கிராமத்து அத்தியாயம் - 10: வடை சுட்ட கூலி

கிராமத்து அத்தியாயம் - 10: வடை சுட்ட கூலி
Updated on
2 min read

சிவகாமிக்கு சின்ன வயதிலிருந்தே வடை திங்கணுமின்னு ரொம்ப ஆசை. ஆனால் அவர் பிறந்த வீட்டிலும் சரி, வாக்கப்பட்டு வந்த புருசன் வீட்டிலும் சரி. தோசைக்குப் போடுவதற்கே உளுந்துக்குக் கிராக்கியாக இருந்தது. ஒவ்வொரு சமயத்துக்குத் தோசைக்கு வெண்டைக்காயைப் போட்டு ஆட்டுவார்கள். அந்தக் காலத்தில் உளுந்தம்பருப்பு இல்லாதவர்கள் ஒரு உரல் வெண்டைக் காயைப் போட்டு மையாக ஆட்டி மாவுடன் கலந்து தோசை சுடுவார்கள். இப்போது சிவகாமி காட்டிலும் களத்திலும் நெத்து பெறக்கி கால்படி உளுந்து சேர்த்திருந்தாள். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் உறிக்கலயத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. விறகும் அடுப்பும் தயாராக இருந்தன. ஆனால் அவளுக்கு வடையை எப்படிச் சுட வேண்டுமென்றே தெரியவில்லை.

புருசனும் மாமியாளும் ஒரு துட்டிக்காகப் பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தார்கள். இருட்டிய பின்தான் வருவார்கள். அதனால்தான் சிவகாமி வடை சுடத் துணிந்து மாவெல்லாம் ஆட்டிவைத்தாள். அந்த ஊரில் முத்தத்து வெயில் முகத்தில் படாத நிறைமதி இருந்தாள். அவள் கொஞ்சம் வசதியானவளும்கூட. டவுன் பக்கமிருந்து இந்தப் பக்கம் வாக்கப்பட்டு வந்திருந்தாள். சீட்டு பிடிக்கிறேன், சீலை மலிவா வாங்கி எல்லாருக்கும் கொடுக்கிறேன் என்று நிறைய வேலைகள் செய்வாள். அந்தக் கிராமத்துப் பெண்களுக்கு படிப்பு என்பதே கிடையாது. ‘அ’னா, ‘ஆ’வன்னா என்று சொன்னால் அது எந்தக் கடையில விக்கும் என்று கேட்பார்கள். அதனால் எதற்கெடுத்தாலும் நிறமதி அக்கா, நிறமதி அக்கா என்று ஓடுவார்கள்.

நிறைமதியின் சாமர்த்தியம்

சிவகாமிக்கு அவள் ஞாபகம்தான் வந்தது. ஊர்ப் பெண்கள் எல்லாம் காட்டுக்குப் போய்விட்டார்கள் என்று தெரிந்துகொண்ட சிவகாமி ஒளிவு மறைவாக நடந்து நிறைமதி வீட்டுக்குப் போனாள். மஞ்சள் பூசி குளித்து, சீவி சிங்காரித்துக் கொண்டு இருந்த நிறைமதியிடம், ‘எக்கா எனக்கு வடை சுட்டுத் திங்கணு மின்னு ஆசை. உளுந்தை ஆட்டி வச்சிட்டேன். ஆனா எப்படி வடை சுடணுமின்னுதேங்கா தெரியல’ என்றாள். உடனே, ‘வடை சுடத் தெரியாத நீயெல்லாம் ஒரு பொம்பளையா? எங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சிச்சி அப்பவே வீட்டை விட்டு வெளியேத்திருவாரு” என்றாள். சிவகாமியும், ‘எனக்கு வடை சுடத் தெரியாதது, உங்க வீட்டுக்காரருக்கு எதுக்குக்கா தெரியணும்? நீ ஒரு தடவ வந்து சுட்டுக் காமிச்ச பிறவு நானே சுட்டுக்கிடுவேன்’ என்றாள். நிறைமதியும் தனக்கு என்னென்ன திறமைகளெல்லாம் இருக்கிறதென்று சொல்லி முடித்து ஒருவழியாக வடை சுட வந்தாள்.

வடையெல்லாம் சுட்டு முடித்தபின் சுட்ட வடையைப் பாதியாகப் பகிர்ந்தாள் நிறைமதி. சிவகாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது, ‘எதுக்குக்கா வடையப் பாதியா பவுந்திருக்கே’ என்றதும், ‘எப்பவும் வடை புள்ளையாருக்கு உடையது. அதனால அவருக்குப் பாதியைக் கொடுத்துட்டு, மீதியத்தேன் நம்ம பவுந்து திங்கணும். இல்லைன்னா புள்ளையாரு கோவிச்சிக்கிடுவாரு. அப்படி கோவிச்சிக்கிட்டா நம்ம வீட்டுல விசேஷமாகவே இருக்காது’ என்ற நிறைமதி, பிள்ளையாருக்கான வடையை பூஜை செய்யப் போகிறேன் என்று எடுத்துக்கொண்டு பாதி வடையோடு வடை சுட்ட கூலிக்காக நாலு வடை எடுத்துக்கொள்ள, வடையை எப்போ திம்போம் என்று இருந்த சிவகாமிக்கு ஆங்காரம் உச்சந்தலையைத் தாக்கியது. வடை சுட்ட கொதி எண்ணெய்யைக் கொண்டு வந்து, ‘மருவாதையா வடை சுட்டுக் கொடுத்ததுக்கு ரெண்டு வடைய மட்டும் எடுத்துட்டுப் போறீயா இல்லை இந்தக் கொதி எண்ணெய்யை மேல ஊத்தட்டுமா? என்று கேட்டாள். நம்மதேன் கெட்டிக்காரின்னு நினைச்சோம். இவ நம்மளைவிட கெட்டிக்காரியா இருக்காளேன்னு ஓட்டம் பிடித்தாள் நிறைமதி.

(தொடரும்)

கட்டுரையாளர் எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in