

எது அழகு? மனிதனின் முகமா, உடையா, நடையா, நிறமா, உடல்வாகா, சொல்லா, செயலா, சிந்தனையா? இதற்குப் பலரும் அவரவர் பார்வைக்கு ஏற்ப பதில் கூறினாலும் அடிப்படையில் எது அழகாகப் பார்க்கப்படுகிறது? முகமும் உடலும்தானே. இயற்கை நமக்கு அளித்த உடலையும் முகத்தையும் எத்தனை பேர் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்? ஒப்பனைதான் நமக்கு அழகு தரும் என்கிற எண்ணம் அனைவர் மனத்திலும் பதிந்துவிட்டது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், படங்கள்கூட அப்படிப் பதியவைக்கின்றன.
ஒரு பெண்ணோ, ஆணோ சிவப்பாக இருந்தால்தான் அழகு; அப்போதுதான் அவர்கள் தன்னம்பிக்கையோடு இருப்பார்கள் எனக் காட்டப்படுகிறது. முகப்பருக்கள் இருக்கிற பெண் தாழ்வு மனப்பான்மை உடையவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். பற்களில்கூட வரிசையாக இல்லாவிட்டாலும் வெள்ளையாக இருப்பதுதான் அழகு எனக் கூறப்படுகிறது. மஞ்சள் நிறம் கறையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் பற்கள் முழு வெள்ளையில் இருப்பது இயல்பு அல்லதானே. கால்களில், கைகளில் கருமையோ முடியோ இருந்தால் அழகல்ல என்றே பார்க்கப்படுகிறது. அழகு நிலையங்களுக்குச் செல்லாத பெண்கள்கூட வீட்டிலேயே கடலை மாவு, பயத்த மாவு, தயிர், தக்காளி போன்றவற்றை வைத்து முகத்தைப் பொலிவுமிக்கதாக மாற்ற முயல்கிறார்கள்.
உடல் எடை குறைவாகவும் அதிக உயரத்தோடும் இருப்பதால் நிறைய கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மையோடு வளர்ந்த எனக்கு, அவற்றையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கடப்பதற்குப் பல வருடங்கள் ஆகின. ஆனால், என் உடலும் முகமும் அழகாக இல்லை என்று நான் நம்பவைக்கப்பட்டாலும் அதைச் சரிசெய்ய ஒப்பனையையோ, அழகு நிலையங்களையோ நான் நாடவில்லை. என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளவே விரும்பினேன். மனிதரின் முகத்தில் அல்லாமல் அவர்களின் குணத்தில் அழகைத் தேடினேன். அதுவே அழகு என நம்பினேன்.
ஆனால், எனக்குத் தெரிந்த ஏழு வயதுச் சிறுமியின் பேச்சு என் எண்ணங்களைக் கேள்விக்குறி ஆக்கியது. அந்தச் சிறுமியைக் குழந்தைகள் கூடுகைக்குத் (கிட்ஸ் பார்ட்டி) தயார்படுத்திக் கொண்டிருந்தேன். அவளுக்குத்தான் அது முக்கியமான நாள் என்பதால் என்னை அலங்கரித்துக்கொள்ள தோன்றாமல் அவளைத் தயார்படுத்துவதில் மும்முரமாக இருந்தேன். அப்போது அவள், அவளை அழகுபடுத்திய நான் கலைந்த தலையும் கசங்கிய ஆடையுமாக இருப்பதைச் சுட்டிக்காட்ட நான் திகைத்தேன். அந்தக் குழந்தையின் மனத்தில் அழகைப் பற்றி இப்படியொரு எண்ணத்தைப் பதியவைத்தது யார் என்கிற கேள்வி அந்த நொடியிலிருந்து மனதை அரிக்கத் தொடங்கியது. ஒப்பனை இல்லா முகம் அழகு இல்லை; அழகான ஆடை, உதட்டுச் சாயம், கண் மை, நகச் சாயம்தான் தன்னை அழகாகக் காட்டும் என ஏழு வயதுச் சிறுமியை நம்பவைத்த சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பது எனக்கு வேதனையளித்தது.
இயற்கையான நிறத்தையும் உடல் அமைப்பையும் ஏன் மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? கறுப்பு நிற உடையும் பொருளும் அருமையானதாகக் (கிளாஸிக்) கருதப்படுகின்றன. ஆனால், அதை மனித நிறத்தில் ஏன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை? கருமை அழகில்லையா? பொருள்களில் அழகைத் தேடுவதைவிட வாழ்வின் நிதர்சனத்தில் அழகைத் தேடினால்தான் நிம்மதி கிடைக்கும். வயதான மனிதர்களுக்கே இன்னும் அழகின் அர்த்தம் தெரியவில்லை. இதில் சிறு பிள்ளைக்கு என்ன புரியப்போகிறது என்றே தோன்றுகிறது.
- ரா. காயத்ரி, புதுக்கோட்டை.