அரசுப் பணியே என் அடையாளம்

அரசுப் பணியே என் அடையாளம்
Updated on
3 min read

தாங்கள் செய்யாத தவறுக்காகத் தண்டனை பெறும் பிறப்புகளில் திருநர் சமூகத்தினரையும் கணக்கில்கொள்ள வேண்டும். பொதுச் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்ட அவர்களுக்குப் புதுக்கவிதையில் இடமளித்து கவனம்பெறச் செய்தவர் கவிஞர் நா. காமராசன். திருநர் சமூகம் பற்றிய புரிதல் பரவலாக்கம் பெறாத காலத்தில் திருநங்கையரைப் பற்றி எழுதுகையில், ‘காலமழைத் தூறலிலே/களையாய்ப் பிறப்பெடுத்தோம்/சந்திப் பிழை போன்ற/ சந்ததிப் பிழை நாங்கள்’ எனக் குறிப்பிட்டிருப்பார் அவர். உண்மையில் இது திருநர்களின் பிழையல்ல, ஹார்மோன்களின் சித்துவிளையாட்டு என அறிவியல் சொன்னாலும் திருநர் சமூகத்தை ஏற்றுக்கொள்வதில் பலருக்கும் மனத்தடை இருக்கிறது. தங்களது பாலின அடையாளமே சுமையாகிப் போகிற அவலத்தையெல்லாம் தாண்டித்தான் திருநர் சமூகத்தினர் நம்மிடையே வாழ வேண்டியிருக்கிறது. “வாழ்க்கையில் முன்னேறணும்னா சிலதை ஏற்றுக்கொண்டு கடக்கப் பழக வேண்டும்” என்று புன்னகைக்கிற தீப்தி, தமிழ்நாடு வனத்துறையில் அலுவலக உதவியாளராகப் பணி யாற்றுகிறார். வனத்துறையில் பணி யாற்றும் முதல் திருநங்கை இவர்.

கோயம்புத்தூர் காரமடையைச் சேர்ந்த சுதன்ராஜ், தீப்தியாக மாறியது இயல்பாக நிகழ்ந்துவிடவில்லை. தீப்தியின் சிறு வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். பதினோராம் வகுப்புப் படித்துக்கொண்டி ருந்தபோது தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை சுதன்ராஜ் உணர்ந்தார். திருநர்கள் குறித்து ஓரளவுக்கு அறிந்திருந்தவர் இது குறித்து அம்மா மாலதியிடம் சொன்னார். ஆறாம் வகுப்பு வரை படித்திருந்த அவர் தன் மகன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார். கணவன் இறந்த பிறகு கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்த அவருக்குத் தன் உறவினர்கள் முன்னிலையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே இலக்கு. மகன் இப்படிச் சொல்கையில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஊருக்குப் பயந்து மகனைக் கண்டித்தார்.

பணியே அடையாளம்

இதற்கிடையில் கல்லுரியில் பி.காம்., சேர்ந்த சுதன்ராஜ் அழுத்தம் தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை அரவணைத்த திருநர் சமூகத்தினர், எக்காரணம் கொண்டும் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக அவர் தொடர்ந்து படிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். சில மாதங்களில் அம்மாவும் இவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார். கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்தவர், பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தீப்தியானார். அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்றவர், தற்போது நீலகிரியில் பணியாற்றிவருகிறார். பள்ளி, கல்லூரி, பணியிடம் என எங்கேயும் தான் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டதில்லை என்கிறார் தீப்தி. “இப்போ மக்களிடம் ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்கு. அவ்வளவா கேலி, கிண்டல் பண்றது இல்லை. என்னுடன் வேலை செய்கிறவர்களும் உயர் அதிகாரி களும் என்னை நல்லவிதமாகத்தான் நடத்துகிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிக்கல் இருந்தது. திருமணம், குழந்தைகள் என்று எதுவும் இல்லாததால் வேலையில் அதிக கவனம் செலுத்துவேன். அதனால், எந்த வேலையாக இருந்தாலும் அதிகாரிகள் என்னிடம் நேரடியாகச் சொல்வார்கள். அது பிறருக்கு மனத்தாங்கலாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பற்றி ஏதாவது புறணி பேசுவார்கள். பணியிடத்தில் இதெல்லாம் இயல்புதானே? அதனால் நான் எதையும் பெரிதுபடுத்துவதில்லை. எல்லாத்தையும்விட இந்த வேலைதான் என் அடையாளம்” என்கிறார் தீப்தி.

