

நான் நான்காம் வகுப்புப் படித்தபோதே என்னையும் என் அக்காவை யும் எங்கள் கிராமத்து நூலகத் தில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டவர் எங்கள் தந்தை நடேச நாராயணன். எண்பதுகளில் தொடங்கிய புத்தக வாசிப்பு இன்று வரை தொடர்கிறது.
அப்போது எங்கள் உறவினர் ஒருவர் செய்தித்தாள் முகவராக இருந்தார். வெளியூரிலிருந்து காலை ஏழு மணி பேருந்து மூலம் வருகிற குமுதம், ஆனந்த விகடன், ராணி, குங்குமம், கல்கி போன்ற வார இதழ்களை அவரது வீட்டுக்குக் கொண்டுவந்து எட்டு மணிக்கு வீடுகளுக்கு விநியோகிப்பார். ஏழு மணி முதல் எட்டு மணி வரையுள்ள அந்த ஒரு மணி நேரம்தான் எங்களுக்கு மிகவும் பிடித்த நேரம். நான், என் அக்கா, அந்த உறவினரின் மகள் ஆகிய மூவரும் போட்டி போட்டுக்கொண்டு, வார இதழ்களில் வெளிவரும் தொடர்கதைகளைப் படிப்போம். விரைந்து படிக்கும் பழக்கம் எங்களுக்கு அப்போதுதான் வந்ததாக நினைக்கிறேன்.
கல்கி, சாண்டில்யன் போன்றோர் எழுதிய வரலாற்று நாவல்களை நூலகத்திலிருந்து வாங்கிப் படிப்பேன். அந்த நாவல்களைப் படிக்கும்போது அடுத்து என்ன ஆகுமோ என்கிற ஆர்வமிகுதியால், சாப்பிடும்போதுகூடப் படித்து அதற்காக அம்மாவிடம் திட்டு வாங்கிய நாள்கள் மறக்க முடியாதவை.
லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, ரமணிசந்திரன் போன்றோர் எழுதிய நாவல்களையும் ஆர்வத்தோடு படிப்பேன். கதை படிக்கும் ஆர்வம் அதிகரித்தபோது ராஜேஷ்குமார், சுபா போன்றோர் எழுதிய பாக்கெட் நாவல்களைத் தோழிகளிடமிருந்து வாங்கிப் படித்திருக்கிறேன். பாலகுமாரன் எழுதிய ‘இரும்பு குதிரை’ நாவலைப் படித்தபோது ஏற்பட்ட தாக்கம் இன்றும் என்னிடம் உள்ளது. நான் எழுதிய முதல் புத்தகமான, ‘சாரதா டீச்சரின் நாட்குறிப்பு’ நூலில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். ‘சவுக்கடி பட்ட இடத்தை நீவிவிடத் தெரியா குதிரை, கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகம் தானென்று’ என்கிற அவரது வார்த்தைகள்தாம், துக்கம், வலி, வேதனை போன்றவற்றைச் சுமையாக நினைக்காமல் அவற்றைத் தாங்கக்கூடிய பக்குவத்தை என்னுள் விதைத்தன.
கட்டுரைகளை எழுதவும் என்னை ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, கருத்தாளராக அறிமுகப்படுத்தி எனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்த ஆக்கமும் ஊக்கமும் அளித்தவை புத்தகங்களே.
- கலாவல்லி அருள், திருக்காலிமேடு, காஞ்சிபுரம்