

உடற்பயிற்சி செய்ய உடை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சேலை அணிந்து வலுதூக்குகிறார் 56 வயது சோமசுந்தரி மனோகரன். சென்னை படப்பை பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசியான இவர் ‘பவர் லிஃப்டிங்’ எனப்படும் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றவர். இரண்டு குழந்தைகளின் தாயான இவர் தனது 50ஆவது வயதில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆறு வருடங்களாக வலுதூக்கும் பயிற்சி செய்துவருகிறார்.
“குழந்தைகளின் படிப்புக்காகக் கிராமத்தி லிருந்து நகரத்திற்குக் குடிப்பெயர்ந்தோம். நெசவு, விவசாயம் என வேலைசெய்துவந்ததால் ஆரோக்கியமாக இருந்தேன். நகரத்திற்கு வந்த பிறகு உடல் பருமன், கால் வலி என ஒவ்வொன்றாக வரத் தொடங்கியது. போதுமான உடலுழைப்பு இல்லாததால்தான் இந்தப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனப் புரிந்தது. ஒரு பக்கம் சிகிச்சை எடுத்தபடியே மறுபக்கம் உடலுழைப்பை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். என் மகன், எங்கள் வீட்டின் கீழ்ப்பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்திவருவதால் அங்கு சென்று அவ்வப்போது வலுதூக்கும் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினேன். என் மகன் எனக்குப் பயிற்சி அளிப்பதைப் பார்த்து என் மருமகளும் இதில் இணைந்துகொண்டார். ஒவ்வொரு பயிற்சியாகக் கற்றுக்கொண்டு இப்போது 65 கிலோ ஸ்குவாட், 45 கிலோ பெஞ்ச் பிரெஸ், 100 கிலோ டெட் லிஃப்ட் போன்றவற்றைச் செய்கிறேன்” என்றார் சோமசுந்தரி.
ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் இருப்பது போல் வலுதூக்கும் போட்டிகள் இல்லை. ஆனால் வலுதூக்கும் போட்டிகளை ஒருங்கிணைக்க சர்வதேச வலுதூக்கும் அமைப்பு, அதன் கீழ் தேசிய, மாநில அளவிலான வலுதூக்கும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டாக ஆரம்பித்த சோமசுந்தரியின் ஆர்வம் அவரை ஒரு தேர்ந்த வலுதூக்கும் வீராங்கனையாக மாற்றியிருக்கிறது. இருப்பினும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்க விதிமுறைகள் இடம் கொடுக்கவில்லை. “சேலை உடுத்தி வலுதூக்க வேண்டுமென்பது எனது விருப்பம். சொந்த உடற்பயிற்சி மையம் என்பதால் மற்ற வேலைகளைச் செய்வது போலவே சேலை அணிந்துகொண்டு உடற் பயிற்சியும் மேற்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை அவரவர் வசதியைப் பொறுத்து செளகரியமான உடை அணிந்து உடற்பயிற்சி செய்யலாம். சேலை அணிவதால் சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டும் இல்லாததால் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியாது. போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. என்னைப் போன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புபவர்கள் சேலை அல்லது விருப்ப உடையை அணிந்துகொண்டு பயிற்சி மேற்கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்துக்கு உடை ஒரு தடையாக இருக்கக் கூடாது” என்கிறார் அவர்.
சோமசுந்தரிக்குப் பயிற்சி அளிக்கும் அவருடைய மகன் கார்த்திகேயன் கூறும்போது, “ஆர்வமுள்ள பெண்களுக்கு வயதும் உடையும் தடை கிடையாது என்பதை அம்மா உணர்த்துவதால் அவர் விரும்பியபோது உற்சாகமாகப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அவரைப் பார்த்து நிறைய பெண்கள் வலுதூக்குவதில் ஆர்வம் காட்டினர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வயது கடந்து இது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாமா என்கிற சந்தேகம் இருந்தது. அனைவராலும் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் எனச் சொல்ல முடியாது. நம் உடல் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் ஒவ்வொரு கட்டமாக முன்னேறலாம். சேலை அணிந்து கொண்டு ஸ்குவாட், பெஞ்ச் பிரெஸ் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ட்ரெட் மில் போன்று இயந்திர உதவியுடன் செய்யும் சில பயிற்சிகளின்போது சேலை மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. அந்தப் பயிற்சிகளைத் தவிர்த்துவிடலாம்” என்றார்.
வலுதூக்குவதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்குவாட், பெஞ்ச் பிரெஸ், டெட் லிஃப்ட், கம்பியைப் பிடித்துத் தொங்குவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். உடல் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற வேண்டும். உடற்பயிற்சியோடு உடலுழைப்பிலும் கவனம் செலுத்தினால் நோயற்ற வாழ்வு வசமாகும்!