

விநாயகர் பலருக்கு இஷ்ட தெய்வம். விநாயகர் சிலைகளை ‘சுட்ட’ கதைகளும் பலரிடம் இருக்கும். உதகை விஜயநகரில் வசிக்கும் நிஷாலி மஞ்சுபாஷினியின் வீட்டினுள் நுழைந்தால் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் விநாயகர், விதவிதமான வடிவங்களில் காட்சி தருகிறார்.
காகிதம் முதல் வெள்ளி வரை அனைத்து வகையான விநாயகர் சிலைகளையும் காணமுடிகிறது. இவை அனைத்தும் மூன்று ஆண்டுகளில் சேகரித்தவை என பெருமிதத்துடன் சொல்கிறார் நிஷாலி. நிஷாலியின் இந்த விநாயகர் பக்திக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
தலை காத்த விநாயகர்
மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது சொந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றபோது, ஒரு நாள் நிஷாலிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயங்கியவரின் தலை, கீழே கிடந்த கல்லில் மோதும் தருணத்தில், அவரது கழுத்திலிருந்த விநாயகர் டாலர் கல்லில் மோதி, நிஷாலியின் தலையைக் காத்துள்ளது. சம்பவத்தில் டாலர் சுக்குநூறாக உடைந்துள்ளது. விநாயகர் டாலர் இல்லாவிட்டால் தலை கல்லில் மோதி அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும், தன்னை விநாயகரே காப்பாறினார் எனவும் சொல்கிறார் நிஷாலி. ஊராரும் நிஷாலிக்கு விநாயகர் கிருபை இருப்பதாகச் சொல்ல, அன்று முதல் விநாயகரின் தீவிர பக்தையாக மாறிவிட்டார். விநாயகர் சிலைகளைச் சேகரிக்கும் வேலையையும் தொடங்கிவிட்டார்.
காகிதம், பலவகை உலோகங்கள், பீங்கான், தேங்காய் நார் என ஏராளமான பொருட்களில் கீ செயின், மோதிரங்கள், டாலர்கள், திரைச் சீலைகள், விளக்குகள் என பலவித வடிவங்களில் நிஷாலியின் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறார் விநாயகர். நிஷாலியின் வீட்டில் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அணிவகுத்து, பார்க்கிறவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
நண்பர்களின் பரிசு
பாக்கில் உருவாக்கப்பட்ட விநாயகர் அரிதானது என நிஷாலி சொல்கிறார். இவரது சேகரிப்பு குறித்து நேரடியாகவும், முக நூல் வாயிலாகவும் அறிந்தவர்கள் இவருக்குப் பல விநாயகர்களை வாங்கி அனுப்பியுள்ளனர். இதில் துபாயிலிருந்து ஒருவர் மண்ணால் ஆன பாம்பு வகை விநாயகர் சிலையை அனுப்பியுள்ளார். உலகிலேயே முதன் முறையாக விநாயகர் உருவம் பதித்த புடவையைத் தன்வசமாக்கியுள்ளதாக பெருமை கொள்கிறார்.
இந்தச் சேகரிப்புக்காகத் தனியாக ஒரு அறையை ஒதுக்கி, அதில் அனைத்து விநாயகர்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த அறையில் தனது பெற்றோரைக்கூட நிஷாலி அனுமதிப்பதில்லை.
இவரது சேமிப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் இவரது பெற்றோர் ஹரிதாஸ் மற்றும் உஷாதேவி.
“மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 80 ஆயிரம் விநாயகர் சிலைகளை 60 ஆண்டுகளாகச் சேரித்திருக்கிறார். இதை முறியடித்து ஒரு லட்சம் விநாயகர் சிலைகளைச் சேகரித்து கின்னஸ் சாதனை படைப்பதே என் லட்சியம். திருமணமான பின்னர் இந்த விநாயகர் பொக்கிஷங்களை என் தாய்வீட்டு சீதனமாக என்னுடனேயே எடுத்துச் செல்வேன்” என்கிறார் நிஷாலி.