

கோபம் வராதவர்களே கிடையாது. கோபம் ஏன் வருகிறது? எதிரில் உள்ளவர் நம்மைக் குற்றம் சொல்லிப் பேசும்போது நமது ‘ஈகோ’ புண்படுகிறது; உடனே அதைத் தவிர்க்க கோபத்தைக் காட்டுகிறோம். ஆனால் கோபத்தோடு பேசும்போது, நாம் யோசித்துப் பேசுவதில்லை. ஏனெனில் அந்த உணர்வு நம்மை ஆட்கொள்ள, அதன் சொல்படிதான் கேட்கிறோம். தவறான சொற்கள் வெளிப்பட, அதனால் எதிராளி புண்பட்டுப்போய், அவரும் கோபமாகப் பேச இருவரும் கோபத்தின் உச்ச கட்டத்திற்குப் போய், சுடுசொற்களை வீச உரையாடல் நின்றுபோகிறது. “நீ பேசியது என்னைப் புண்படுத்திவிட்டது” என்று சொல்வதற்குப் பதிலாகக் கோபத்தின் வேகத்தில், “நீ என்னைப் புண்படுத்தி விட்டாய்” என்று அவரைக் குற்றம் சொல்ல, பேச்சு வார்த்தை வலுக்கிறது.
கணவன் - மனைவி உறவு நெருக்கமான உறவு என்பதால், அங்கே உரிமைகளும் வரம்புமீறல்களும் அதிகம். ஒரு சண்டையின் முடிவு அடுத்த சண்டையின் ஆரம்பம். ஏனெனில், அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் கருத்து வேறுபாடு வரும்போது, இருவரில் ஒருவரால் இன்று நடந்த சம்பவம் இழுக்கப்படும். இதனால் முடிவில்லா விவாதங்கள் தொடரும். இருவரும் ‘பேசினால்தானே வம்பு’ என்று அவசியமான உரையாடல்கள் தவிர வேறு எதையுமே பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இதற்குள் இவர்களிடையே இடைவெளி அதிகரித்துக் கொண்டே வரும். ஆனால் இருவரும் அதைக் குறைக்க முயற்சி எடுப்பதில்லை. கோபப்படுவதால் பிரச்சினையைத்தான் பேசுகிறார்கள். தீர்வைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.
மூன்று வகை கோபம்
கோபத்தை வெளிப்படுத்துவதில் மூன்று வகை உண்டு. கத்துபவர்கள், அடக்கிக்கொள்பவர்கள், இடம்பெயர்த்துபவர்கள். கோபம் வரும்போது ஒருவருக்குள் ஒரு வேகம், ஒரு சக்தி பிறக்கிறது. அது அவரை, ‘உன்னைச் சங்கடப்படுத்தும் கோபத்தைத் தூக்கி எறி’ என்று பணிக்க, அவர் முதல் ரகமாக இருந்தால் உடனே கத்திவிடுகிறார். அப்போது உறவுக்குப் போதிய சேதம் நிகழ்ந்துவிடுகிறது. இவர் பேசிய சுடுசொற்கள் மற்றவரது மனதில் தைத்து மாறாத புண்ணாகி அந்தப் புண்ணை ஆறவிடாமல் அவரும் பாதுகாக்க, உறவு சிதைக்கப்படுகிறது. இரண்டாவது ரகம் கோபத்தை அடக்குபவர்கள். இவர்கள் கோபத்தை வெளியே கொட்டத் தெரியாதவர்கள். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் உள்ளவர்கள். கோபம் வரும்; ஆனால் கத்தமாட்டார்கள். இவர்களது கோபம் உள்ளே இருந்துகொண்டு அவர்களைக் குடையும். மனதில் அந்த வருத்தங்களின் பாரம் அதிகரித்துக்கொண்டே போகையில், பளு தாங்காமல் ஒரு நாள் எரிமலைபோல் வெடித்து அவ்வளவு வருத்தத்தையும் கொட்டுவார்கள். எதிராளி ‘இவ்வளவையும் உள்ளே ஏன் வைத்துக் கொண்டிருந்தாய்?’ என்று அதிர்ந்து நிற்பார். அல்லது அவ்வளவு கோபமும் ஒரு சிறிய நிகழ்வுக்குப் பெரிய எதிர்வினையாக வெளிப்படும் (இடம்பெயர்த்துபவர்கள்). மற்றவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஒருவரது கோபம் உறவைக் கெடுப்பதற்கு முன் அவரது உடல், மன நலத்தைச் சீரழிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லதல்ல. சமாளிப்பதுதான் ஆக்கபூர்வமாகச் செயல்பட உதவும். முதலில் கோபம் வரும்போதே ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். அடுத்து உடனே பேசுவதை ஒத்திப்போட வேண்டும். அதைச் செயல்படுத்த, அங்கிருந்து நகர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் (அப்போது வாய்பேச வாய்ப்பில்லை). ஒரு சில விநாடிகளில் கோபம் தணியும். இருவரது கோபமும் தணிந்தபின், தீர்வைநோக்கி மற்றவரைக் குறைகூறாமல் பேசவேண்டும். மேலும் சில விவரங்கள் அடுத்த அத்தியாயத்தில்…
- பிருந்தா ஜெயராமன்,
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.