வானவில் பெண்கள் | வில்லிசையை வசப்படுத்திய மாதவி

வானவில் பெண்கள் | வில்லிசையை வசப்படுத்திய மாதவி
Updated on
2 min read

தென் மாவட்டக் கோயில் கொடை விழாக்களில் எத்தனை விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும், ‘மாதவி வில்லுப்பாட்டு’க்குத் தனியிடமும் ரசிகர் கூட்டமும் உண்டு. தெளிவான, பிறமொழி கலப்படமில்லாத தமிழ் உச்சரிப்பும், தனக்கே உரிய பேச்சு வழக்குமாகக் கூட்டத்தினரை மெய்மறக்கச் செய்துவிடுகிறார் மாதவி.

மாதவி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா மாரிசெல்வம் கொத்தனார் வேலைக்கும் அம்மா மாலதி பீடி சுற்றும் வேலைக்கும் சென்று குடும்பத்தைக் கவனித்துவருகின்றனர். மாதவிக்கு ராதிகா, திவ்யா என்கிற இரண்டு சகோதரிகளும் மாதவன் என்கிற ஒரு சகோதரனும் உள்ளனர்.

எந்தவொரு குடும்பப் பின்னணியும் இல்லாத போது, எப்படி வில்லுப்பாட்டில் ஆர்வம் வந்தது எனக் கேட்டதற்கு, “சிறு வயதில் தாத்தா, பாட்டி ஊரில் நடக்கும் கோயில் கொடை விழாவுக்குக் குடும்பத்துடன் செல்வேன். அப்போது அங்கு நடக்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில், அந்தக் குழுவினர் வித்தியாசமான கருவிகளால் எழுப்பும் இசைக்கு ஏற்ப நடுவில் கம்பீரமாக ஒரு பெண் அமர்ந்து பாடுவதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கும். அதனால், எங்கே வில்லுப்பாட்டு நடந்தாலும் அங்கே சென்றுவிடுவேன்.

எனது குடும்பத்தில் உள்ளவர்கள், ‘நமது வீட்டிலும் யாராவது வில்லுப்பாட்டு பாடினால் நன்றாக இருக்கும்’ எனச் சொல்லி என்னை வில்லுப்பாட்டு பாட வைத்து கிண்டல் செய்துகொண்டிருப்பார்கள். அதனால்தானோ என்னவோ எனக்கு வில்லுப்பாட்டு மேல் தீராத காதல் ஏற்பட்டு விட்டது. வில்லுப்பாட்டு கற்பதற்கு அப்பா, அம்மா ஆதரவு இருந்தாலும், ஆரம்பத்தில் உறவினர்கள் புறம்பேசத்தான் செய்தார்கள். ஆனால், நான் எதையும் பொருட்படுத்தாமல் எனது பாதையில் பயணிக்கத் தொடங்கினேன்” என்கிறார் மாதவி.

தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கிய பிறகு தன் குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஓரளவுக்குக் குறைந்திருப்பதாக மாதவி சொல்கிறார். “வி.கே.புதூர் இசக்கி புலவர், வல்லம் மாரியம்மாள், கடையநல்லூர் கணபதி புலவர் ஆகியோரிடம் வில்லிசைப் பயிற்சியை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன். பின்னர் 14 வயதில் எங்கள் ஊரில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினேன். இந்த நாட்டுப்புறக்கலையால்தான் எனக்கும் எனது குடும்பத்துக்கும் வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியுள்ளது” என்கிறார் மாதவி.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்திய மாதவிக்கு மும்பை, கர்நாடகத்தில் இருந்தும்கூட அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றைத் தவறவிட்டதாகச் சொல்லும் மாதவிக்கு உலக அரங்கில் வில்லுப்பாட்டைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது விருப்பமாம்.

தொடர்ச்சியாக வில்லுப்பாட்டு பாடத் தொடங்கிய பிறகு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை மாதவிக்கு ஏற்பட்டது. “நான் ஒன்பதாம் வகுப்புதான் படித்திருந்தேன். வில்லுப்பாட்டு பாட ஆரம்பித்ததிலிருந்து பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. ஆனாலும், விடாமுயற்சியாக பத்தாம் வகுப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் முடித்துவிட்டேன். பாட்டுக்காகப் படிப்பைக் கைவிட மாட்டேன். கண்டிப்பாகப் பட்டப் படிப்பை நிறைவு செய்வேன்” என தீர்க்கமாகச் சொல்கிறார் மாதவி.

இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் வில்லிசையைக் கற்றுக்கொண்டால், நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் பாதுகாக்கலாம் என்பது மாதவியின் வேண்டுகோள். தான் கற்றுக்கொண்ட வில்லுப்பாட்டை, இளைஞர்களுக்கும் கற்றுத்தர ஆசைப்படுவதாகச் சொல்லும் மாதவி, அழிவின் விளிம்பில் இருக்கும் வில்லுப்பாட்டை இளைஞர்களால்தான் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in