பெண் அரசியல் 22: ‘பொம்பள’ என்றால் போராட்டம்!

பெண் அரசியல் 22: ‘பொம்பள’ என்றால் போராட்டம்!
Updated on
3 min read

டகத்தின் கேள்விகளுக்கு மெல்லிய குரலில் யதார்த்தத்தோடும் உண்மையோடும் கிராமத்து மாணவிக்கே உரிய எளிமையோடும் அனிதா அப்போது பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கைநீட்டிப் பிடிக்க முற்படும்போது இறகுகள் விரித்து படபடக்கும் பட்டாம்பூச்சிபோல் ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் அவரது கண்ணிமைகள் படபடத்துக்கொண்டிருந்ததைத் தொலைக்காட்சியின் நேர்காணலில் காண முடிந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில முதலமைச்சர் உட்பட பலர் கொடுத்த வாக்குறுதியின்படி நீட் தேர்வுக்கு எப்படியும் விலக்கு கிடைத்துவிடும் என அனிதா காத்திருந்தார்.

இறுதியாக நீதிமன்றமும் கைவிட்ட சூழ்நிலையில்தான் அனிதா மனம் உடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டார். 1176 மதிப்பெண்கள் பெற்றும் அவரது மருத்துவக் கனவு நனவாகாமலேயே எரிந்து சாம்பலானது. அனிதாவின் அகால மரணம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வும் மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகள் பொய்த்துப்போனதுமே அதற்குக் காரணங்கள்.

மதம், சாதி, குடும்பம், வறுமை என ஒவ்வொரு காலகட்டத்திலும் முளைத்து, கிளை பரப்பிய தடைகளை முறியடித்துதான் பெண் கல்வி சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியைத் தொட்டது. அதிலும் தலித் பெண் குழந்தைகளின் உயர் கல்வி இந்த நூற்றாண்டிலும் எட்டாக் கனியாகவே இருந்துவருகிறது. அனிதாவின் மரணத்தையொட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமூரில் திரண்டனர். கழிவறை, குளியலறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியுமில்லாத அனிதாவின் வறுமை நிறைந்த வீடும் அனிதாவின் உடலுக்கு முன்னால் நின்று கதறித் தீர்த்த அந்தக் கிராமத்து மக்களின் அழுகையும் எல்லோரையும் மிகவும் பாதித்தன.

அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதியில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன்வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும் பெரும் வேதனையைத் தந்தன.

இதன் பின்னணியில்தான் 2015-ல் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் கிருஷ்ணசாமியின் மகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு சீட் வழங்கினார் என்பதை அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். தமக்கென்றால் ஒரு நீதி அனிதாவுக்கென்றால் இன்னொரு நீதியா என்ற எனது கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாதவர், “அந்தப் பொம்பளை யாரென்றே எனக்குத் தெரியாது” என்று ஊடகத்தில் மறுப்பு தெரிவித்தார். “உங்களைப் போன்றே பொதுச்சேவைக்கு வந்த ஒரு பெண்ணை பொம்பளை எனச் சொல்லலாமா?” என்ற ஊடகத்தாரின் கேள்விக்கு மீண்டும் அவர், “பொம்பளையைப் பொம்பளை என்று சொல்வதிலே என்ன தவறு? அது அழகான தமிழ் வார்த்தைதானே” என்றார். அதே தூய தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி, “அந்தப் பொம்பளையிடம் நான் சீட் வாங்கவில்லை” என ஏனோ அவர் சொல்லவில்லை. அதன் அரசியல் நமக்குப் புரியாமலும் இல்லை.

அந்தக் கேள்வியோடு நிறுத்தாமல், “பிறகு அந்தம்மா பொம்பளை இல்லையா?” என அடுத்த கேள்வியையும் தொடுத்தார். இதைவிடக் கூர்மையான ஆயுதம் வேறு இருந்துவிட முடியாதுதான். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அசந்தே போனார். இத்தனை நெருக்கத்தில் ஆணாதிக்கத்தின் விஷ அம்பை அவரும் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார். ஒரு அரசியல் கட்சியின் முக்கியத் தலைவரிடமிருந்து இப்படியொரு கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. போர்க்களத்தில் எனது ஆயுதம் பறிக்கப்பட்டதைப் போன்ற அனுதாபத்தோடும் இரக்கத்தோடும் பலரது பார்வையும் இருந்தது. அதே நேரம் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அரசியலில் பெண் என்பவர் பெண் என்பதற்காகவே தாக்கப்படுவது புதிதல்ல. “நீயெல்லாம் ஒரு பொம்பளைதானே” என்ற ஆணாதிக்கத்தின் இழிவான மொழியை எதிர்கொள்ளாமல் பெண்ணால் ஒரு அடிகூட முன்னேற முடியாது. இத்தகைய அகம்பாவ மொழிகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச்செல்லும் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இதில் என்ன தவறு, தவறாக இருந்தாலும் அவை வார்த்தைதானே எனக் கடந்து செல்லும் மெய்ஞானத்தைப் பெற்றவர்களும் இருந்தார்கள். வீரத்தை முன்னெடுக்கிற ஆளுமையாகப் பெண் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அப்படி மாற்றிக்கொண்டதாக ஒரு தோற்றத்தை அவசியம் ஏற்படுத்தியே ஆக வேண்டும். ஆணாதிக்க வெறியோடு சமூக வலைத்தளங்களில் பெண் விரோதக் கருத்துகளை மிக மோசமாகப் பதிவிட்டவர்களையும் காண முடிந்தது. சோஷியல் மீடியான்னா அப்படித்தான் இருக்கும் என்ற சமாதான வார்த்தைகளைச் சொல்லி நகர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எத்தனையோ அநீதிகளைப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் என்னைப் பற்றிய இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்குவது பெரிய சுயநலமாகவே இருக்க முடியும். ஆகவே, நீட்டை எதிர்த்த போராட்டமும் அதன் வெற்றியுமே நாம் முன்னெடுக்கும் உண்மையான பெண்ணுரிமையாக இருக்க முடியும்.

