடு தொடர்புகொள்ளும். இந்தப் பரிமாற்றங்கள் பிணைப்பைப் பலப்படுத்துவதோடு, உறவில் ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குகின்றன. 6, 7 மாதங்களில் தாயைச் சுற்றியுள்ள உலகில் வரும் ஓசைகளைக் குழந்தை கேட்க ஆரம்பிக்கும். தாயின் குரலைக் கண்டுகொள்ளும். கனிவான பேச்சு, பாடல்கள் போன்றவை ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பும் அவசியம். வயிற்றில் சிசு வளரும்போது தாய் மகிழ்ச்சியாக இருக்கவேண்டியது முக்கியம். ஏனெனில், தாயினுடைய உணர்வுகள் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
ஆரம்ப கால குழந்தைப் பருவம்:
பிறக்கும் தறுவாயில் குழந்தைக்கு இந்த உலகம் கருவறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு குழப்பத்தின் வெளிப்பாடு. எல்லமே புது அனுபவம். மெல்ல மெல்ல தாயின் அரவணைப்பின் பாதுகாப்பில் குழந்தை தன்னை, தன் உறவுகளை, சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளும். 0 முதல் 4 வயதுவரை முக்கியமான பருவம். ஏனெனில், குழந்தையின் மூளை வளர்ச்சி தொடர்கிறது; ஒவ்வொன்றாக அனுபவித்துப் புரிந்துகொள்ளும் நிலை அது. ஐம்புலன்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் மூளையில் பதிவுசெய்யப்பட்டு, அறிவாற்றல் திறனைக் (cognition) கூட்டுகின்றன. கற்ற வார்த்தைகளை மழலையாகப் பேசி மயக்கும். செறிவூட்டிய சூழலை (enriched environment) ‘ப்ளே ஸ்கூல்’ கொடுப்பதால், அதில் சேர்த்தவுடன் வளர்ச்சி துரிதமாவதைப் பார்த்துப் பெற்றோர் வியக்கின்றனர். போனால் வராத பருவம் இது; அதனால் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து மகிழுங்கள்.
குழந்தையை ஒழுக்கப்படுத்துதல்:
பிறந்த குழந்தை விரைவில் தனக்கு வேண்டியதை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முயலும். உதாரணத்துக்கு, தான் அழுதால் அம்மா தூக்கிக்கொள்கிறார் என்பதைக் கண்டுகொண்டு அதைச் செயல்படுத்தும். குழந்தையின் அழுகை பல காரணகளுக்காக இருந்தாலும், பிடிவாத அழுகையைத் தாயாகிய நீங்கள் அறிவீர்கள். அந்த நேரம் குழந்தையைத் தூக்காமல், அதன் கவனத்தைத் திசைதிருப்புங்கள். அழுகை நின்றுவிடும். சற்று வளர்ந்தபின் வேறொன்றில் பிடிவாதம் வரும்; அதைக் கவனிக்காதீர்கள். ஆனால், அடுத்து குழந்தை சமத்தாக ஏதாவது செய்யும்போது, கட்டி முத்தமிட்டுப் பாராட்டுங்கள். அப்போதுதான் பெற்றோர் கவனத்தைச் சதா ஈர்க்க முற்படும் குழந்தைக்கு, ‘நான் சமர்த்தாக நடந்தால்தான் அவர்கள் கவனிப்பார்கள்’ என்பது புரியும். பின் விரும்பத்தகாத நடத்தைகள் நின்றுவிடும்தானே.
தினசரி நடைமுறை ஒழுங்கிற்குக் குழந்தையை ஊக்குவித்துத் தயார் செய்யுங்கள். இப்போதே படிந்துவிட்டால், வளர்ந்ததும் அதுவே தொடரும். குழந்தை வளர்ப்பு கடினமல்ல. உங்கள் ‘மூட்’ எப்படியிருந்தாலும் ஒரு சீரான, சரியான அணுகுமுறை தேவை. அந்த அணுகுமுறைகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில்.
(மனம் திறப்போம்)
- பிருந்தா ஜெயராமன்
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.