சமூகம் மாற வேண்டும்

அம்மாவுக்கு மூப்பின் காரணமாக உடல்நலம் சரியில்லை, அண்ணனையும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் கோயம்புத்தூருக்குப் பணியிட மாற்றத்துக்காக தீப்தி காத்திருக்கிறார். திருநங்கையருக்கான விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்பதுதான் தீப்தியின் இலக்கு. “நான் வாலிபால், கபடி, கொக்கோன்னு நல்லா விளையாடுவேன். இங்கே எங்கள் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது மகளிர் பிரிவில் பங்கேற்று வெற்றி பெறுவேன். ஆனால், தேசிய அளவிலான போட்டிகளுக்கு என்னை அனுப்ப மாட்டார்கள். ஹார்மோன் பரிசோதனையின்படி என்னால் பெண்கள் பிரிவிலும் பங்கேற்க முடியாது. இதுவே, அரசுப் பணிகளில் திருநர் சமூகத்தினரும் அதிகமாக இருந்தால் நான் அவர்களுடன் விளையாடி இருப்பேன்தானே. அதற்காகவே திருநர் சமூகத்தினருக்கு எனத் தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று சிரிக்கும் தீப்தி, எதற்கும் யாரையும் சார்ந்திருக்காத தன்மை தான் தன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

“திருநர் சமூகத்தினர் படித்து முன்னேறி னாலும் காதல் என்கிற பெயரால் பலர் ஏமாற்றத்துக்குள்ளாவது வருத்தமே. பலர் தங்களையே மாய்த்துக் கொண்டுள்ளனர். காதல் என்னையும் கடந்து சென்றிருக்கிறது. எட்டு வருடக் காதல். என்னைப் பெண் என நினைத்துத்தான் காதலிக்கத் தொடங்கினார். திருநங்கை என்று தெரிந்த பிறகும் அதில் மாற்றம் இல்லை. ஆனால், தன் குடும்பத்தினருக்காக அவர்கள் பார்த்துவைத்த பெண்ணை மணந்து கொண்டார். அந்த நேரம் வேதனையாக இருந்தாலும் எவ்வித முட்டாள்தானமான முடிவையும் எடுக்கக் கூடாது என்று இருந்தேன். வேறு எதையும்விட எனக்கு நான் முக்கியம் இல்லையா. எந்தக் கட்டுப் பாடும் பிணைப்பும் இல்லாததும் ஒரு வகை யில் நிம்மதிதான்” எனச் சிரிக்கிறார் தீப்தி.

அரசுப் பணியில் இருக்கும் திருநர்கள் குறைவு. அவர்களுக்கும் பெண்களைப் போலவே சில சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்பது தீப்தியின் கோரிக்கை. “பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதுபோல் பால் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் திருநங்கைகளுக்கும் அவர்களது உடல்நலன் கருதி மருத்துவ விடுப்பு அளிக்கலாம். பொதுவாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகுதான் பணியில் சேர முடியும் என்பதால் அதற்குப் பிறகு மருத்துவ ஓய்வு தேவைப்படும்போது அவர்கள் இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லையா? அதேபோல் திருநர் சமூகத்தினர் பலர் படிக்க ஆர்வம் இருந்தும் குடும்ப ஆதரவும் பொருளாதார உதவியும் இல்லாததால் படிப்பைக் கைவிட்டு கடை கேட்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்றவற்றுக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கனை அரசு படிக்க வைத்தால் அவர்களின் எதிர்காலம் நல்லவிதமாக அமையும்” என்கிறார் தீப்தி.

திருநர்களை ஏற்றுக்கொள்ள பெற்றவர் களும் குடும்ப உறுப்பினர்களும் தயாராக இருந்தாலும் ஊர் வாய்க்குத்தான் அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால், பொதுச் சமூகத்தினரின் மனநிலையில் ஏற்படும் மாற்றம்கூடத் திருநர்களின் வாழ்க்கை மேம்பட உதவும். அதுதான் தீப்தி போன்றவர்களின் எதிர்பார்ப்பும்கூட.

படம்: ஜெ. மனோகரன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in