ஒரு நாள் கொண்டாட்டமா மகளிர் தினம்?

ஒரு நாள் கொண்டாட்டமா மகளிர் தினம்?
Updated on
2 min read

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் என்பது பாலினச் சமத்துவம், இனப்பெருக்க உரிமைகள், பெண் களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு பெண்கள் உரிமைகள் இயக்கத்தின் மையப் புள்ளியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலகளாவிய தினம் என்று மகளிர் தினம் பற்றி விளக்கம் தருகிறது விக்கிபீடியா.

பெண்கள் எல்லாக் காலத்திலும் விடுதலையை நோக்கி மட்டுமே நகரவேண்டிய சூழலைச் சமூகம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. பெரியார் காலத்திலிருந்து இன்று வரையிலும் பெண் விடுதலை தீர்வின்றிப் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. காலம் காலமாகப் பெண்களுக்கு இழைக்கப்படுகிற இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. பெரியார் பேசிய பெண் விடுதலை என்பதைக் கடந்து இன்றைக்கு ஊடக உலகத்துக்குள்ளும் பெண்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளையும் சேர்த்துச் சிந்திக்க வேண்டிய இடத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.

காட்சிப்படுத்தப்படும் பெண்ணுடல்

திரைப்படங்களும் சின்னத்திரை நாடகங்களுமே மக்கள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரு ஊடகங்களுமே பெண்ணுடலையும் ஆண்ணுடலையும் கவர்ச்சிக்குரிய ஒன்றாகவும் பாலுணர்வைத் தூண்டும் வகையிலுமே காட்சிகளை உருவாக்குகின்றன. குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க முடியாத முகம் சுளிக்கவைக்கிற காட்சிகளைக்கூட நாம் சகித்துக்கொண்டு பார்த்துக் கடந்து போகிற சூழலில்தான் சில திரைப்படக் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

ஒரு ஆண் வாசனை திரவியத்தை உடலில் அடித்துக்கொண்டு வருகிறார், இரண்டு பெண்கள் அவரைத் தழுவி முத்தமிடுகிற விளம்பரம் ஒன்று வருகிறது. அதற்கு யாரும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் பார்த்துக் கடந்துபோகிறோம். ஆனால், அதுபோன்ற காட்சிகள் சமூகத்தில் எம்மாதிரியான சிந்தனைகளைத் தூண்டும் என்பதைப் பற்றி ஊடகங்களும் சிந்திப்பதில்லை, பார்க்கும் நாமும் எந்தக் கவலையும் கொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் உடல் என்பது கவர்ச்சி காட்டும் ஒன்று.

சமூக ஊடக வன்முறை

பேச மட்டுமே பயன்பாட்டிலிருந்த தொலைபேசி இன்றைக்குப் பார்த்துப் பேசும் திறன்பேசியாக, உலகச் செய்திகளை உள்ளங்கையில் கொண்டு வந்து தருகின்ற முக்கியத் தகவல் தொடர்பு சாதனமாக மாறியிருக்கிறது. மனித ஆக்கத்திற்குப் பயன்பட வேண்டிய ஊடகத்திற்குள்ளும் பெண், ஆண் என்கிற வேறுபாடு இல்லாமல் பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. மனமொத்தவர்கள் விரும்பிப் பகிர்ந்துகொள்கிற அந்தரங்கங்கள்கூடத் திருடப்பட்டுப் பழி வாங்கும் நோக்கத்துடன் பொது வெளியில் பகிரப்பட்டுப் பெண்ணும் ஆணும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றர். இப்படியான வன்முறை நிகழ்வில் ஆணும் பெண்ணும் பாதிக்கப்பட்டாலும் பெண்ணே இழிவுபடுத்தப்படுகிறாள், ஆண் இயல்பாகக் கடந்து போய்விட முடிகிறது. இம்மாதிரியான சமூக மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி எதிர்கொள்வது? கல்வி, ஊடகம், வேலைவாய்ப்பு என அனைத்துத் தளங்களிலும் பெண்கள் முன்னேறிவரும் சூழலில் சமூக ஊடகத்திற்குள் பெண்ணின் மீதான வன்முறைகள் பெண்ணின் வளர்ச்சி நிலையில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதுகூட யூகிக்கக் கூடியதாக இல்லை.

பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்போம்

இன்னும் அந்தக் காட்சியும் கதறலும் நினைவில் நிற்கின்றன. ‘அண்ணா! வேண்டாம் அண்ணா! என்னைய விட்டுடுங்க. அடிக்காதீங்க அண்ணா’ என்கிற இந்தக் கதறல் பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. இது போன்ற வன்முறைகளை நிகழ்த்துபவர்கள் யார்? அவற்றைப் படம் எடுப்பவர்கள் யார்? பதிவேற்றம் செய்பவர்கள் யார்? இப்படி எத்தனையோ வினாக்கள் விடையின்றி பெண்களின் வாழ்வைக் கேள்விக்குறியாகவே வைத்திருக்கின்றன. இந்தக் கேள்விக்கான விடைகளை அவிழ்த்துத் தீர்வு காண்பதால்கூட நவீனப் பெண்ணடிமைத்தனம் உடைந்து ஒழிந்து போகும் என நம்பலாம்.

நாம் பெண்ணைக் கொண்டாடுகிறோம், போற்றுகிறோம் என்பதை யெல்லாம்விட அவர்களின் சுயச்சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் மதிப்பளிக்கிறோமா என்பதை ஆண், பெண் இருவருமே சிந்திக்க வேண்டி யிருக்கிறது. பெண்களுக்கு எதிரான சிந்தனை என்பது நேற்றைக்கோ இன்றைக்கோ உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டு கால சிந்தனையின் தொடர்ச்சி. அது வழிவழியாக நம்மோடு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சிந்தனைப் போக்கை மாற்றி அமைக்கப் பிறரிடத்தில் தம்மைப் பொருத்திப் பார்த்துத் துயரம் உணர்ந்து, சிந்தனை அளவில் எல்லோர் மனங்களும் மாறி பெண்ணைக் கொண்டாடுகிற நாளாக ஒவ்வொரு நாளையும் மாற்றிக்கொள்ள முடியும். பெண்ணை, பெண்ணியத்தைப் போற்ற மார்ச் 8 ஒரு நாள் மட்டும் போதுமா என்ன?

- மகா.இராஜராஜசோழன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in