

ஆணுக்கு நிகர் பெண் எனச் சொல்லிக்கொள்ள பலர் விரும்பினாலும் வாய்ப்புகள் கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஆணைவிடச் சிறப்பாகவே பெண்கள் செயலாற்றுகிறார்கள். அடிப்படையிலேயே ஆண்களைவிடப் பலவற்றில் பெண்கள் திறமைசாலிகளாகவும் நுண்ணுணர்வோடு செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். தங்களுக்கான பாதையைத் தாங்களே அமைக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அறிவிக்கும் பெரும்பாலான புள்ளி விவரங்களில் பெண்கள் பின்னடைவைச் சந்திப்பதுபோல் தோன்றலாம். ஆனால், பூஜ்ஜியத்திலிருந்து இந்த நிலையைப் பெண்கள் எட்டியிருப்பது சாதாரண நிகழ்வல்ல. ஒவ்வொரு உரிமையையும் பெண்கள் போராடித்தான் வென்றிருக்கிறார்கள். திருமணமான பெண்கள் குடும்ப விவகாரங்களில் முடிவெடுப்பது, சொந்தமாகவோ கூட்டாகவோ பெண்களின் பெயரில் நிலமோ வீடோ பதிவுசெய்யப்பட்டிருப்பது, தனி கைபேசி வைத்திருப்பது, வங்கிக் கணக்கு வைத்திருப்பது, 15 - 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் மாதவிடாய் நாள்களில் சுகாதாரமான முறைகளைக் கடைப்பிடிப்பது போன்றவற்றில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 5 வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் கால்களைப் பிணைக்கும் சங்கிலிகளைக் கணக்கில்வைத்துப் பார்த்தால்தான் எவ்வளவு தடைகளை மீறி அவர்கள் முன்னேற வேண்டியிருக்கிறது என்பது புரியும். சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படும் நோக்கமும் ஒரு வகையில் பெண்களின் உழைப்பை அங்கீகரித்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதாகத்தான் இருக்கிறது. தடைகள் அகன்றால்தானே வழிகள் பிறக்கும்!