

கோபம் பற்றிய கடந்த அத்தியாயத்தில், ‘இருவரது கோபமும் தணிந்தபின் தீர்வைநோக்கி மற்றவரைக் குறைகூறாமல் பேச வேண்டும்’ என்று முடித்திருந்தேன். பிறர் மனதைப் புண்படுத்தாது, நம் உணர்வை/கருத்தை வலியுறுத்திப் பேசுவதுதான் புரியவைக்கும், பலனளிக்கும் உரையாடும் பாணி.
இதோ கதிரும் மலரும் வருகிறார்கள் நமக்கு விளக்க...
கதிர்: இந்த பாஸ் என்னிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப்போறாரோ அன்னிக்குத்தான் நான் நிம்மதியா தூங்குவேன். எது பண்ணினாலும் தப்பு கண்டுபிடிப்பார்!
(முதலில் மலர் குறுக்கிடாமல் காதுகொடுத்துக் கேட்கிறார். பிறகு இந்தப் பேச்சில் வெளிப்படும் உணர்வை அவர் அங்கீகரிக்கிறார்)
மலர்: உனக்கு எரிச்சலாக இருந்ததா?
உணர்வைச் சுட்டிக்காட்டும் சொல்லை மலர் உபயோகிக்கும்போது, கதிரின் மனதைத் தொடுவதால் வருடிக்கொடுத்த சுகம் ஏற்படும். உணர்வைப் புரிந்துகொள்வதால் நெருக்கம் ஏற்படும். உறவை வெல்வதின் ரகசியம், உணர்வைப் புரிந்துகொண்டு பதிலளித்தல். அந்த ஒரு வாக்கியத்திற்குப் பிறகு கோபமில்லாமல், குற்றம் சொல்லாமல், கனிவான குரலில் பேசினால் பலன் இருக்கும்.
கதிரின் தம்பியுடைய குழந்தையின் ஆண்டு நிறைவு விழாவுக்கு இருவரும் போய்விட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். அங்கே அனைவருக்கும் நடுவில் மலர் செய்த அல்வாவைத் தான் உடைத்து எடுத்த தீரச்செயலைப் பற்றி கதிர் விளக்கிப் பேச, மற்றவரெல்லாம் சிரிக்க, அந்த நிகழ்வு மலரைப் புண்படுத்த, அழுகையை மறைக்க அவர் ‘ரெஸ்ட் ரூமு’க்குப் போனார்.
மலர், கதிரைப் புண்படுத்தாமல், தன் உணர்வை/கருத்தை வலியுறுத்திப் பேசி, கதிருக்குப் புரியவைக்கிறார்.
மலர்: (குரலை உயர்த்தாமல்) இன்னைக்கு விழாவிலே என் சமையலைப் பற்றிய விமர்சனம் வந்தபோது (‘நீ பேசினாய்’ என்று சுட்டிக்காட்டவில்லை) நான் மிகவும் புண்பட்டுப் போய்விட்டேன். ரெஸ்ட் ரூமில் போய் அழுதுவிட்டு வந்தேன். இனி பலருக்கு நடுவில் என்னை விட்டுக்கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்தால் நல்லது. இதனால் நமக்குள் வரும் விவாதங்கள் குறையும். நானும் உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன்.
கதிர்: கரெக்ட்தான் மலர். நான் ஏதோ பெரிய ஜோக் அடிப்பதாக நினைச்சு பேசிட்டேன். அப்புறம் அல்வாவிலே நீ எக்ஸ்பர்ட் ஆன கதையையும் சொல்லியிருக்கணுமில்லே!
உரையாடல் மென்மையாக இருக்க, இருவரிடையே இறுக்கம் போய் இயல்பான நிலைக்கு உறவு வந்துவிடுகிறதல்லவா?
ஆண்கள்தான் தவறாகப் பேசுகிறார்கள் என்று சொல்லவில்லை; இதுபோல் மலர் கதிரைக் கடுமையாகப் பேசி, அதன் பின் கதிர் மலரைப் புண்படுத்தாமல் தன் உணர்வை வலியுறுத்திச் சொல்லி, மலருக்குப் புரியவைப்பதும் நடக்கும்.
நமக்கு உதவும் சில கண்ணோட்டங்கள்:
கோபத்தால் யாரையும் வெல்ல முடியாது; மாறாக, என் உடல், மன ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது. பிரச்சினையும் தீர்வதில்லை.
யாரும் என்னைக் கோபப்படுத்த முடியாது, நான் அனுமதிக்காவிட்டால்!
பிறரைக் காயப்படுத்தும் உரிமை எனக்கு இல்லை. நான் என் எல்லையைத் தாண்டிப் பேசுகிறேன்.
தீர்வைக் காணாத கோபம்/பிரச்சினை பாரமாக என்னை அழுத்திச் செயலிழக்க வைக்கிறது.
காயப்படுத்தியவர்களை மன்னிப்பது நான் ஞானியாவதற்கல்ல; என் புண்ணை ஆற்றிப் பாரத்தைக் குறைக்க!
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ -உளவியல் நிபுணர்போல் வள்ளுவர் கூற்று!
‘அஸர்டிவா’கப் பேசப் பழகினால், உறவுகள் என்னை நாடுவார்கள். பின் மகிழ்வும் நிம்மதியும் என் சொந்தம்.
நாம் சரியாகத்தான் குழந்தைகளை வளர்க்கிறோமா? அடுத்த அத்தியாயத்தில்…
(மனம் திறப்போம்)
-பிருந்தா ஜெயராமன்.
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்