

கதைப் புத்தகங்கள் படித்தால் பெண்கள் கெட்டுப்போய் விடுவார்கள் என்கிற கருத்துடைய மிகச் சிறிய கிராமம்தான் என்னுடைய ஊர். 10 வயதில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிக்கு எழுதுவதற்காகப் பள்ளியில் உள்ள மிகச் சிறிய நூலகத்தில் புத்தகங்களைத் தேடிப்போகத் தொடங்கினேன். அப்பாவின் கடையில் இருந்து இரவில் வீட்டுக்கு வரும் ஒரு நாளிதழும் 12ஆம் வகுப்பிற்குப் பின் படிக்க வேண்டாம் எனப் படிப்பை நிறுத்தப்பட்ட அக்காவுக்காக வரும் ஒரு வார இதழுமே உலகத்துக்கான கண்ணாடி. விதிவிலக்காக அருகில் இருந்த பெரியப்பா பிள்ளைகள் வீட்டில் மறைத்துப் படித்த சில கதைப் புத்தகங்கள் விழிகளை விரியச்செய்தன.
ராணி முத்து, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன் பாலகுமாரன் என ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருந்த காலம் அது. புத்தகங்கள் ஊர் முழுவதும் சுற்றிவரும் அளவு வாங்குவது அருகியிருந்தது. ஒரு புத்தகத்தை ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளும் சேர்ந்து வாசித்த காலம் உண்டு. நெல் கொட்டும் பத்தாயத்தின் மீதேறி மறைந்துகொண்டே வாசிக்க முடிந்தது.
எழுத்தாளர் சுஜாதாவின் நூல்களும் அறிவியல் கட்டுரைகளும் உலகைத் திறந்துவிட, வானியல் குறித்த ஆர்வமும் தேடலும் அதிகமாயின. சிறுசேமிப்பைக் கொண்டு நூல்களை வாங்கத் தொடங்கினேன். அதன் பின் அவர் குறிப்பிட்ட மூல நூல்களைத் தேடி புத்தகக் காட்சிகளுக்குச் செல்லத் தொடங்கினேன். கல்கியும் சாண்டில்யனும் வாசித்து வரலாற்றுப் புனைவுகளைத் தொடர்ந்து உண்மை வரலாற்றை தேடத் தொடங்கினேன். அந்நேரத்தில் சக ஆசிரியரான இந்திரா சாந்தி என்பவர் நல்ல எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகம் செய்தார். எஸ். ராமகிருஷ்ணன், ரொமிலா தாப்பர் தொடங்கி ராகுல் சாங்கிருத்யாயன், அஸ்வகோஷ், சாருநிவேதிதா, தியடோர் பாஸ்கரன், சு.கி. ஜெயகரன், ஜெயமோகன், லஷ்மி சரவணகுமார் என எவரையும் விடுவதில்லை. வாசிப்புப் பழக்கம் விரைவாக வாசிக்கும் திறனை வளர்த்தது. அது ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் அளவுக்குப் பாடமூல நூல்களை விரைவாக எளிதில் பயில உதவிற்று.
பள்ளியில் மாணவர்களிடம் நிறைய உலக விஷயங்களையும் அறிவியல் செய்திகளையும் பகிர முடிந்தது. அது மற்ற ஆசிரியர்களிடமிருந்து என்னைத் தனித்துவமாகக் காட்டியது. உளவியல் சம்பந்தப்பட்ட நூல்கள் மாணவர்களைக் கையாள பெரிதும் உதவின. நல்ல நூல்களை விமர்சனம் செய்ததன் பலனாக ஆர். பாலகிருஷ்ணனின் ‘Journey of a civilization’ நூல் பரிசாகக் கிடைத்தது. உலக வரலாற்றை தொல்லியல் நோக்கில் ஆராயும் நூல் அது. சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்னும் கருத்தை முன்னிறுத்திப் பல்வேறு உலக ஆய்வாளர்களின் ஆய்வை ஆதாரமாகக்கொண்டு ஆய்வு நடத்தி வெளிவந்த அந்த நூல் என் தேடலுக்கு எல்லாம் பெரும் தீனியாக அமைந்தது.
அறிவில் சிறந்தோங்க, உலக ஞானம் பெற, சமூகத்தில் நிலவும் சமூக வேறுபாடுகள் மாணவர்களிடையே தலைதூக்காமல் இருப்பதற்காகத் தர்க்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க புத்தகங்கள் எனக்குப் பெரிதும் உதவின. வாசிப்பது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ, மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்களுக்கு வருங்கால சமூகத்தைச் சரியாகக் கட்டமைப்பதற்கு அவசியம்.
- சுமித்ரா சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை.