

கணவன் - மனைவி பந்தம் நாளடை வில் பலப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், சில குடும்பங்களில் அது நாளாக நாளாக நலிந்துபோகிறது. இது அவர்களுக்குப் புரிந்தாலும், பலப்படுத்தும் முயற்சியில் இருவருமே ஈடுபடுவதில்லை.
உணர்வுபூர்வமான தேவைகள் நிறைவேறாமலேயே இருக்க, இருவரில் ஒருவருக்கு வேறொரு உறவு ஏற்பட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. திருமண உறவு முறிவதற்கு இது வழிவகுக்கும். இந்த நிலை வராமலிருக்க, உறவை உறுதிசெய்யும் விதமாகத் தொடர்ந்து புதுப்பிக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட வேண்டும்.
உணர்வுத் தேவைகள் நிறைவேறினால்தான் அன்பு/காதல், மரியாதை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சேர்ந்த பலமான அடித்தளம் போன்றவை அமையும் என்று பார்த்தோம். அதன் மீது எழுப்பப்படும் நான்கு தூண்கள் - (உணர்வுரீதியான) நெருக்கம், (ஆரோக்கியமான) பாலியல் உறவு, (இருவரது புகுந்த வீடு, நண்பர்கள் அடங்கிய) சமுதாய உறவு, குடும்பப் பொருளாதாரம் ஆகியவை வலுவாக இருந்தால், இணக்கமான மண வாழ்க்கை எனும் கூரை புயல், பூகம்பம் ஆகிய விபத்துக்களைத் தாங்கக்கூடிய உறுதித்தன்மையுடன் விளங்கும்! இதோ கதிர் - மலர் தம்பதி நமக்குக் கைகொடுக்கிறார்கள்.
கீழ்க்கண்ட உரையாடல்கள் மூலம் நெருக்கம், மற்ற உறவுகள், பொருளாதாரம் மற்றும் படுக்கையறை உறவு ஆகிய நான்கு தூண்களில் ஏற்படும் விரிசல்களை விளக்க முற்பட்டுள்ளேன். இருவருக்குள் வரக்கூடிய இடைவெளியை அதிகரிக்கும் காரணிகள் இவை. கடுஞ்சொற்களின் பரிமாற்றம், புறக்கணிப்பு, குழந்தைகள் மூலம் தகவல் சொல்லுதல், படுக்கை அறையில் ஒத்துழையாமை போன்றவை தொடர, ருசியற்ற வெறுமையான வாழ்க்கைப் பயணம் தொடரும்.
இதைத் தவிர்க்க, இருவரும் ஆரம்பத்தி லேயே முதலுதவியாகக் காயங்களுக்கு மருந்து போடவேண்டும். கோபத்தைச் சரியாகக் கையாண்டு கனிவான, இதமான முறையில் பேசப் பழக வேண்டும். குற்றம் சொல்வதைத் தவிர்த்துத் தீர்வுகளை நோக்கிப் பேச்சுவார்த்தை நகர்த்தப்பட வேண்டும். இந்த முயற்சியில் தொலைந்த சமத்துவமும் மரியாதையும் அன்பும் மீட்கப்படும்!
(மனம் திறப்போம்)
- பிருந்தா ஜெயராமன்
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்.
ashabrinda@gmail.com