பெண்ணுக்கு மதிப்பு இல்லையா?

பெண்ணுக்கு மதிப்பு இல்லையா?
Updated on
2 min read

போராடித் தீராத பிரச்சினைகள் பெண்களுக்கு ஆயிரம். அவற்றில் முக்கியமானது அவர்களுக்கான மரியாதை. ‘ஆசிரியர்’ என்கிற சொல் பொதுவாக ஆண்பால் ஆசிரியனைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பன்மைச் சொல்லாக உள்ளது. ஆனால், அதே சொல் பெண்பால் ஆசிரியைக்கும் உரியதுதான் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

நமது தமிழ்மொழியில் பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பான பல கூறுகள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் ‘மதிப்புப் பன்மை’ என்பதும். அதாவது, வயதிலோ, அறிவிலோ, பண்பிலோ சிறந்த பெரியோர் ஒருவரை நீ, அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவது தமிழ் மரபல்ல. ‘நீ’ என்பதற்குப் பதிலாக ‘நீவீர்’ அல்லது ‘நீங்கள்’ என்னும் பன்மைச் சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். அதைப் போலவே ‘அவன்’ அல்லது ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்னும் பன்மையில்தான் குறிப்பிடுவோம்.

இதற்குத்தான் ‘மதிப்புப் பன்மை’ என்று பெயர். அதாவது ஒருமையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நபரை மதிப்பு அல்லது உயர்வு கருதி பன்மையில் குறிப்பிடுவது.

ஆசிரியர் என்பது ஒன்றுக்கும் மேற்பட் டோரைக் குறிக்கும் பன்மைச் சொல். ஆசிரியன் என்பது ஆண்பால் ஒருமை, ஆசிரியை என்பது பெண்பால் ஒருமை. ஆனால், அறிவைப் புகட்டும் ஆசிரியனை மதிப்புக் கருதி ஆசிரியர் என்கிற பன்மை விகுதியோடு குறிப்பிட்டுவருகிறோம். இது ஆசிரியைக்கும் பொருந்தும்தானே? ஆனால், பலர் பெண் ஆசிரியரை ஆசிரியை என்று ஒருமையில்தான் வழங்கி வருகிறோம். பெண் ஆசிரியரை மட்டும் மதிப்புப் பன்மையைத் தவிர்த்து ஆசிரியை என்று குறிப்பிடுவதை எப்படி ஏற்க முடியும்?

இதுவும் ஒருவகை பாலினச் சமத்துவமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தன்மையே. மொழியறிவு மிக்க கற்றோரும் சர்வ சாதாரண மாக இப்படித் தவறாகப் பயன்படுத்துவதால் இப்போதும் ஆசிரியை என்கிற சொல் பெண் ஆசிரியரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

பிற மதிப்புப் பன்மைகள்

எழுத்தாளர், புலவர், கவிஞர், பேராசிரியர், விரிவுரையாளர், முதல்வர், ஆளுநர், பிரதமர் போன்ற அனைத்தும் பெண் என்கிற சொல்லோடு சேர்த்துப் பெண் எழுத்தாளர், பெண்பாற் புலவர், பெண் பிரதமர் என்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஆண் முதல்வர், ஆண் ஆளுநர் என்று சொல்வதில்லை. காரணம் முதல்வர், ஆளுநர் போன்றவையெல்லாம் ஆண்களைத்தான் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.

கல்வி நிலையங்களில் ஆரம்ப காலத்தில் ஆண் ஆசிரியர்கள் மட்டும் இருந்தவரை ஆசிரியர் என்கிற பன்மை விகுதியோடு தங்களை அழைக்க விரும்பி அதை மரபாக்கிக் கொண்டனர். அதன் பிறகு பெண்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதும் அவர்களைத் தங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட ‘ஆசிரியை’ என்று ஒருமையில் அழைக்கப் பயன்படுத்தியிருக்கின்றனர். படிக்கவே கூடாதென்ற தடைகளைத் தகர்த்துப் படித்ததோடு, படிப்பைச் சொல்லிக் கொடுக்கத் துணிந்த பெண்களை உடனடியாகத் தங்களுக்கு இணையாக மதிக்க விட்டிருப் பார்களா என்ன? ஆணாதிக்க உணர்வின் உச்சங்களின் எச்சங்களுள் ஒன்றுதான் இந்த மதிப்புப் பன்மை மறுப்பும். எனவே, ஆசிரியர் என்பது ஆண் ஆசிரியரை மட்டுமல்ல இருபால் ஆசிரியரையும் குறிக்கும் பொதுச்சொல் என்பதை அறிந்து இருபால் ஆசிரியரையும் மதிப்புப் பன்மையைப் பயன்படுத்திக் குறிப்பிடுவதே பெண்ணுக்கும் பிழையில்லா நம் தமிழுக்கும் சிறப்பு!

- த. ஜான்சி பால்ராஜ், திருநெல்வேலி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in