

பிரபல உணவு விநியோக நிறுவனங்களின் சீருடையணிந்து இருசக்கர வாகனங்களில் நம்மைக் கடந்து செல்லும் பெண்களை அண்மைக்காலமாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் டெலிவரி வுமன்கள் கணிசமாக இருக்கின்றனர். ரசிகபிரியா அவர்களில் ஒருவர். லட்சியத்தை அடைவதற்கான பாதை கரடுமுரடாக இருந்தாலும் இலக்கு மட்டுமே கண்களுக்குத் தெரிய வேண்டும் என்று தனக்குத்தானே விதிகளை வகுத்துக்கொண்டுள்ளார் ரசிகபிரியா. வங்கி அதிகாரியாக ஆக வேண்டும் என்பதை நெடுநாள் கனவாகக் கொண்டிருக்கும் அவர், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றின் உணவு விநியோகப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
ரசிகபிரியா, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த வடக்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். வறுமையுடன் சரியில்லாத குடும்பச் சூழலும் சேர்ந்து வாட்ட, படிப்பை இறுகப் பற்றிக்கொண்டார். இளங்கலை கணிதம் முடித்தவர் தனியார் பள்ளியொன்றில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். வங்கிப் பணியில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருந்தவர் வங்கித் தேர்வுக்குப் பயிற்சிபெற கோவைக்கு வந்தார். அறை வாடகை, பயிற்சிக் கட்டணம் போன்றவற்றைச் சமாளிக்க ஏதாவது வேலைக்குச் செல்ல நினைத்தார். அப்போது உணவகம் ஒன்றில் நின்றிருந்த டெலிவரி வுமன் ஒருவரைப் பார்த்தார். “அந்த அக்காவைப் பார்த்தபோது அவரைப் போலவே டெலிவரி வுமன் வேலையைச் செய்யலாம் என்று நினைத்தேன். அவரை அணுகி வேலை பற்றிய விவரமெல்லாம் கேட்டேன். பிறகு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். அங்கே ஆறு மாதங்கள் பணியாற்றிவிட்டுப் பிறகு இன்னொரு நிறுவனத்துக்கு மாறிவிட்டேன். வேறு எந்த வேலையாக இருந்தாலும் இந்த அளவுக்குச் சுதந்திரத்துடன் இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. இதில் யாருடைய இடையீடும் இருக்காது. நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்துக்கு ஆர்டர் எடுக்கத் தொடங்கலாம்” என்று சொல்லும் ரசிகபிரியா காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை டெலிவரி செய்கிறார். உணவு டெலிவரிக்காக இருசக்கர வாகனத்தில் ஒரு நாளுக்கு 200 கி.மீ., பயணம் செய்கிறார். இடையில் கிடைக்கிற நேரத்தில் வங்கித் தேர்வுக்காகப் படித்துவருகிறார்.
மரியாதையான காதல்
“வரப்போகும் தேர்வுக்கு நன்றாகத் தயாராக வேண்டும். அதனால், ஏப்ரல் மாதம் முதல் காலையில் தேர்வுப் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு மாலை மூன்று மணியிலிருந்து டெலிவரி வேலையைச் செய்யலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லும் ரசிகபிரியா, இதுவரை எந்த வாடிக்கையாளரும் தன்னிடம் கண்ணியக் குறைவாகவோ அநாகரிகமாகவோ நடந்துகொண்டதில்லை என்கிறார்.
“சிலர் மட்டும் மாடி ஏறி வரச் சொல்லுவாங்க. ஆனா, நிறைய பேரு அவங்க குழந்தைகளைக் கீழே அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க. எனக்கு நன்றி சொல்லும்படி சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சொல்லி அனுப்புவாங்க. அந்தக் குழந்தைகள் ‘தேங்க்ஸ்’னு சொல்லும்போது அந்தப் பெற்றோரின் குழந்தை வளர்ப்பை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சொல்பவர் வாயில் காப்பாளர்களிடம் பல முறை கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்.
“பொதுவா செக்யூரிட்டிங்கதான் கொஞ்சம் கோபமா நடந்துப்பாங்க. அவங்களோட மன அழுத்தத்தையெல்லாம் நம்மைத் திட்டுவதன் மூலமா கொட்டித் தீர்த்துடுவாங்க. அவங்க சூழலைப் புரிஞ்சிக்கிட்டு நான் எதையும் பெருசா எடுத்துக்க மாட்டேன்” எனப் புன்னகைக்கும் ரசிகபிரியா, ஆடியோ புத்தகங்களையும் தன்னம்பிக்கை சொற்பொழிவையும் அதிகம் கேட்கிறார்.
“வாசிப்பு ரொம்ப முக்கியம். பிரச்சினைகள் என் கழுத்த நெரிச்சப்ப எல்லாம் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தேன். அதனாலேயே மனத்தை ஒருமுகப்படுத்தும் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பேன்” எனச் சிரிப்பவர், வங்கிப் பணியில் சேர்ந்த பிறகே திருமணம் என்கிறார்.
“கல்யாணத்துக்குக் காதல் முக்கியம் இல்லையா? நம்ம மேல ஒருத்தருக்கு மரியாதை இருந்தால்தான் காதல் வரும். என் சொந்தக்கால்ல நான் நின்னாதான் பிறருக்கு என் மேல மரியாதை வரும். அதற்கான வேலையைத்தான் நான் இப்ப செஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்று சொல்பவர், ஆங்கிலச் சொற்களின் பயன்பாடு குறித்து யூடியூப் அலைவரிசை ஒன்றையும் நடத்திவருகிறார்.