

நம்மைச் சுற்றியிருக்கும் எளிமையான பல விஷயங்களே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன என்பதை நாம் அறிவதில்லை. அந்த எளிமைகளில் ஒன்றுதான் கோலம். தான் வரைந்த கோலத்துக்காகத் தேசிய அளவில் வெற்றிபெற்று, பிரதமரிடம் பாராட்டும் பெற்றுள்ளார் மாலதி செல்வம்.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளை ஒற்றுமை தினமாக மத்திய அரசு அறிவித்து, அதற்காக தேசபக்திப் பாடல், தாலாட்டுப் பாடல், கோலப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. அதில் நாடு முழுவதும் இருந்து 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக ஐவர் வெற்றியாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் கௌரவிக்கப் பட்டனர். அவர்களுள் புதுச்சேரியைச் சேர்ந்த மாலதி செல்வமும் ஒருவர். போட்டியில் வென்ற மாலதிக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சில் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். இந்த கோலப் போட்டியில் தென்னிந்திய அளவில் தேர்வான ஒரே நபர் மாலதிதான்.
புதுச்சேரி நகர்ப் பகுதியில் கடலையொட்டி அமைந்துள்ள முத்தியால் பேட்டையில் நெருக்கமாக அமைந்துள்ள தெருக்களுக்கு மத்தியில் எளிமையான வீட்டில் மாலதி வசிக்கிறார். கோலக் கலைக்காவே கலைமாமணி விருது உள்படப் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார்.
ஏழாம் வகுப்புப் படித்தபோதே அவர் கோலம் வரையத் தொடங்கிவிட்டார். பள்ளியில் சாமிப் படங்களை வரைவதைப் பார்த்துத் தானாகவே கோலமாக வரையத் தொடங்கினார். பின்னர் ஓவியம், கைவினைப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. புள்ளிக்கோலத்தோடு படங்களையும் அவர் வரைகிறார். பாரதி, பாரதிதாசன் தொடங்கி தேசத் தலைவர்கள் வரை பலரையும் கோலத்தில் வரைகிறார். திருமண விழாவில் மணமகள்-மணமகன் ஓவியத்தை வரைவார். அவர்களது ஒளிப்படத்தைத் தந்தால்போதும், கோலத்தில் கொண்டுவந்துவிடுகிறார்.
“ஓவியம் வரைய பிரஷ் தேவை. கோலத்துக்கு நம் விரல்கள்தாம் பிரஷ். புள்ளி வைத்த கோலம் தொடங்கி முப்பரிமாண கோலம் வரை நம் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்பப் புதியவற்றை உருவாக்கலாம். கோலம் வரைவது நம் மனநிலையோடு சம்பந்தப்பட்டது. அது பற்றிய ஆராய்ச்சியிலும் பங்கேற்றுள்ளேன். ஒருவர் வரையும் கோலத்துக்கும் உளவியலுக்கும் தொடர்புண்டு. அவர்கள் மன ஓட்டத்தைக் காலையில் வரையும் கோலத்தில் இருந்தே அறியலாம். சிக்குக் கோலம் வரைவதன் மூலம் வீட்டுப் பிரச்சினைகளுக்கான தீர்வும் கிடைக்கும். கோலத்தில் வண்ணம் நிரப்புதல், கோலம் வரையத் திட்டமிடுதல், கோலத்தை வரைந்து வியத்தல் எனக் கோலமே மனதுக்குப் புத்துணர்வு தருவதை உணர்ந்துள்ளேன். நன்றாகக் கோலம் வரைந்தால் அதன் மூலமே பொருளீட்டலாம் என்கிறார் மாலதி.
“திருமண நிகழ்ச்சிகளிலும் வேறு பொது நிகழ்ச்சிகளிலும் ஓவியம் வரைவதன்மூலம் வருவாய் ஈட்ட முடியும். அதற்குப் பயிற்சி தேவை” என்று சொல்லும் மாலதி, விரும்புவோருக்குப் பயிற்சியும் அளிக்கிறார்.
படங்கள்: எம். சாம்ராஜ்