வாசிப்பை நேசிப்போம்: தேவதைக் கதை முதல் புறநானூறு வரை

வாசிப்பை நேசிப்போம்: தேவதைக் கதை முதல் புறநானூறு வரை
Updated on
2 min read

ஆடம்பரமின்றி அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது வாசிப்பு எனும் ஆகப்பெரும் செயல். சிறுவயதிலிருந்தே எனக்குக் கதைகள் கேட்பதில் அவ்வளவு இஷ்டம். பாட்டி சொல்லும் நல்லதங்காள் கதை, அம்மாவின் சொந்த ஊர் கதைகள், அப்பா சொல்லும் காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய கதைகள் எனப் பல பரிமாணங்களில் சுவாரசியமான கதைகள். கதை கேட்கும் அல்லது சொல்லும் திறன் நிச்சயமாக வாசித்தலில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.

விடுமுறை நாள்களில் ஊருக்குச் செல்லும்போது, தாத்தா தினமும் காலையில் அவர் வாங்கும் ‘தினத்தந்தி' நாளிதழைச் சத்தமாகவும் பிழையின்றியும் வாசிக்கும் பேரக் குழந்தைக்குத் தனது டிரங்க் பெட்டியிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பரிசாகத் தருவார்.

நானும் போட்டியிட்டுச் சத்தமாக வாசிப்பேன். இதுவே என் புத்தக வாசிப்பின் தொடக்கம். தாத்தாவுக்காகவும் பிஸ்கட்டுக்காகவும் வாசிக்கத் தொடங்கினாலும் பின் எனக்கே அதில் ஈர்ப்பு ஏற்பட்டுச் செய்தித்தாளுடன் இணைப்பாக வரும் சிறுவர் புத்தகங்கள், அம்புலி மாமா கதைகள், வேதாளம் செல்லும் கதை, கலிவரின் பயணம் எனப் பட்டியல் நீண்டது.

அப்பாவுக்கு விளையாட்டில் அதிக விருப்பம் இருந்ததால் வீட்டில் விளையாட்டுத் தொடர்பான புத்தகங்கள் இருக்கும். அந்த இதழ்களை வைத்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். மூன்று வயதில் நான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரது பெயரையும் சொல்வதில் அனைவரும் ஆச்சரியப்பட்டதாகச் சொல்வார்கள்.

எங்கள் பள்ளியின் எதிர் தெருவில் ஒரு தாத்தா கடையில் பழைய புத்தகங்கள் பாதி விலைக்குக் கிடைக்கும். அங்கு புத்தகங்களை வாங்கிப் படிப்பதுண்டு.

ராஜேஷ்குமாரையும் ரமணிச்சந்திரனை யும் பாலகுமாரனையும் தேடி பெரிய தெரு வீதிகளில் அலைந்தவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று சோழ நாட்டின் ராஜபாட்டைகளில் இளவரசியாக வலம் வரச் செய்தவர் கல்கி. குந்தவையாகவும் பூங்குழலியாகவும் மாறித் திரிந்ததும், கவிதையிலும் கற்பனையிலும் மூழ்கித் திளைத்ததும் உண்டு. வரலாற்றுப் புதினங்கள் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட, கல்கியையும் சாண்டில்யனையும் தொடர்ந்து வாசித்தேன்.

சுஜாதா, ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்.ராம கிருஷ்ணன், வைரமுத்து என வாசிப்புத் திறன் மேம் பட்டது. ஓர் ஆசிரியராக எனது வகுப்பில் அனைத்து மாணவர்களையும் அவர்களுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை வாங்கச் செய்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு படிக்கச் செய்வேன்.

வகுப்பில் மொத்தம் 30 மாணவர்கள் எனில், அந்த 30 புத்தகங்களையும் அந்த வருடத்திற்குள் அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என்பதே இலக்கு. இதைத் திறம்பட எங்கள் வகுப்பில் செயல்படுத்தியும் வந்தோம். இப்போது பள்ளியில் நூலக வாசிப்பு மூலம் அனைத்து வகுப்பு மாணவர்களும் சிறப்புறப் படிக்கத் தொடங்கிவிட்டனர்.

புத்தக வாசிப்பின் அடுத்த நகர்வாக, மிக முக்கிய நகர்வாக எனக்கு அமைந்தது தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்படுத்தப்பட்ட ‘வாசிப்பை நேசிப்போம்’ என்கிற தளம். ஒரு புத்தகத்தைப் படித்து முறையாக விமர்சனம் செய்ய ஊக்குவித்தது இந்தத் தளம். மொழித்திறனும் சிந்தனையும் தூண்டப்பட்டது.

சிண்ட்ரெல்லா கதையில் தொடங்கிய எனது வாசிப்பு, சங்க காலம் குறித்து அறிய புறநானூறைப் புரட்டும் அளவுக்குத் தொடர்ந்து வளர்கிறது. வாசிப்பு ஒருவருக்குத் தன்னம்பிக்கையையும் வாழ்வு குறித்த புதிய கண்ணோட்டத்தையும் தருகிறது. வாசிப்பவர்கள் நிச்சயம் நேர்மறை எண்ணம் உடையவர்களாகவும் தனித்துவம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

- வி.ராஜகோகிலா | பட்டுக்கோட்டை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in