

கலுசுலிங்கத்திற்கு ஆடு மேய்ப்பதுதான் வேலை. ஆனால், அவர் யார்கூடவும் சேர்ந்து மேய்க்க மாட்டார். பாட்டு பாடுவது என்றால் அவருக்கு எப்போதும் பிரியம். வீட்டில் வேலை செய்யும் போதெல்லாம் பாட்டு பாடுவார். அப்போது அவர் பொண்டாட்டி, மகள், மகன், மச்சான் என்று எல்லோரும், ‘வீட்டுக்குள்ள எதுக்கு ஒப்பாரி வைக்கீக? உமக்கு பாடனுமின்னா எங்கிட்டும் போயி ஒத்தையா பாடும். இங்கன கிடந்து கத்தாதீரும்’ என்பார்கள். இதனால் மனம் நொந்துபோய் வாயை மூடிக்கொண்டு வேலை பார்க்கிறவர் பாட்டுப் பாடுவதற்காகவே வெள்ளனத்திலேயே கெடைக்குக் கிளம்பிவிடுவார்.
அவர் பொழுதுக்கும் பாடுவார் என்று தெரிந்தே அவருடன் ஆடு மேய்ப்பவர்கள் எல்லோரும் எடக்குக்காக, ‘எய்யா என்கூட ஆடு மேய்க்கவாரும், சீயான் என்கூட ஆடு மேய்க்க வாரும்’ என்று நயிப்பாக பேசி கூப்பிடுவார்கள். இவருக்குத் தெரியும் அவர்கள் இவரை பாடச் சொல்லி எப்படியெல்லாம் எக்காளமும் எசக்கேடும் பண்ணுவார்கள் என்று. அதனால், ‘போங்கடா போக்கத்த பயகளா. உங்ககூட வர எனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு?’ என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ராவுகிரி மலையோரம் ஆடுகளைப் பத்திக்கொண்டு சென்றுவிடுவார். அங்கே ஒரு சனம் இருக்காது. தரவும், புற்களும், மரங்களும், நிறைந்திருக்கும்.
மிகச் சரிவான மலைதான். மலையின் நடுவில் எப்போதும் வத்தாத ஒரு சுனையும் உண்டு. தூக்குப்போனியில் கஞ்சி கொண்டு போகும் அவர் தண்ணி தவிக்கும் போதெல்லாம் மூடியைத் திறந்து தண்ணீர் குடிப்பார். மதியானத்துக்கு அதிலேயே கஞ்சியும் குடித்துக்கொள்வார். அதனால், எந்த ஒரு கஷ்டமும் இல்லை. பாட்டுப் பாடுவதற்காகவே ஆடுகளை வேக வேகமாக பத்திக்கொண்டு வருவார். அந்த மலையோரமாக ஒரு பெரிய புதிய மண்சாலை இருந்தது. அதில் யாராவது பெரிய அதிகாரிகள் குதிரைமீது போவார்கள். அப்போது இவர் டக்கென பாட்டை நிறுத்திக்கொள்வார்.
காட்டில் பிடித்த காடையைக் குழம்பு வைத்து ஒருநாள் அவர் வீட்டில் களி கிண்டியிருந்தார்கள். நமக்கு ஊத்தித் தருவார்களோ என்னமோ என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே அவர் பொண்டாட்டி, ‘இந்தாரும் தூக்குப் போணியில காடக் குழம்பும் ஒரு துண்டு களியும் வச்சிருக்கேன். கண்ட எடத்தில வச்சு நாயீ, நரி தின்னுராம காவந்தா (பத்திரமா) வச்சிருந்து மதியானத்துக்குச் சாப்பிடும்’ என்று சொல்லிக் கொடுத்தாள். அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. ஆடுகளைக் கொண்டுவந்து விட்டதும் உடனே பாட ஆரம்பித்துவிட்டார். அப்போது இவருக்குத் தெரியாமலே ஒரு அதிகாரி குதிரைமீது வந்து கொண்டிருந்தார்.
‘ராசராசாக்க ராச வழிவந்த சீமாங்க
தங்கதகரப் பெட்டி நீங்க தாளடைக்கும் ரெங்குபெட்டி
தாளடைக்கும் நேரமெல்லாம் தாசில்தார் கையெடுப்பார்
பொன்னு தகரப்பெட்டி, நீங்க பூவடைக்கும் ரெங்குபெட்டி
பூவடைக்கும் நேரமெல்லாம் உங்கள போலீசார் கையெடுப்பார்’
என்று கலுசுலிங்கம் பாடிக் கொண்டிருந்தபோது குதிரையிலிருந்த அதிகாரி அவர் முன்னால் போய் நின்றார். கலுசுலிங்கம் அவரைப் பார்க்கவும் நடுங்கி வாய் பொத்தி நின்றார். அந்த அதிகாரி அவரின் தோளைத்தட்டி, ‘ரொம்ப நல்லா பாடுறீங்க. எங்க அரண்மனைக்கு வாங்க. உங்களுக்கு வேணுங்கிற வசதி செய்து தாரேன்’ என்றார். ‘வேண்டாம் சாமி’ என்று மறுத்த கலுசுலிங்கத்திடம், ‘சரி இன்னொரு பாட்டு பாடுங்க’ என்றார். உடனே இவர்
‘பட்டுத்துண்டு மேல போட்டு
நீங்க பட்டிணமே போனாலும்
உங்க பட்டுத்துண்டு சோதி மின்னும்
உங்களைப் பார்த்தவர்கள் கையெடுப்பார்’
என்று பாட அந்த அதிகாரி ஒரு தங்கக்காசு கொடுத்துவிட்டுப் போனாராம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் எழுத்தாளர்.