

உ
மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உறக்கத்திலிருந்து எழ முயன்றார். ஆனால், அய்யோ என அலறத்தான் முடிந்தது. விழிப்பு வந்ததும் யதார்த்தம் தலைகாட்டியது. இரண்டு கால்களும் இல்லை என்பதை உணர்ந்து அதிர்ந்தார். கொஞ்சம் யோசித்தபோது விபத்தின்போது ஏற்பட்ட விபரீதத்தால் மருத்துவர்கள் அதைத் துண்டித்துவிட்டது புரிந்தது.
இனி அவர் எங்குமே போக முடியாது. ஊர் சுற்றிவந்த உல்லாசத் தென்றலாக இருந்த அவர், விபத்தால் ஒரே அறையில் முடங்கிப்போன உலவாத் தென்றலாக ஆகிவிட்டார். கீழ்கோர்ட்டில் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் கோரி வழக்குத் தொடர்ந்தார் உமா. அந்த வழக்கு எதிர்பார்க்கப்பட்ட திசையில் சென்றது. கீழ் கோர்ட்டு, விபத்து நடந்த தேதியில் உமாவுக்கு நிரந்தர வேலை இல்லை என்ற அடிப்படையில் அவரது மாத வருமானம் ரூ.4000 என்று மதிப்பிட்டது. உமா விபத்துக்கு முன் டியூஷன் டீச்சராக இருந்தார். டியூஷன் மையங்களின் கட்டணத்தை வைத்துப் பார்க்கும்போது உமா தனது இழப்பீட்டு மனுவில் மாத வருமானமாகக் குறிப்பிட்டிருந்த ரூ.6000 என்பதே குறைவான மதிப்பீடுதான். அவரது அனுபவத்தால், ஏட்டறிவால், அறிவுத்திறனால் தன்னிடம் டியூஷன் படிக்கும் குழந்தைகள் மத்தியில் அவர் ஒரு அபிமான ஆசிரியையாகவே மாறியிருந்தார். இந்தப் பின்னணியில் அவர் 6000 ரூபாய்க்கும் அதிகமாகவே சம்பாதித்திருக்கச் சாத்தியம் உண்டு.
நிரந்தர வருமானம் இல்லாதவர்களின் வருமானத்தை மதிப்பிடுவது எப்படி? பொருட்களை வாங்கும் சக்தியின் அடிப்படையிலா அல்லது விலைவாசியுடன் தொடர்புடைய செலவுகளின் அடிப்படையிலா? பெரும்பாலும், ஒருவரது செலவுகளின் அடிப்படையில் செய்யப்படுவதே நியாயமான பொருளாதார அளவீடாக இருக்கமுடியும். உமா, அவ்வளவாக வருமானம் இல்லாத தன் தந்தைக்குப் பொருளாதார உதவி அளித்திருக்கிறார். தன் படிப்புக்கும் தன் மகளின் படிப்புக்கும் கணிசமான தொகையைச் செலவிட்டிருக்கிறார். இந்தச் செலவுகள் உமாவின் பொருளாதார சுதந்திரத்தின் அடையாளம் மட்டுமல்ல, அவர் தனக்காக, மகளுக்காக, தந்தைக்காக, குடும்பத்துக்காகச் செலவிட்ட பணத்தைச் சம்பாதித்திருக்கிறார் என்றுதானே பொருள்கொள்ள முடியும்?
இந்த வழக்கைப் பொருத்தவரை கீழமை நீதிபதி இழப்பீட்டைக் கணக்கிடுவதில், சராசரியான மனப்பாங்குடன் செயல்பட்டு 13 லட்ச ரூபாய் இழப்பீடு அளித்திருந்தார். ‘சமூகநிலை மதிப்பீடு’ என்ற அளவுகோலின் அடிப்படையில் நீதிமன்றம் இழப்பீட்டைக் கணக்கிட்டிருந்தால் அந்தத் தொகை உடல் உறுப்பு இழப்பையும் அதன் பின்விளைவுகளையும் எதிர்கொள்ள ஓரளவு ஏதுவாக இருந்திருக்கும். எந்த இழப்பீடும் இழப்புக்கு ஈடல்ல; பண இழப்பீடு மன இழப்பை ஈடுகட்டிவிடுமா?
