

உருவம்தான் நம் அடையாளமா என்று எழுதியிருந்த தருமபுரி வாசகி தாரணி தேவியின் கருத்து ஏற்புடையதே. என் பள்ளிப் பருவத்தில் நிறம் பற்றி நான் எண்ணியதே இல்லை. புத்தகங்களைச் சுற்றியே அவை ஓடிவிட்டன. கல்லூரி நாள்களிலும்கூட அதைப் பற்றிப் பெரிதாக சிந்தித்ததே இல்லை. என் அக்காவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தபோதுதான், என்னையும் அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்த பிறர் தூண்டினர். காரணம், அப்போதுதான் ஒளிப்படங்களில் நன்றாக இருக்குமாம்.
தொடக்கத்தில் சிலவற்றை முயற்சி செய்த எனக்கு, என்னுடைய அடையாளத்தை இழப்பது போன்று தோன்றியதால் அதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு, ஒரு நிகழ்வில் என் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவரும்கூட நிற மாற்றத்திற்காக பல மருந்துகளை உபயோகப்படுத்துவது தெரியவந்தது. அப்போதும் என் தோழிகளில் ஒருவர், “நீயும் அதுபோலவே செய்து வெள்ளை நிறத்திற்கு மாறலாமே” என்றார். நிறத்தைப் பார்த்துப் பழகுபவர்களை நம் நட்பு வட்டத்திற்குள் வைத்திருக்கிறோமே என்று வருத்தமாக இருந்தது. அதைவிட அதிகமாக, இவ்வளவு சமூக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதும், பெண்களே சக பெண்களை நிறத்தை வைத்து மதிப்பிடுவது மனதை மிகவும் நெருடியது. என் ஆண் நண்பர் ஒருவர், ‘உன்னைவிட நான்தான் கூடுதல் அழகு’ என்றார். அவர் கூறியது நிற வேற்றுமையைத்தான்.
இவர்களுக்கெல்லாம் நான் கொடுத்த ஒரே பதில், “என் தந்தையின் கறுப்பு நிறம் எனக்கு மரபுரீதியாகக் கிடைத்திருக்கிறது. அதுதானே எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும்” என்பதுதான். அவர்களால் அதன் பிறகு பேச முடியவில்லை, வாயடைத்துப் போனார்கள். மனதின் நிறத்தைப் பார்த்துப் பழகும் நல்ல உள்ளங்கள் நம்முடன் இருந்தால், பல நிறங்களை உடைய வானவில்போல வாழ்க்கை இருக்கும் தோழிகளே.
- தீபா, கோயம்புத்தூர்.