

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதத்தினர் பெண்கள் எனவும், உலகிலேயே அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடு இந்தியா எனவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் விமானிகளாகப் பணியாற்றிவருவதாக அத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான விமானிகள் தேவைப்படலாம் என்பதால் நாடு முழுவதும் 53 தளங்களில் இயக்கப்பட்டுவரும் 35 அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனங்களில் விமானிகளுக்கான பயிற்சி தீவிரப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பில் பாரபட்சம்
வேலைவாய்ப்பில் பெண்களைப் புறக்கணித்து ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் கரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு அலுவலகம் பாதி, வீட்டிலிருந்து வேலை மீதி என கலப்பு முறை பின்பற்றப்படும் இந்தச் சூழலிலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவதில்லை என அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள க்ரியா பல்கலைக்கழகம் கலப்பு முறையில் பணியாற்றும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கலப்பு வேலை முறையில் பெண் களுக்கான ஊதியம், பணி உயர்வு ஆகிய வற்றில் பின்னடைவு இருப்பதாகப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திறம்பட வேலை செய்தாலும் பணி உயர்வுகளில் இன்னும் பாரபட்சம் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பிரிவில் திருநங்கைகளுக்குத் தடை
தடகளப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க சர்வதேசத் தடகள சம்மேளனம் தடைவிதித்துள்ளது. முந்தைய விதிமுறைகளின்படி, திருநங்கைகளின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவைப் பொறுத்து பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இப்போது விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு வீராங்கனைகள் சிலர் வரவேற்பு அளித்திருந்தாலும், திருநங்கைச் சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவையடுத்துத் திருநங்கைச் சமூகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கெனத் தனிப் போட்டிகள் உருவாக்குவது பற்றி வரும் காலத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தடகள சம்மேளனத்தின் தலைவர் செபாஸ்டின் கோ தெரிவித்துள்ளார்.
- ராகா