

இருவர் மனமொத்த தம்பதியாக இருக்க உடமை உணர்வும் முக்கியத்துவமும் அவசியம் என்று சொல்லியிருந்தேன். இவை இல்லையென்றால் அந்த உறவில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு உறவில் உடைமை உணர்வும் (பிணைப்பு), முக்கியத்துவமும் (பங்களிப்பின் அங்கீகாரம்) நிறைவேறவில்லையென்றால், தம்பதியில் ஒருவர் மற்றவருக்குத் தேவையைக் குறிப்பாக உணர்த்த முயல்வார். அப்போதே விழித்துக்கொள்வது நல்லது.
கீழே உதாரணமாகச் சொன்ன வாக்கி யங்கள் ஒவ்வொன்றும் உரையாடலாகத் தொடர்ந்தால், விவாதங்களாக மாறிச் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறதல்லவா? ஆனால் சம்பந்தப்பட்ட வருக்கோ கணவன்/ மனைவி எந்த தேவையைத் கேட்கிறார் என்று இவை புரியவைத்துவிடும்! குற்றச்சாட்டாகச் சொல்லாமல், இதமான, கனிவான மறுமொழியாகப் பேசினால் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிடுவீர்கள்!
மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள:
‘உனக்கு காபிகூடக் கொடுக்காமே நான் படுத்துக்கிட்டு இருக்கேனே! என்ன ஆச்சுன்னு கேட்கக்கூட மாட்டியா? - (அக்கறை மிஸ்ஸிங்)
‘ஸாரி டியர், என்னவோ நெனைப்பிலே இருந்தேன்; ஏன் படுத்திருக்கே? காய்ச்சல் இருக்கா? ஒரு மாத்திரை தர்றேன். அதைப் போட்டுகிட்டு ரெஸ்ட் எடு. இரவு சாப்பாட்டை நான் பார்த்துக்கறேன்.’
‘இன்னைக்கு என் பிறந்த நாள்! சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த காலமெல்லாம் போய், ஒரு வாழ்த்து சொல்லக்கூட மறந்துட்டே, இல்லே!’
‘அடடா, இப்படி மறப்பேனா? இன்னிக்கு சாயந்திரம் எங்காவது வெளியே போகலாம்னு திட்டம் போட்டிருந்தேன். எங்கே போகலாம்னு நீதான் முடிவு பண்ணணும்’
‘எங்கிட்டபேச உனக்கு நேரம் எங்கே இருக்கு? உன் ஃப்ரெண்ட்ஸோட பேசத்தான் நேரம் இருக்கு!’
‘அப்படி இல்லப்பா. இந்த வாரம் ஸ்கூல் ஆண்டுவிழால்ல. ரொம்ப வேலை. அது முடிஞ்சதும் வரும் ஞாயிற்றுக்கிழமை, நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் வச்சிருக் கேனே! உனக்குப் பிடிச்ச ஒரு இடத்துக்கு சின்னதா ஒரு பிக்னிக் போகப்போறோம்!’
‘நான் எதையுமே நல்லா செய்யணும்னு தான் முயற்சி பண்ணறேன். இருந்தாலும் ஏதோ சரியில்லாமே போகுது. ஐயம் நாட் குட் இனஃப்.’
‘இல்லை கண்ணா. பல சந்தர்ப்பங்களில் நீ ரொம்ப பொறுப்பா நடந்துக்கிட்டிருக்கே. நான்தான் அதைப் பாராட்டாமல் விட்டிருக் கேன். இனிமே அப்படி இருக்க மாட்டேன். ஒகேயா?’
தொடர்ந்து இது மாதிரி இதமான, கனிவான ‘ரெஸ்பான்ஸை’க் கொடுத்துக்கொண்டி ருந்தால், மிஸ் ஆன உணர்வுப்பூர்வமான தேவை நிறைவேறிவிடும். ஆரோக்கியமான பந்தம் ஏற்பட்டுவிடும். மேலே பரிந்துரைக்கப்பட்ட மறு மொழிதான் சரி என்று சொல்லவரவில்லை. இவை உதாரணங்கள் மட்டுமே. இவற்றையும் விஞ்சும் வகையில் நடந்துகொள்வது அவரவர் சமர்த்து!
பதிலளிக்கும்போது தொடர்புகொள்ளும் விதத்தை மாற்றிக்கொள்ளலாம். கோபத்தை, சலிப்பைக் காட்டாது, கனி வோடு பேசும் விதத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். படித்து, அசைபோட்டுப் புரிந்துகொள்ளவேண்டிய விவரங்கள் இவை.
திருமண உறவு ஆரோக்கியமாக அமைய அடித்தளமாக இருப்பவை அன்பு, நம்பிக்கை, மரியாதை, சமத்துவம். அடித்தளம் திடமாக இருக்க, இந்தத் தேவைகள் கிடைக்கப்பெற வேண்டும்.
(மனம் திறப்போம்)
கட்டுரையாளர் உளவியல் ஆற்றாளர்