

குடிசைப் பகுதி மக்கள் எப்போதெல்லாம் அங்கிருந்து வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் லீலாவதியை நாம் பார்க்கலாம். முப்பது ஆண்டுகளைக் கடந்த போராட்ட வாழ்க்கை அவரது குரலைக் கனத்துப் போகச் செய்திருந்தாலும் குலையாத உறுதியோடு இருக்கிறார். உடல்நலக் குறைவால் ஓய்வில் இருந்தபோதும் உழைக்கும் மக்கள் குறித்த அக்கறையோடு பேசுகிறார்.
தந்தையின் இறப்புக்குப் பிறகு லீலாவதியின் அம்மா புதுக்கோட்டையிலிருந்து ஐந்து குழந்தைகளோடு சென்னையில் குடியேறினார். அம்மாவும் அக்காவும் வீட்டு வேலை செய்ய மற்றவர்கள் படித்தார்கள். லீலாவதி எஸ்.எஸ்.எல்.சி., முடித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்தார். அண்ணனுடன் பணிபுரிந்த ராஜேந்திரன் என்பவருடன் 22 வயதில் திருமணம் நடந்தது. அடித்தட்டு வாழ்க்கையின் அவ்வளவு சிரமங்களோடும் வாழ்க்கை நகர்ந்தது. புறம்போக்கு நிலங்களில் உள்ள குடிசைகளை அகற்றச் சொல்லி 1984இல் எம்.ஜி.ஆர்., தலைமையிலான அரசு உத்தரவிட்டது. அதுதான் லீலாவதியின் பொதுவாழ்க்கைக்கான முதற்புள்ளியை வைத்தது.
குடிசைகளை அகற்றக் கூடாது என ‘பெண்ணுரிமை இயக்கம்’ சார்பில் இவர்களது பகுதியில் கூட்டம் நடந்தது. படித்த பெண்ணாக இருந்த லீலாவதியைத் தங்கள் பகுதி சார்பாக அந்தக் கூட்டத்தில் ஊர்த்தலைவர் பங்கேற்கச் சொன்னார். அன்று தொடங்கிய லீலாவதியின் பயணம் அதன் பிறகு தடைபடவே இல்லை. கோயம்பேடு பாரதியார் நகரில் குடிசைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை முன்பு மூன்று நாள்கள் நடைபெற்ற போராட்டத்தில் லீலாவதி பங்கேற்றார். அதைத் தொடர்ந்து 1984-க்கு முன் போடப்பட்ட குடிசைகளை அகற்றக் கூடாது என அரசு அறிவித்தது. அமைப்பாகத் திரள்வதும் உரிமைக்காகக் குரல்கொடுப்பதும் எந்த அளவுக்குப் பலனைத் தரும் என்பதை அந்தப் போராட்டத்தின் வெற்றி இவருக்கு உணர்த்தியது. தொடர்ந்து ‘பெண்ணுரிமை இயக்க’ அலுவலகத்துக்குச் சென்றார். 1988 முதல் முழுநேரக் களப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடலுழைப்புத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். அவர்களுக்கான நல வாரியங்கள் அமைக்க வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு நடத்திய போராட்டங்களில் இவர் பங்கெடுத்திருக்கிறார்.
வாழ்வை மாற்றும் முயற்சி
தொடர்ச்சியான களச் செயல்பாடுகள் லீலாவதியைப் பெண்ணுரிமை இயக்க மாநிலச் செயலாளராகவும் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிளாளர் சங்க மாநிலத் தலைவராகவும் உயர்த்தியுள்ளன.
“குடிசைவாழ் மக்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், சாலையோரங்களில் பூ, பழம் விற்கிறவர்கள், மீன் வியாபாரிகள் என உதிரியாக இருப்பவர்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடுவதுதான் எங்களது முதன்மைப் பணி. 64 வகையான தொழில் செய்கிறவர்கள் எங்களது சங்கத்தில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுக்கான குடியிருப்பு, கல்வி, மருத்துவ உதவி, திருமண நிதியுதவி போன்றவற்றைப் பெற்றுத்தருவதற்கு நாங்கள் உதவுகிறோம். குடிசைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவோருக்கு மாற்று இடம், பட்டா, ரேஷன் அட்டை போன்றவற்றைப் பெற்றுத் தருவதிலும் உதவுகிறோம்” என்று சொல்கிறார் லீலாவதி.
சில சிக்கல்களைச் சட்டரீதியாகவும் இவர்கள் அணுகுகிறார்கள். குடிசைப் பகுதியிலிருந்து வெளியேற்றப் படுவோருக்கு அவர்கள் வசித்த இடத்துக்கு அருகிலேயே மாற்று இடம் கொடுக்க வேண்டும் என இவர்களது அமைப்பு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், பெண்களையும் சிறுமிகளையும் வீட்டு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி அவர்களைத் தொடர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குத் தொடுத்து அவரைக் கைதுசெய்ய வைத்ததில் இவர்களது பங்கு முக்கிய மானது.
உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சங்கத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக லீலாவதி சொல்கிறார். வீட்டு வேலை தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி இவர்கள் செய்துவரும் பணி குறிப்பிடத்தக்கது. “மற்ற பணிகளுக்காவது ஓரளவுக்கு நேர வரையறையும் வேலை வரையறையும் உள்ளன. வீட்டு வேலைத் தொழில் அப்படியல்ல. சிலர் தங்கள் வீடுகளில் வேலை செய்வோருக்குத் தொடர்ச்சியாக வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். வார விடுப்பும் அளிப்பதில்லை. வீட்டில் எது காணாமல் போனாலும் வேலை செய்கிறவர்கள் மீதுதான் அந்தப் பழி விழும். சில இடங்களில் உடல்ரீதியான துன்புறுத்தல், பாலியல் தொல்லை போன்றவையும் நடக்கும். இவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதுடன் அவர்களுக்கான பணி வரையறைகளையும் நெறிப்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்கிறார் லீலாவதி.
1995இல் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், 2000இல் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், 2006இல் உடலுழைப்புத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் போன்றவை அமைக்கப்பட்டது நல்ல முன்னகர்வு எனக் குறிப்பிடுகிறார் லீலாவதி. “வீட்டு வேலை செய்வோருக்கும் பணிப் பாதுகாப்பு வேண்டும் என்பதால் அவர்களுக்கும் தனி வாரியம் தேவை என்று பல்வேறு அமைப்புகள் சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில் 2009இல் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது. உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் வீட்டு வேலை தொழிலாளருக்கு ஓரளவுக்கு ஆசுவாசத்தை அளிப்பதாக இதன் செயல்பாடுகள் அமைந்தால் நல்லது. சென்னை திருவான்மியூரில் வீட்டு வேலை செய்துவந்த பெண்ணின் மீது சுடுநீரை ஊற்றியதில் அந்தப் பெண் இறந்தேபோனார். அதேபோல் நடிகை ஒருவரின் வீட்டில் வேலை செய்த பெண் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கபட்டோருக்குத் துணை நிற்பதும் எங்கள் கடமைகளில் ஒன்று” என்கிறார் லீலாவதி.
ஆயிரம் சிக்கல்களுக்கு நடுவே அன்றாட வாழ்வைக் கடப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று அலுத்துக்கொள்வோருக்கு நடுவில் தங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைச் சமாளித்தபடி எளியோரது வாழ்வில் ஒளிகூட்டப் போராடும் லீலாவதி போன்றோர் நம்பிக்கையளிக்கிறார்கள்.