

நாம் முன்னேறி விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் 21ஆம் நூற்றாண்டின் குடும்ப அமைப்பிலேயே ஆணுக்கு நிகரான முக்கியத்துவமும் அங்கீகாரமும் பெண்ணுக்குக் கிடைக்கப்பெறாத நிலையில், பெண்ணடிமைத்தனம் இருள்போல் சூழ்ந்திருந்த காலத்தில் பெண்களுக்கு விடிவென்பது தூரத்து வெளிச்சமாகக்கூட இல்லை. ‘சமூகக் கட்டுப்பாடு’ என்னும் புதைகுழிக்குள் தள்ளப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த பெண்கள் கல்வி, கலை, இலக்கியம், தொழில், அரசியல் என ஒவ்வொரு துறையிலும் தங்களுக்கான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டியிருந்தது. சில நேரம் ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் அவலத்தைக்கூடச் செயல்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஆண் வேடமிட்டுப் பெண்கள் போரிட்டதாகவும் படைத்தலைமை வகித்ததாகவும் ஆணின் பெயரில் இலக்கியம் சமைத்ததாகவும் எத்தனையோ கதைகள் நம்மிடையே உண்டு. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தகூடப் பெண் என்கிற அடையாளம் தடையாக இருந்ததைத்தான் இவை உணர்த்துகின்றன.
நிதர்சன உலகத்தில் ஆணாதிக்கத்தை எதிர்த்து சமர் புரிந்த பெண்களைத் தற்போது டிஜிட்டல் உலகம் என்னும் மாய உலகத்தில் வாளேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளி யிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பாலினப் பாகுபாடு இந்த மெய்நிகர் உலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இங்கே பாலினரீதியாகப் பெண்கள் ஒடுக்குதலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டத்துக்கான கருப்பொருளை (#DigitALL) ஐ.நா. அறிவித்திருந்தது. பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில் தொழில்நுட்பத்தில் புதுமையைப் புகுத்துவதுதான் இதன் நோக்கம்.
இறுகும் எல்லைக்கோடுகள்
‘ஆக்ஸ்ஃபாம்’ நிறுவனம் நடத்திய ஆய்வின்படி 2021இல் தங்களுக்கெனத் தனியாக செல்போன் வைத்தி ருக்கும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 31 சதவீதம் மட்டுமே. இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடக் குறைவு. இணைய தொழில்நுட்பத்தைப் பெண்கள் பயன்படுத்துவதை அதிகரிப்பது குறித்து விவாதிக்க வேண்டிய அதேநேரம், இணைய வெளியில் நிகழும் பாலினரீதியான வன்முறையையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
பொது வெளியிலோ இணைய வெளியிலோ பெண்ணுக்கு எதிராக எது நிகழ்ந்தாலும் ‘நீ ஏன் அங்கே போனாய்?’ என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கிறது. காலம் காலமாகப் பெண்களை நோக்கிக் கேட்கப்படுகிற கேள்வி இது. குற்றமிழைத்தவரை விட்டுவிட்டு அநீதிக்கு ஆளாக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் உலகின் மிகப் பழமையான, முனைமழுங்கிப்போன உத்தி இது. இதை வைத்துத்தான் பெண்களின் எல்லையைச் சுருக்கிவைத்திருக்கிறோம். அங்கே போகக் கூடாது, இதைப் பார்க்கக் கூடாது, அதைப் பேசக் கூடாது என்று திரும்பும் திசையெங்கும் கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்திருக்கிறோம். தங்களது சொந்த வீட்டில்கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாத நிலையில் பெண்களை வைத்துவிட்டு, அதற்குக் காரணமான ஆண்களால் பெண்களுக்கான எல்லைக்கோடுகளை எப்படிப் பெருமிதத்துடன் வரையறுக்க முடிகிறது?
ஆணுக்கு அறிவுறுத்துவோம்
ஆண்கள் அதிகமாகப் புழங்கும் வெளிகள் பெண்களுக்கு ஆபத்தானவை என்றால், அது யார்தவறு? பெண்ணைக் கண்ணியத்துடன் அணுகத் தெரியாதஆண்களை விட்டு விட்டு, ஏன் மீண்டும் மீண்டும் பெண்களுக்கே பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்? முகம் தெரியாத ஆணுடன் இணையத்தில் என்ன அரட்டை என்று பெண்ணைப் பார்த்துக் கேட்பது எளிதாக இருக்கிறது. ஆனால், தனக்குத் தெரியாத பெண்ணிடம் நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் வேறுபாடின்றி சளைக்காமல், ‘வணக்கம் தோழி, சாப்பிட்டீர்களா?’ என்று கேட்கிற ஆணை நாம் கண்டுகொள்வதே இல்லை. பொதுவான அரட்டைக்கே பெண்கள் அச்சப்படுகிற நிலையில், அறிவுத்தேடலுக்கோ அரசியல் விவாதத்துக்கோ நாம் வழி ஏற்படுத்திவைத்திருக்கிறோமா?
இணைய வெளியில் துணிச்சலுடன் கருத்துகளைச் சொல்கிற பெண்களைப் பெரும்பாலானோர் உவப்புடன் வரவேற்பதில்லை. அரசியல் கருத்துகளை கருத்தால் எதிர்கொள்ளும் திராணியற்ற ஆண்கள், கும்பல் மனப்பான்மைக்குள் வாகாக ஒளிந்து கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணை வசை பாடுகின்றனர். அந்தப் பெண்ணின் தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், நடத்தை என்று அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி கண்ணியக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.
ஆண்கள் தனியாகவோ, குழுவாகவோ, அரசியல் கட்சிகளின் பின்னணியிலோ இருந்துகொண்டு பெண்களை ‘டிரால்’ செய்வது, பெண்களின் ஒளிப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடுவது அல்லது மீம்கள் போட்டுத் தவறாகச் சித்தரிப்பது, பெண்களின் தொடர்பு எண்ணைத் தவறான தகவல்களுடன் பொதுவெளியிலும் பாலியல் இணையதளங்களிலும் பகிர்வது எனக் கீழ்த்தரமான செயல்களை இயல்பாக அரங்கேற்றுகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமை இவர்களைக் கண்டிப்பதே இல்லை.
ஒருவர் சொன்ன கருத்துக்கு அவரது நடத்தையைக் கேள்விக்குள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியென்று கேட்பதற்குப் பதிலாக, இது போன்றவர்களுக்கு இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என்று தங்கள் கீழ்த்தரமான செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பலரிடமும் ஆணாதிக்க வெறி ஊறியிருக்கிறது. ஆண்கள் தனக்குச் சாதகமான பொழுதுகளில் ஒரு பெண்ணை ‘சகோதரி..’ எனத் தேனொழுக விளிப்பதற்கும், அதே பெண் எதிர்க்கருத்தைச் சொல்கிறபோது அச்சிலேற்ற முடியாத அளவுக்குத் தரம்தாழ்ந்து விமர்சிப்பதற்குமான வேறுபாடு ஒன்றே போதும், இணையவெளியில் பெண்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
பொதுவெளியோ இணையவெளியோ எதுவாக இருந்தாலும் பெண்களைக் கண்ணியமாக நடத்தும்படி ஆண்களுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர, பெண்களின் புழங்கு வெளியைச் சுருக்குவது அறிவீனம். இதைச் செயல்படுத்தாத வரையில் நாம் பெருமிதத்துடன் முழக்கமிடுகிற சமத்துவம், சமூக நீதி, திராவிடம் உள்பட இன்ன பிற சொற்கள் எல்லாம் அர்த்தமற்றவையே.