கேளாய் பெண்ணே: தழும்பு மறைய என்ன வழி?

கேளாய் பெண்ணே: தழும்பு மறைய என்ன வழி?
Updated on
2 min read

தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பு மறைய என்ன செய்ய வேண்டும்? சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியுமா?

- எஸ். ஜாஹீர் உசேன், சிவகங்கை.

வீரபாபு, சித்த மருத்துவர், சென்னை.

பொதுவாக வேலை செய்துகொண்டிருக்கும் போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் காயத்தின் மீது உடனடியாகத் தண்ணீர் ஊற்றுங்கள். அதன் பிறகு சோற்றுக் கற்றாழையின் தோலை நீக்கி அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து தீக்காயம்பட்ட இடத்தில் பற்றுப்போட வேண்டும். இதனால் உடனடியாகத் தீக்காயம் குணமாவதுடன் தழும்பு ஏற்படுவதும் குறையும்.

தீக்காயம் ஏற்பட்டவுடனே கற்றாழையின் சதையைப் பற்றுப்போட்டால்தான் தழும்புகள் தடுக்கப்படும். ஏற்கெனவே ஏற்பட்ட தீக்காயத்தின் மேல் கற்றாழையைப் பற்றுப் போட்டால் பலன் தராது.

எனக்கு 21 வயது. எனக்கு வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லை. மார்பக வளர்ச்சிக்காக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறத் தயக்கமாக இருக்கிறது. இதற்காக மருத்துவரை அணுக வேண்டுமா? விளம்பரங்களில் சொல்லப்படும் மருந்துகளைப் பயன்படுத்தலாமா? அவற்றால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

- பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி.

சு. அனுரத்னா, பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு)

மார்பக வளர்ச்சி என்பது ஹார்மோன் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டது. மார்பக வளர்ச்சிக்கும் கருப்பைக்கும் தொடர்பு உண்டு. பொதுவாகப் பெண்கள் பதிமூன்று வயதில் பருவம் அடைவார்கள்.

ஆனால், சிலர் பத்து வயதிலேயே பருவம் அடைந்துவிடுவார்கள். மேலும் சிலர் 16 வயதுக்கு மேல்தான் பருவம் அடைவார்கள். இவர்களில் தாமதமாகப் பருவம் அடைகிறவர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதன் விளைவாக மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும்.

அதேபோல் கருப்பை சிறியதாகவும், உடலின் மறைவிடங்களில் ரோம வளர்ச்சி குறைவாகவும் இருக்கும். ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளைப் பரிசோதனை மூலமாகத்தான் கண்டறிய முடியும்.

ஒருவேளை மாதவிடாய் சுழற்சி முறையாகவும், கருப்பை அளவு சரியாகவும், உடலின் மறைவிடங்களில் ரோம வளர்ச்சி சரியாகவும் இருந்து மார்பக வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து எந்த ஹார்மோன் குறைவாக உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். அதன் பிறகுதான் மார்பக வளர்ச்சிக்கான மருத்துவ ஆலோசனைகளை மகப்பேறு மருத்துவர்களால் வழங்க முடியும். இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களை முழுமையாகப் பரிசோதனை செய்வது அவசியம். அப்போதுதான் அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை அளிக்க முடியும். உடல் வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

மார்பக வளர்ச்சி குறித்து மாவட்டத் தலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை அணுகி ஆலோசனை பெறலாம். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து தக்க ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை தொடங்குவது நல்லது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரச்சினையை விரைவாகச் சரிசெய்யலாம்.

விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்படும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது தவறு. அவற்றால் சரும பிரச்சினைகளில் தொடங்கி பல்வேறு பக்கவிளைவுகள் உண்டாகக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in