அனிதாவுக்கு நியாயம் கேட்டுத் தன் ஆசிரியர் பணியைத் துறந்த சபரிமாலாவை அதிமுகவின் பிரமுகர் ஒருவர், “இந்தம்மாவெல்லாம் டீச்சராக வேலை பார்த்தால் விளங்குமா? வேலையைவிட்டுப் போனதே நல்லது” என்று கொச்சைப்படுத்தினார். போற்ற வேண்டிய போர்க்குணத்தை, வளர்க்க வேண்டிய தியாகக் குணத்தை இத்தனை கேவலமாக இழிவுபடுத்த இவர் யார் என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.

இந்துத்துவவாதிகளை எதிர்த்துப் பேசினார் என்பதற்காகத் தான் கௌரி லங்கேஷ் மீது ஏழு புல்லட்டுகளை வெறித்தனத்தோடு பாய்ச்சி, உடலைச் சல்லடையாக்கினார்கள் சமூக விரோதிகள். வேறு சிலரோ போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டதாகக் கூச்சநாச்சமின்றி அவதூறு சொல்லி உயிரற்ற உடலை மேலும் சல்லடையாக்கினார்கள். மதவெறியர், சமூகவிரோதிகளை விட்டுவிட்டு மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளிய அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட பெண் மீதான வன்முறைகள் கூர்மையடைந்தேவருகின்றன.

குடும்பத்தில் மட்டுமல்ல பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் அங்கேயும் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது. அடக்கமானவர்கள் எல்லாம் சுடுகாட்டில்தான் இருப்பார்கள். அந்த அடக்கம் தேவையற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி என் எதிரியல்ல, நாவடக்கம் தேவை என என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் எச்சரிக்கிறார். அது அவரது குரல் அல்ல, மனுவின் குரல். ஆகவே, அவரது கருத்தை எதிர்க்கிறேன்.

அது எங்கே, எப்படி, யாரிடத்தில் ஒலிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஒலிக்காதவரை அது பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்யுள்ளது. பெண்ணுரிமை கிடைத்துவிட்டது என்று சொல்வதோ அதற்கு நேர்மாறாக ஆணாதிக்கமே வளர்ந்திருப்பதாகக் கருதுவதோ உண்மையான மதிப்பீடாக இருக்க முடியாது. இந்தச் சம்பவத்தில் பெண்ணுரிமை புரிதலோடு ஆதரித்து, கருத்துச் சொன்னவர்களில் இளையவர்கள், பொதுமக்கள், குறிப்பாகப் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ‘அனிதா அக்காவுக்கு நியாயம் வழங்கு’ என காரை மறித்து நடுரோட்டில் அமர்ந்து போராடிய நுங்கம்பாக்கம் மாணவிகளும் முடியைச் சுழற்றிப் பிடித்து வேனில் ஏற்றிய போலீசை எதிர்த்து ‘மெரினா நினைவிடத்தில் போராட எங்களுக்கு உரிமையில்லையா?’ எனக் கேட்ட எஸ்.எஃப்.ஐ. மாணவிகளும் வீடு தேடிச்சென்று கைதுசெய்யப்பட்ட மாணவி மஞ்சுளாவும் நீட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

பொம்பளை என்றால் பொம்பளை அல்ல. போராட்டம் என்பதே அதன் பொருளாகும் என மாணவிகள் உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் எங்கே அநீதி நிகழ்ந்தாலும் சாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி தடியைச் சுழற்றித் தட்டிக் கேட்பதற்கு ஒரு தந்தை பெரியார் நிச்சயம் வேண்டும்.

(முழக்கம் தொடரும்)

கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in