

பொது இடத்தில் சரியாக ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்பதற்காக 22 வயது மாஷா அமினியைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் சிறப்புப் படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் வலுத்தது.
இந்நிலையில் பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா வைக்கப்பட உள்ளதாக புது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹிஜாப் அணியாத பெண்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அந்நாட்டு காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் பலர் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
நிலவுக்குச் செல்லும் முதல் பெண்! - கடந்த 1969ஆம் ஆண்டு அப்போலோ 11 விண்கலம் மூலம் முதன்முதலாக நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இதன் முதல் பகுதியாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆளில்லா ஆர்டெமிஸ் 1 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது.
இது வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆர்டெமிஸ் 2 விண்கலம் தயாரிப்பதற்கான திட்டத்தை நாசா முன்னெடுத்தது. இதில் பயணம் செய்ய நாசா தேர்வு செய்திருக்கும் நான்கு பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்பவரும் ஒருவர். 44 வயதான அவர் நிலவுக்குச் செல்லவிருக்கும் முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை. இவருடன் கனடாவைச் சேர்ந்த ஜெரேமி ஹான்சன், அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் ஆகியோரும் பயணம் செய்ய உள்ளனர்.
புற்றுநோய் கண்டறியும் பணியில் மாற்றுத்திறனாளிப் பெண்கள்: இந்தியாவைப் பொறுத்தவரை மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலானோருக்கு முதல் அல்லது இரண்டாம் நிலையைக் கடந்த பின்புதான் நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
இதனால் சிகிச்சையின் பலன் முழுமையாகக் கிடைப்பதில்லை. இந்நிலையை மாற்ற ஆரம்ப அறிகுறிகள் தென்படும்போதே சிகிச்சைக்குச் செல்ல வேண்டியது அவசியம். 18 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களும் மார்பக சுயபரிசோதனை செய்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்த ‘டிஸ்கவரிங் ஹேண்ட்ஸ்’ என்கிற தொண்டு நிறுவனத்தோடு பார்வைத்திறன் குறை இருப்பவர்களுக்கான தேசிய என்.ஏ.பி அமைப்பு இணைந்து புற்றுநோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. பார்வைத்திறன் குறைபாடுடைய பெண்களுக்குப் புற்றுநோயைக் கண்டறியும் மார்பகப் பரிசோதனை செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இயல்பாகவே தொடுதல் மூலம் நுட்பமாகக் கண்டறியும் திறன் பெற்ற இப்பெண்கள் மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கணிக்க உதவுவார்கள் என இப்பயிற்சியை ஒருங்கிணைக்க உதவும் மருத்துவர் காஞ்சன் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- ராகா