கிராமத்து அத்தியாயம் - 13: கொடிக்கா சண்டை

கிராமத்து அத்தியாயம் - 13: கொடிக்கா சண்டை
Updated on
2 min read

வாகினி அப்போதுதான் வேலை செய்து முடித்தாள். நேரம் இரவு ஒரு சாமத்துக்கு ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அவள் புருசன் அய்யனாரு ஆடுகளைக் கொண்டுபோய் கெடையில் விட்டுவிட்டு வருவான். அதன் பிறகு சாப்பிட்டுப் படுப்பான். தினமும் கூலியாக ஒரு மரக்கால் (நாலு படி) குதிரைவலியோ வரகோ கொண்டு வருவான். வாகினியால் வேலைக்குப் போக முடியாது. அவளுக்கு அண்டியும் சவலையுமாக இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களைப் பார்க்கவும் இந்தத் தானியங்களைக் குத்திப் புடைத்து அரிசியாக்கிவைத்துவிட்டுப் போய் விறகு பெறக்கி வர வேண்டும்.

ஒரு மரக்கால் வரகு குத்திக் காய்ச்சினால் நாலு உருண்டை சோறு இருக்கும். பிள்ளைகளுக்குக் கொஞ்சம் ஊட்டியது போக ராத்திருக்கு இவளும் இவள் புருசனும் ஆளுக்கு ஒரு உருண்டை சாப்பிடுவார்கள். பிறகு காலையில் ஒரு உருண்டை சோறை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துச் சாப்பிடுவார்கள். மீதமிருக்கும் ஒரு உருண்டைச் சோறை மதியானச் சாப்பாட்டுக்காகப் புருசனுக்கு வைத்துக் கொடுத்துவிடுவாள்.

அப்போதெல்லாம் வெஞ்சனத்துக்குப் பஞ்சமே இல்லை. யார் காட்டிலும் யாரும் காய் பிடுங்கிக்கொள்ளலாம். பெரிய தோட்டம் வைத்திருப்பவர்கள் காடு, கரை இல்லாதவர்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதனால், வாகினிக்கு வெஞ்சனக் கவலை கிடையாது.

குருவனுக்குப் பசி என்றால் அப்படிப் பசி. ஊர் அடங்கிய நேரத்தில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். இனி வீடுகளில் சோறு கேட்டால் கோபப்படுவார்கள். ஆனாலும் பசியையும் பொறுக்க முடியவில்லை. வாகினி வீடு முதல் வீடாக இருந்தது. போய் கதவைத் தட்டினான். புருசனுக்காகக் காத்திருந்த வாகினி, “என்ன நீரு.. வெறுமே கதவைத் தட்டிக்கிட்டு இருக்கீரு? வாகினின்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டாத்தானே எனக்குத் தெரியும்?” என்று சடவாகச் சொல்லவும், “வவுத்துப் பசியில உன் பேரைச் சொல்ல அயத்துப்போனேன் வாகினி. மனுசனுக்குப் பசி சிறுகுடலைப் பெருங்குடலு திங்குது. நானு வாசல்லயே உக்காந்துக்கிடுதேன். நீ வட்டுல சோறு வச்சி இங்கே கொண்டா” என்றான்.

வாகினியும், “இதென்ன கொடுமை. வீட்டுக்குள்ளகூட வராம இங்கன சாப்பிடப் போறீராக்கும்?” என்று சொல்லி வட்டிலில் ஒரு துண்டு சோறும் மொச்சிப் பயறு கூட்டானமும் ஊத்தியிருக்கிறாள். “இன்னைக்குப் பசின்னா பொறுக்க முடியல. இன்னும் ரெண்டு உருண்டை சோறைக் கொண்டாந்து வையி”ன்னு சொல்லவும் “இதென்ன எப்பவும் ஒரு உருண்டை சோறுதானே சாப்பிடுவாரு. இன்னைக்கு என்ன மூணு உருண்டை சாப்பிடுதீரு?” என்றாள் ஆச்சரியத்துடன். அவனும், “நீ வச்சிருக்க மொச்சிப்பயறு ரொம்ப அருமை. அதேன் அப்படிச் சாப்பிடுதேன்” என்றவன், “அடடா உனக்குக் கொடிக்கா புடுங்கிட்டு வந்தேன். அப்படியே வெளியே வச்சுட்டேன். இந்தா எடுத்துட்டு வாரேன்” என்று போனவன்தான் போயே போய்விட்டான்.

அய்யனாரு வந்து சோறு கேட்க, வாகினி கோபத்தோடு, “உம்ம உடம்பில இருக்கது வயிறா இல்லை தாழியா?” என்று கேட்க, “என்னாத்தா சொல்லுத? நானு இப்பத்தான கெடயில இருந்து வாரேன்” என்று சொல்ல இருவருக்கும் சண்டையான சண்டை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in