

முத்தாத்தா, மகன் கடம்பனுக்குக் கல்யாணம் முடித்து வைத்தாள். அவள் பிறந்ததிலிருந்து நெல்லுச் சோறே சாப்பிட்டதில்லை. மகனும் கேப்பை, தினை, சாமை என்றுதான் சாப்பிட்டிருக்கிறான். அந்தக் காலத்தில் நெல்லுச் சோறு என்பது மிகவும் அரிதாகக் கண்ணுக்கும் கைக்கும் காணாததாயிருந்தது. முத்தாத்தா மகனின் கல்யாணத்தில் அவசரமாக இங்கும், அங்குமாய் அலைந்தாலும் நெல்லுச் சோறு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவள் நெஞ்சில் மழைக் காலத்துத் தட்டான்பூச்சியாக சிறகு விரித்து அலைந்தது.
ஒருவழியாக புதுமணத் தம்பதியை மறுவீட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு அவசரமாக ஓடிவந்தாள். ஆனால், பானையில் சோறு இல்லை. அப்போ தெல்லாம் மண் பானையில்தான் சோறு வைப்பார்கள். வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளிகள் இருக்கிற சோற்றையெல்லாம் எடுத்துப்போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளுக்கு இருந்த ஆசையில் அவர்கள் தட்டைக் கூடப் பிடுங்கிச் சாப்பிடுவோமா என்று இருந்தது. ஆனால், ‘நாம் கல்யாண வீட்டுக்காரி, அப்படிச் சாப்பிட்டால் அது அசிங்கமாகிவிடும். இனி மருமகள் இங்கே தனிக்குடித்தனம் வைப்பாள். அப்ப எப்படியும் நெல்லுச் சோறு காய்ச்சத்தான செய்வாள். அப்ப சாப்பிட்டுக்கிடுவோம்’ என்று பேசாமல் இருந்துவிட்டாள்.
தனிக்குடித்தனத்திற்குப் புருசனோடு மருமகள் அவர்களின் வீட்டுச் சொந்தக்காரர்களைக் கூட்டி வந்தாள். வீட்டிற்குள் நுழைந்ததுமே, “அயித்தே வீட்டுல ஒரு விறகு இல்ல. போயி பெறக்கிட்டுவா” என்று அனுப்பி வைத்தாள். வயதான காலத்தில் ஓடை, வேலி என்று விறகு பெறக்கி வருவதற்குள் தவியாய் தவித்துப் போனாள் முத்தாத்தா. வயிற்றுப் பசி அவளுக்குக் கண்ணைக் கட்டியது.
“தாயி வவுறு பசிக்கு. இம்புட்டு சோறு போடு” என்றாள். “சோத்தவெல்லாம் வந்த விருந்தாளிக தின்னுட்டுப் போயிட்டாக. இந்தா வெது வெதுன்னு கூழும், கத்தரிக்கா வெஞ்ஞனமும் இருக்கு, சாப்பிடு” என்றாள்.
பாவம் முத்தாத்தா நெல்லுச் சோறையே நினைத்துக்கொண்டு வந்தவள் அப்படியே மலைத்துப் போய் வட்டிலில் வைத்த கூழையும் குடிக்காமல் சுருண்டு மூலையில் படுத்துவிட்டாள். மகனுக்குக் கல்யாணமாகி இரண்டு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. முத்தாத்தாவிற்கு வெறும் சோளச்சோறு, கம்மஞ்சோறு, கூழ்தான். “என்ன தாயீ நெல்லுச்சோறே நம்ம வீட்டுல காய்ச்சலயா?” என்று இவள் கேட்க மருமகளும், “நீ தினமும் நெல்லுச்சோறுதானே சாப்பிட்டுகிட்டு இருக்க. இனி என்ன புதுசா நெல்லுச்சோறு?” என்றதும் முத்தாத்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாள் கடம்பன், “எம்மா, இன்னைக்கு நானு விரதம். நானு போயி குளிச்சிட்டு வாரேன். நீ என்கூட இருந்து விரதமிடு” என்றான். அவளும் சரி என்றாள். விரதமிடும்போது மருமகள் இரண்டு பேர் இலையிலும் நெல்லுச்சோறை அள்ளி வைக்க முத்தாத்தாவிற்கு சந்தோசம் பொறுக்கவில்லை. “ஏலேய் கடம்பா... இதாடா நெல்லுச்சோறு. நான் இம்புட்டு நாளும் கண்ணாலேயே பாக்கலயே” என்று வெறும் சோறை அள்ளி அள்ளித் திங்க விக்கல் அவள் தொண்டையை அடைத்தது.
(தொடரும்)
கட்டுரையாளர் எழுத்தாளர்.