எனவே, மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் சமூகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் முதலில் உமாவின் இளம் வயதைக் கணக்கில்கொண்டது. அவர் தன் கல்வித் தகுதியை மேம்படுத்திக்கொள்ள முயற்சி எடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் பயிற்சி பெற்றுவந்தார். நிரந்தர ஆசிரியர் வேலைக்கும் தன்னைத் தகுதிப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவருக்கு மறுமண வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. அவரை முடமாக்கிய விபத்து அவரது மறுமண வாய்ப்பையும் சேர்த்தே முடமாக்கியது.
இந்த வழக்கில் இன்னொரு கோணமும் உண்டு. இங்கே கால்களை இழந்தவர் தாய் மட்டுமா? அவருடைய குழந்தையும்தானே. அம்மாவின் முந்தியைப் பிடித்துக் கால்களைச் சுற்றிவந்தும், கால் மீது சாய்ந்து பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தூங்கும் குழந்தை இப்போது அம்மாவின் கால்களை எங்கே தேடும்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்பட பாடல் ஒன்றில் ‘கையும் காலும்தானே மிச்சம்’ என்று சொல்வார். அதாவது வறுமையிலும் உடலோடு ஒட்டி நிற்பவை கையும் காலும்தான் என்று பொருள். ஒரு பெண் தன் மகளின் வளர்ச்சி, படிப்பு, பூப்பெய்தும் பருவத்தில் தேவைப்படும் அரவணைப்பு, அவள் திருமணத்துக்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பெண்ணின் பிரசவம் இப்படித் தன் குழந்தையின் வாழ்க்கை முழுவதும் தன் கால்களால் ஓடி ஓடி உழைப்பார். அப்படிச் செய்ய வேண்டிய தாய் தன் காலை இழந்தால் அதன் பாதிப்பு, அம்மாவின் சேவையையும் பங்களிப்பையும் இழந்து நிற்கும் மகளுக்கும்தானே.
சென்ற வாரக் கட்டுரையில் வீட்டு வேலைக்கு உரிய மதிப்பீட்டை இந்தச் சமூகம் மறுப்பது பற்றிப் பார்த்தோம். அதையும்தாண்டி ஒரு குடும்பத்தில் தாயாக, தலைவியாக இருப்பவர் பெண். அன்புடனும், அரவணைப்புடனும், கண்டிப்புடனும், பண்புடனும், பாசத்துடனும் குடும்பத்தை நடத்துகிறவர், அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் பணியைச் செய்ய இயலாமல் போகும்போது இழப்பின் தாக்கம் அவருக்கு மட்டுமல்ல, தாய்மடி சுகம் இழந்த அவருடைய குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான். இந்த வழக்கிலும் ஒரு தாயால் மகளுக்கு உணர்வுரீதியான ஆதரவையும் தேவைகளையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த இயலாமைக்குக் காரணமான விபத்துக்கான இழப்பீடு, தாய்க்கும் மகளுக்கும் சேர்ந்தே அல்லவா அளிக்கப்பட வேண்டும்? ஒரு இளம்பெண்ணுக்குத் தேவையான தாயின் அன்பையும் அருகாமையையும் நிச்சயம் புறந்தள்ளிவிட முடியாது.
எனவே, உயர் நீதிமன்றம் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டும் மறுமண வாய்ப்பை இழந்ததற்காகவும் மொத்த இழப்பீடாக 31 லட்ச ரூபாய் அளித்தது. சமகாலச் சமூகத்தில் பெண்களின் பன்முகப் பரிமாணம் நாள்தோறும் திசைகள்தோறும் விரிவடைந்துவருகிறது. அந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ற மாதிரி பெண்களின் பணியும், பங்களிப்பும், குடும்பம், சொந்தங்கள் போன்ற சின்னஞ்சிறு வட்டங்களிலிருந்து வளர்ந்து அதற்கும் அப்பால் வானமே எல்லையாக வளர்ந்துவருவது ஆரோக்கியமான வளர்ச்சி!
(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு: judvimala@yahoo.com