

சகாயமும் முத்தரசும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தார்கள். அந்தக் காலத்தில் சைக்கிளே இல்லை. ஆனால், சகாயம் மட்டும் எப்படியோ ஒரு துட்டு, ரெண்டு துட்டு என்று சேர்த்துவைத்துப் பன்னிரண்டு ரூபாய்க்கு சைக்கிள் வாங்கிவிட்டான். ஊரே அவன் சைக்கிள் வாங்கியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டது.
இரண்டு, மூணு நாளாகக் காட்டு வேலையையும் போட்டுவிட்டு அவன் வீட்டு வாசலிலேயே நின்று பார்த்து அதிசயித்தார்கள். அவன் பொண்டாட்டி காளி ஒரு மூடை வத்தலையும் அடுப்பைச் சுற்றிச் சுற்றி சைக்கிளுக்குச் சுத்திப்போட்டாள். சகாயம் வேலை செய்யும் இடம் ரொம்ப தூரமாயிருந்தது. அதனால்தான் அவன் சைக்கிள் வாங்கினான்.
முத்தரசுவுக்கு நாமும் எப்படியும் அவனுடனே சைக்களில் போக வேண்டும் என்று ஆசை. ‘உன் கூட வாரேன், நான் சைக்கிள் மிதிக்கிறேன்’ என்றால் வேண்டாமென்று சொல்லிவிடுவான் என்று நினைத்தவன் டவுசருக்கு மேலாக சேலை கட்டி, லவுக்கையும் போட்டுப் பூவைத்து பொம்பளை வேசம் போட்டுக்கொண்டான். அந்தக் காலத்தில் ஆண் களும் குடுமி வளர்த்தார்கள். இவன் வரும் வழியில் பெரிய பூவரச மரம் இருந்தது.
அதன் வளைவிலிருந்து திரும்பும்போது இவன் கை வளையல் குலுங்க, கால் கொலுசு சல் சல்லென்று சத்தம் கொடுக்க மெல்ல வெளியே வந்து இவன் சைக்கிள் குறுக்காக நின்றான். சகாயத்துக்கு ஆச்சரியமென்றால் அப்படி ஒரு ஆச்சரியம். ‘இம்புட்டு அழகான பொண்ண நம்ம இம்புட்டு நாளா பாக்கவே இல்லையே. இவளைப் பாத்தா பால் பொழிவது போல இருக்கே’ என்று இவன் நினைத்துக்கொண்டிருக்க, முத்தரசு வெட்கத்தோடு நின்றான்.
சகாயம், “என்னத்தா வயசுப்புள்ள இங்கன ஒத்தையா நிக்க. என் சைக்கிள்ல ஏறு. உன்ன எங்க கொண்டு போயி உடணுமோ அங்க கொண்டு போயி நானு விட்டுருதேன்” என்றான். முத்தரசு இதற்காகத்தானே காத்திருந்தான். அவனும் பொம்பளை குரலில் போகும் இடத்தைச் சொன்னான். “வளைவான ஒரு மணல்மேடு இருக்கில்ல. அங்க கொண்டுபோயி என்ன விட்டுரு”ன்னு சொல்ல சகாயம் சந்தோசத்தோடு சைக்களை உன்னி, உன்னி மிதித்தான்.
முத்தரசும் சும்மா இருப்பதில்லை. சகாயத்திற்கு உற்சாகம் உண்டாகும்படி அவன் தோளைத் தொடுவதும், சிரித்துப் பேசுவதுமாயிருப்பான். சகாயத்துக்கு உடம்பிற்குள் அருவி இறங்குவதுபோல் இருக்கும். அதோடு அவன் இறங்கும் இடத்தில் ஒரு வளைவான மேடும், மணல் நிறைந்த ஓடையும்தான் இருந்தது. ஒருநாள்கூட இவன் பார்க்கப்போகும் ஆள் அங்கே இல்லவே இல்லை.
முத்தரசு எதற்காக அந்த வளைவைச் சொன்னான் என்றால் அங்கிருந்து இவன் வேலை செய்யும் இடம் கொஞ்ச தூரம்தான் இருக்கும். பொம்பளை உடையை மாற்றி ஆம்பளை உடையைப் போட வேண்டுமல்லவா. அதனால், அவன் அங்கே நிப்பாட்டச் சொல்லுவான். சகாயம் போய் வேலை செய்யும் இடத்தில் நுழைந்ததும் கொஞ்ச நேரத்தில் முத்தரசுவும் நுழைந்துவிடுவான். “என்னடா சைக்கிள்ளே வாரவனுக்கே இம்புட்டு நேரம் ஆவுது. நீ என் பின்னாலயே பொசுக்கினு மொளஞ்சிருதயே எப்படி?”ன்னு கேப்பான் சகாயம்.
அதுக்கு முத்தரசு, “உன் சைக்கிள குறிவச்சில்ல ஓட்டமும் நடையுமா ஓடி வாரேன்” என்று சொல்லிவிடுவான். இப்போதெல்லாம் சகாயத்துக்கு முத்தரசுவை வைத்து சைக்கிளை மிதிக்க முடியவில்லை. சைக்கிளுக்கும் கோளாறு வந்துவிட்டது. அதைச் சரி பார்க்க ஊருக் குள் ஆள் இல்லை. சகாயம் நெஞ்சுவலியோடு துடிக்க கோடாங்கிக்காரனைக் கூட்டி வந்து காட்டினார்கள். அவனும், “உன் பின்னால் ஒரு பொம்பள வந்திருப்பாளே, அவ பொம்பள இல்ல பேயி” என்று சொல்ல அன்று காய்ச்சலில் விழுந்தவன்தான் எழுந்திருக்கவே இல்லை.
- பாரதேதவி | கட்டுரையாளர், எழுத்தாளர்; arunskr@gmail.com